நெல்லை பொறியியல் பட்டதாரி ஜமைக்காவில் சுட்டுக்கொலை - என்ன நடந்தது? உடலை கொண்டு வருவது எப்போது?

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, அங்கு வேலை செய்துவந்த தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞரை சுட்டு கொன்றுவிட்டு தப்பினார். இந்த கொள்ளை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

விக்னேஷின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்து வர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், உடலை தாயகம் எடுத்து வருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரியான விக்னேஷ் உயிரிழந்தது எப்படி? சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது? உடன் பணியாற்றியவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்திய தூதரகம் கூறுவது என்ன?

ஜமைக்காவில் நடந்தது என்ன?

ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் (Turks and Caicos Islands) உள்ள லீ ஹை ரோடு என்ற பகுதியில் நெல்லையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான ஜிகே ஃபுட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்ததாக கூறுகிறார் அதன் மேலாளரான சுபாஷ் அமிர்தராஜ். இவர் தமிழ்நாட்டின் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர்.

அவரது கூற்றுப்படி, "கடந்த டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு திடீரென சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி முனையில் காசாளர் சுந்தரபாண்டியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவர் சுந்தரபாண்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு கடைக்குள் இருந்து ஓடி வந்த விக்னேஷை அந்த நபர் கழுத்தில் சுட்டதில் விக்னேஷ் உயிரிழந்தார். காயமடைந்த சுந்தரபாண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்."

விக்னேஷ் உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் சுபாஷ் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார். இதனால் செய்வது அறியாமல் தவித்து போன விக்னேஷின் குடும்பத்தினர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில், விக்னேஷின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அந்த தீவில் இவ்வளவு ஆபத்து இருக்கும் என தெரியாது'

'அப்பா வாங்கிய கடனை அடைப்பதற்காக தான் பொறியியல் படிப்பை முடித்து விட்டு வெளிநாட்டில் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு தனது சகோதரர் சென்றதாகவும், தற்போது அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர முடியாமல் தவிப்பதாகவும்' கூறுகிறார் விக்னேஷின் சகோதரி ருக்மணி.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உடல்நிலை குறைவால் அப்பா மறைந்துவிட்டார். விக்னேஷ், நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்."

"அப்பா வாங்கிய கடன் மற்றும் கல்விக் கடன் என 5 லட்சம் கடன் இருந்ததால், வெளிநாட்டில் வேலை செய்து கடனை அடைத்து விட வேண்டும் என நண்பர் மூலமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு விக்னேஷ் வேலைக்குச் சென்றார்." என்று ருக்மணி கூறினார்.

வரும் ஏப்ரல் மாதத்துடன் விசா முடிவடைவதால் ஊருக்கு வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்திருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நடந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

"டிசம்பர் 17ஆம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சூப்பர் மார்க்கெட் மேலாளர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விக்னேஷின் உடலை சொந்த ஊர் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 18ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தோம்."

"என் தம்பியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக அரசு தெரிவித்துள்ளது. என் தம்பி வேலை செய்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்." என்றும் ருக்மணி கூறினார்.

சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது?

பண்டிகை காலங்களில் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் என்கிறார் துப்பாக்கிச் சூட்டின் போது சம்பவ இடத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் சுபாஷ் அமிர்தராஜ்.

பிபிசி தமிழிடம் பேசியவர், "நான் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன். கடந்த 10 ஆண்டுகளாக டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் வசித்து வருகிறேன். இது ஒரு குட்டித் தீவு, இங்கு சுமார் 200 இந்தியர்கள் உள்ளனர். அதில் 90 பேர் தமிழர்கள். இத்தீவில் ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆங்காங்கே துப்பாக்கியை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும்."

"துப்பாக்கியை காட்டி மிரட்டும் மர்ம நபர்களிடம் பணத்தை கொடுத்து விட்டால் வழக்கமாக தாக்குதல்கள் நடக்காது. பணத்தை பறித்துக் கொண்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றது எனக்கு தெரிந்த இதுவே முதல் முறை." என்று கூறுகிறார்.

