You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பதி லட்டில் கலப்பட நெய் சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது - என்ன நடக்கிறது?
- எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
- பதவி, பிபிசி நிருபர்
திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கைது செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள போலேபாபா ஆர்கானிக் பால் நிறுவனத்தின் இயக்குநர்கள் விபின் ஜெயின் (45) மற்றும் போமில் ஜெயின் (47), திருப்பதி மாவட்டம் பெல்லக்கூர் மண்டலம், பெனுமகாவில் உள்ள வைஷ்ணவி பால் பண்ணை சிறப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா வினயகாந்த் சாவ்தா (47) மற்றும் தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன் (69) ஆகியோரை கைது செய்துள்ளது.
கலப்படம் செய்யப்பட்ட காலகட்டத்தில், விபின் ஜெயின் மற்றும் போமில் ஜெயின் ஆகியோர் வைஷ்ணவி பால் பண்ணையின் இயக்குநர்களாக இருந்ததாக ரிமாண்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் சொல்வது என்ன?
- திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு - ஆய்வக முடிவு பற்றி தேவஸ்தானம் கூறுவது என்ன?
- திருப்பதி லட்டு சர்ச்சை: தேவஸ்தானம் இந்த 5 அடிப்படை கேள்விகளுக்கு பதில் தருமா?
- திருப்பதி லட்டு சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நெய்யில்தான் கலப்படமா? முழு விவரம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 பேரும் கைது செய்யப்பட்டு, திருப்பதியின் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இரவு 8.20 மணிக்கு, ரிமாண்ட் அறிக்கை தயாரிக்கப்பட்டு, நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலத்த பாதுகாப்பின் கீழ் ருயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, இரவு 9.10 மணிக்கு 2வது கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரவீன் குமாரின் இல்லத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட கூடுதல் எஸ்பி வெங்கட் ராவ் அவர்களை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.
ரிமாண்ட் அறிக்கையை ஆராய்ந்த பிறகு, நான்கு பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 4 பேரும் திருப்பதி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சர்ச்சையின் பின்னணி என்ன?
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSRCP) ஆட்சியில் இருந்தபோது, திருப்பதி லட்டு தயாரிப்பில் சுத்தமான நெய்க்குப் பதிலாக 'விலங்கு கொழுப்பு' கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய போது, இந்த சர்ச்சை தொடங்கியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) நிர்வாக அதிகாரியாக ஷியாமளா ராவ், ஜூன் 16, 2024 அன்று பொறுப்பேற்ற பிறகு, 'உள்ளூர் ஊழியர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்ததாகவும், நெய்யின் தரம் நன்றாக இல்லை என்று அவர்கள் தன்னிடம் கூறியதாகவும்' தெரிவித்தார்.
மறுபுறம், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம், தான் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கியதாகவும், அந்த நெய்யில் கலப்படம் இல்லை என்றும் கூறியது.
திருமலையில் பிரசாதத்திற்கு நெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வனஸ்பதி மட்டுமே கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று முன்னர் கூறியிருந்த செயல் அலுவலர் ஷியாமளா ராவ், பிறகு நெய்யில் விலங்கு கொழுப்பும் கலக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முதல்வர் சந்திரபாபு கூறியது என்ன?
செப்டம்பர் 18, 2024 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.எல்.ஏக்களுடனான சந்திப்பில் பேசிய சந்திரபாபு, ஆந்திராவின் முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சித்தார்.
திருப்பதி லட்டு தயாரிப்பில் முந்தைய அரசு தர நிர்ணயத்தை பின்பற்றவில்லை என்று அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"திருப்பதி லட்டு மோசமான தரத்தில் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் பலமுறை சொல்லிவிட்டோம். ஆனால், பிரசாத விநியோகம் கூட தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. கடவுளுக்குச் செலுத்தப்பட்ட பிரசாதத்தை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டனர்.
அவர்கள் தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், நெய்க்குப் பதிலாக விலங்கு கொழுப்பையும் பயன்படுத்தினர். நாங்கள் மீண்டும் தரத்தை மேம்படுத்துவோம். வெங்கடேஸ்வர சுவாமியின் புனிதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது" என்று அவர் கூறினார்.
நெய்யின் தரம் குறித்து தேவஸ்தான நிர்வாகம் கூறியது என்ன?
திருப்பதி லட்டு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் தொடர்பான சர்ச்சை குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ், முன்பு சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அவர் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் சந்திரபாபுவின் உத்தரவின்படி நெய்யின் தரம் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகக் கூறினார்.
"லட்டின் தரம் குறைந்துவிட்டது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். லட்டில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து புகார்கள் வருகின்றன, விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து ஆராயப்பட வேண்டும்" என்று ஷியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.
ஜூன் 16, 2024 அன்று, தேவஸ்தானத்தின் செயல் அலுவலராக தான் பொறுப்பேற்ற பிறகு, உள்ளூர் ஊழியர்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்ததாகவும், நெய்யின் தரம் நன்றாக இல்லை என்று அவர்கள் கூறியதாகவும் கூறினார்.
லட்டுவின் தரம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நெய்யின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்றும், சுத்தமான பசு நெய்யைப் பயன்படுத்தினால் மட்டுமே லட்டின் தரம் நன்றாக இருக்கும் என்றும், இல்லையெனில் திருமலையின் புனிதத்தன்மை பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளதாக நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் கூறினார்.
"கலப்படத்தை கண்டுபிடிக்கும் ஆய்வகம் அமைப்பதற்கான செலவு ரூ.75 லட்சம் மட்டுமே. ஆய்வகத்தை ஏன் அமைக்க முடியாது என்று எனக்குத் தெரியவில்லை. உள்ளேயே ஆய்வகம் இல்லாததாலும், வெளிப்புற தர சோதனை இல்லாததாலும், சப்ளையர்கள் தரமற்ற நெய்யை வழங்கியுள்ளனர்" என்று ஷியாமளா ராவ் குற்றம்சாட்டினார்.
"ஒரு கிலோ நெய் ரூ. 320 முதல் ரூ. 411 வரை வழங்கப்பட்டது. இவ்வளவு குறைந்த விலையில் நெய்யை வழங்குவது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்த விலையில் நெய் வாங்குவதால் அதன் தரம் குறைந்துவிட்டது. நான் நிர்வாக அதிகாரி ஆன பிறகு, 'நெய்யின் தரம் குறைந்தால், இனி நீங்கள் திருப்பதிக்கு நெய் விநியோகிக்க முடியாது' என்று விநியோகஸ்தர்களை எச்சரித்தேன். எனவே அந்த நிறுவனங்கள் தரமான நெய்யை வழங்கத் தொடங்கின" என்று நிர்வாக அதிகாரி கூறினார்.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தை சோதிக்க ஒரு ஆய்வகத்தை அமைக்க என்டிடிபி (NDDB) முன்வந்துள்ளதாக அவர் கூறினார். ரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் கூறுவது என்ன?
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனம், 2024-ஆம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய்யை வழங்கியதாகவும், அந்த நெய்யில் கலப்படம் இல்லை என்றும் முன்னர் கூறியிருந்தது.
ஏ.ஆர்.டெய்ரியின் உணவு தர சோதனைத் துறை பொறுப்பாளர் லெனி, "உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அக்மார்க் (Agmark) அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்ததாகவும், எந்த பிரச்னையும் இல்லை என்பதைக் கண்டறிந்ததாகவும்" கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)