அமெரிக்கா: USAID ஊழியர்களை விடுப்பில் அனுப்ப திட்டமிட்ட டிரம்ப் - நீதிமன்ற உத்தரவு என்ன?

    • எழுதியவர், க்றிஸ்டல் ஹாயேஸ்
    • பதவி, பிபிசி செய்திகள்

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையில் (US Agency for International Development) பணியாற்றும் 2200 ஊழியர்களை விடுப்பில் அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.

அந்த உத்தரவு வெள்ளி நள்ளிரவில் இருந்து அமலுக்கு வர இருந்த நிலையில் நீதிபதி கார்ல் நிக்கோலஸ் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு எதிராக ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யு.எஸ்.ஏ.ஐ.டி. என்று அழைக்கப்படும் இந்த முகமை பல்வேறு உலக நாடுகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிக்கான திட்டங்களில் பணியாற்றும் அமெரிக்க முகமை ஆகும். இந்த முகமையில் 10 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். இந்த 2200 ஊழியர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு அவர்களின் வேலை நிலையாக உள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.

நிதியைக் குறைக்க நடவடிக்கை

வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள அந்த முகமையின் தலைமை அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த முகமையின் பெயர் பலகை அகற்றப்பட்டு, அலுவலகம் மூடப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்கின் இணைந்து உருவாக்கிய திட்டத்தின் கீழ் 611 ஊழியர்கள் தொடர்ந்து அந்த முகமையில் பணியாற்றுவார்கள்.

டிரம்ப் இந்த முகமை, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு செயல்படும் அளவுக்கு மதிப்புமிக்கதல்ல என விமர்சனம் செய்திருந்தார். மத்திய முகமைகளுக்காக அமெரிக்க நிர்வாகம் செலவிடும் நிதியைக் குறைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அதில் இந்த யு.எஸ்.ஏ.ஐ.டி. முகமையும் அடங்கும்.

அரசு செயல்பாட்டுகளை மாற்றி அமைப்பது என்பது குடியரசுக் கட்சியின் பிரசாரங்களில் ஒன்றாக இருந்தது. டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 'அரசு செயல்திறன்' என்ற ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது.

மத்திய முகமைகளுக்கு வழங்கப்படும் நிதியை குறைக்க உருவாக்கப்பட்ட ஆலோசனை குழு ஈலோன் மஸ்கின் தலைமையில் இயங்கி வருகிறது.

நீதித்துறையை நாடிய ஊழியர் சங்கங்கள்

அமெரிக்க வெளியுறவு சேவை சங்கம் (American Foreign Service Association) மற்றும் அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு (American Federation of Government Employee) என யு.எஸ்.ஏ.ஐ.டி. முகமையின் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சங்கங்கள் அவசர மனுவை தாக்கல் செய்தன. அதனை விசாரித்த நீதிபதி நிக்கோலஸ் தற்போது டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

டிரம்பால் அவரது முதல் ஆட்சிகாலத்தில் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதி நிக்கோலஸ், இந்த விவகாரம் தொடர்பான எழுத்துப்பூர்வமான உத்தரவு விரைவில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

விசாரணையின் போது, பணியில் இருந்து விடுப்பில் செல்வதற்கு எதிரான மனுவை மட்டுமே விசாரித்தார். யு.எஸ்.ஏ.ஐ.டி அலுவலகங்களை திறப்பது மற்றும் நிதியை தடையில்லாமல் வழங்குவது தொடர்பாக வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பாக அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அந்த முகமையை கலைக்க முயற்சிப்பது, அதிபர் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி சட்டங்களை அவமதிக்கும் செயல் என்று ஊழியர் சங்கங்கள் சார்பில் வாதிடப்பட்டது.

அந்த முகமையை கலைப்பதற்காக எடுக்கப்பட்ட எந்த முடிவும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அந்த முகமையை கலைப்பதற்கான அதிகாரம் கூட்டாட்சி சட்டங்களின் படி நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்றும் வாதிடப்பட்டது.

வியாழக்கிழமை அன்று டிரம்ப் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய நோட்டீஸில் அந்த முகமையில் இடம் பெற்றுள்ள 611 முக்கிய ஊழியர்களை மட்டும் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்தது. மேலும் 500 ஊழியர்களை ஏற்கனவே விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதித்துறை அதிகாரி ப்ரெட் ஷுமாட் நீபதியிடம் பேசும் போது, யு.எஸ்.ஏ.ஐ.டியில் ஊழல் நடப்பதாக டிரம்ப் நம்புகிறார் என்று கூறினார்.

ஜனவரி 20-ஆம் தேதி அன்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பல செயல் உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். அதில் முக்கியமான ஒன்று வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது. முறையாக இந்த நிதி சரிபார்க்கப்பட்டு, அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்ளையின் கீழ் சேர்க்கப்படும் வரை இத்தகைய நிதிகள் நிறுத்தப்படும் என்றது அந்த செயல் உத்தரவு.

அபாயகரமான செய்தியை உலகுக்கு அளிக்கிறது அமெரிக்கா

இந்த உத்தரவு காரணமாக யு.எஸ்.ஏ.ஐ.டி.யின் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் உலக நாடுகளில் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில், "யு.எஸ்.ஏ.ஐ.டி. முகமை தீவிர இடதுசாரிகளை வழிநடத்துகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஊழல் இங்கே நிகழ்கிறது. அதனை உடனே மூடுங்கள்,"என்று டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

உலக நாடுகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா மிகப்பெரிய ஒற்றை நாடாக திகழ்கிறது. அரசாங்க தரவுகளின் படி அமெரிக்கா 2023-ஆம் ஆண்டில் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களை சர்வதேச அளவிலான உதவிகளுக்கு வழங்கியுள்ளது.

இது அமெரிக்காவின் பல்வேறு துறைகள் மற்றும் முகமைகள் மூலமாக நடத்தப்படுகிறது. ஆனாலும் யு.எஸ்.ஏ.ஐ.டி. முகமை இந்த நிதியில் பாதிக்கும் மேலான நிதியை, அதாவது 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை கையாண்டது. இது அமெரிக்க அரசின் ஆண்டு செலவீனமான 6.75 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களில் வெறும் 0.6% மட்டுமே.

யு.எஸ்.ஏ.ஐ.டியின் முன்னாள் தலைவர்கள் இம்முடிவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். காய்ல் ஸ்மித் என்ற முன்னாள் தலைவர் இது குறித்து பிபிசியிடம் பேசிய போது, மனிதாபிமான உதவிகள் என்று வரும் போது அமெரிக்கா மிகவும் விரைந்து செயல்படும் ஒரு நாடு என்று குறிப்பிட்டார்.

"இதனை நீங்கள் நிறுத்தும் போது நீங்கள் ஒரு அபாயகரமான செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறீர்கள்," என்று ஸ்மித் கூறினார்.

''மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் எங்களுக்கு அதைப்பற்றி எந்த விதமான கவலையும் இல்லை. அமெரிக்கா ஒரு நம்பத்தகுந்த கூட்டாளி இல்லை'' என்ற சமிக்ஞையை அனுப்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)