இதனால் இத்தீவில் பெரும்பாலான மக்கள் கையில் அதிக பணத்தை வைத்துக் கொள்வதில்லை என்றும், கடைகளில் பெரிய தொகை பணம் சேர்ந்து விட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம் என்றும் அவர் கூறுகிறார்.

டிசம்பர் 17ஆம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விவரித்தார் சுபாஷ்.

"அன்று காலை திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், பணம் செலுத்தும் இடத்தில் அமர்ந்திருந்த காசாளர் சுந்தரபாண்டியிடம் பணம் கேட்டு மிரட்டினார். துப்பாக்கியை பார்த்து பயந்த சுந்தரபாண்டி தன்னிடம் இருந்த பணத்தை அந்த மர்ம நபரிடம் கொடுத்து விட்டார். ஆனால் மர்ம நபர் சுந்தரபாண்டியை நோக்கி 6 முறை துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரபாண்டி மயங்கி விழுந்தார்."

"சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்த குடோனில் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த விக்னேஷ் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பணம் செலுத்தும் இடத்தை நோக்கி ஓடி வந்தார். அப்போது கடைக்குள் மறைந்திருந்த அந்த நபர், விக்னேஷ் தன்னை தாக்க வருவதாக நினைத்து அவரை கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்." என்று கூறுகிறார்.

இவை அனைத்தும் சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என்றும், சுந்தரபாண்டி மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சுபாஷ் அமிர்தராஜ் கூறினார்.

"சுந்தரபாண்டிக்கு அறுவை சிகிச்சை செய்து ஆறு தோட்டாக்கள் வெளியே எடுக்கப்பட்டன. சுந்தரபாண்டி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் விக்னேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் உடனடியாக உடற்கூறாய்வு செய்ய போதிய வசதி இல்லாததால், டிசம்பர் 30ஆம் தேதி விக்னேஷ் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது." என்று கூறினார் சுபாஷ்.

போலீசார் அந்த மர்ம நபரை இன்னும் தேடி வருகின்றனர் என்றும், அங்குள்ள இந்திய தூதரகம் விக்னேஷ் உயிரிழந்ததற்கான இறப்பு சான்று மற்றும் பாஸ்போர்ட்டை ரத்து செய்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் கூறுகிறார் சுபாஷ் அமிர்தராஜ். எனவே விரைவில் விக்னேஷ் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

"துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்தே இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதால் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், காவல்துறை அடிக்கடி ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திற்கு வைக்கிறோம்" என சுபாஷ் அமிர்தராஜ் தெரிவித்தார்.

இந்திய தூதரகம் கூறியது என்ன?

இதுகுறித்து ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கோபாலன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "துப்பாக்கி சூடு குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை (பிப்.05) விக்னேஷ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தோம். விமானம் மூலம் இந்த வாரம் உடலைக் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகிறது." என்று கூறினார்.

பண்டிகை காலங்களில் இந்த தீவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட கோபாலன், ஜமைக்கா அரசாங்கம் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

"மக்களும் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய தூதரக அலுவலகம் சார்பில் வாட்ஸ்அப் குழு தொடங்கி அதன் வழியாக மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அந்த குழுவில் மக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவம் இனி நடக்க கூடாது" என்றார் இந்திய தூதரக இரண்டாம் நிலை செயலாளர் கோபாலன்.

தமிழக அரசு கூறுவது என்ன?

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விக்னேஷ் உடலை தாயகம் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் நடந்த கொள்ளை முயற்சியில், கொள்ளையரால் சுடப்பட்டு உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழ்நாடு கொண்டு வர வேண்டும் என்ற அவரது குடும்பத்தினர் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜமைக்கா நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனம் தொடர்பு கொள்ளப்பட்டு, விக்னேஷ் உடலை தமிழ்நாடு கொண்டுவர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கான இழப்பீட்டை அவர் வேலை செய்த நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)