You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
செங்கல்பட்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) இரண்டு பேரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான தயாளன் என்ற நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தனியாகப் பயணிக்கும் பெண்களைப் பாதுகாப்பதற்குப் பல்வேறு திட்டங்களை காவல்துறை செயல்படுத்தி வருவதாகக் கூறுகிறார், காவல் துணை ஆணையர் வனிதா.
செங்கல்பட்டில் இளம்பெண் கடத்தல் சம்பவத்தில் என்ன நடந்தது? தனியாகப் பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?
- சிவகங்கை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், 7 பேர் கைது; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
- கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?
- விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்; 'வருங்கால சந்ததிக்கு ஆபத்து' - எச்சரிக்கும் ஆர்வலர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 3) இரவு சுமார் 10 மணியளவில் பேருந்து முனையத்தின் எதிர்ப்புற சாலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.
சேலத்தில் இருந்து வந்த அவர் மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாக ஊடங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் விசாரித்துள்ளார். பிறகு மாதவரத்தில் உள்ள அவரது தோழியின் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளார்.
காவல் உதவி ஆணையர் கூறுவது என்ன?
ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தனது ஆட்டோவில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், "ஓட்டுநர் தனது ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை ஏற்றியுள்ளார். அப்போது இன்னொரு நபரும் அதில் இருந்துள்ளார். அங்கிருந்து வண்டலூர் சர்வீஸ் சாலையில் வாகனத்தை மெதுவாக இயக்கியபடியே இருவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் ஆபத்தில் இருப்பதாக மாதவரத்தில் உள்ள தனது தோழியின் கணவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கவே, ஆட்டோவை போலீஸ் ரோந்து வாகனம் தேடத் தொடங்கியுள்ளது. அதற்குள் மதுரவாயல் அருகில் உள்ள மாதா கோவில் தெருவில் அந்தப் பெண்ணை ஆட்டோ ஓட்டுநரும் உடன் வந்த நபரும் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்த வழியாக வந்த வேறொரு ஆட்டோ ஓட்டுநரிடம் அந்தப் பெண் உதவி கேட்டுள்ளார். தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் கூறியுள்ளார். அதற்குள் ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் அவரை மீட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இளம் பெண்ணைக் கடத்தியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கென நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச் செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் தயாளன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வழக்கில் மூன்று பேருக்குத் தொடர்புள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் மறுக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரண்டு பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் இருவர்தான் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளன. புலன் விசாரணை அடிப்படையில் அவர்களைக் கைது செய்துள்ளோம்" என்றார்.
திங்கள் கிழமை இரவு நடந்த சம்பவத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினசரி பல்லாயிரம் பேர் கூடும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடந்த கடத்தல் சம்பவம், பேசுபொருளாக மாறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, இரவு நேரத்தில் பெண்கள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
'பத்து நிமிடத்தில் உதவி' - துணை ஆணையர் வனிதா
"இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள், தங்களுக்கு ஆபத்து உள்ளதாக உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?" என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் வனிதாவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"அனைவருக்கும் நன்கு தெரிந்த அவசர உதவி எண் 100க்கு போன் செய்து உதவி கேட்கலாம். இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அதிகபட்சம் பத்து நிமிடங்களில் எங்கு இருந்தாலும் காவல் ரோந்து வாகனம் வந்துவிடும்" எனக் கூறினார்.
"அதோடு காவல் உதவி செயலி (KaavalUthavi App) உள்ளது. ஸ்மார்ட் ஃபோனில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் மிக உதவியாக இருக்கும்."
"அவசரக் காலங்களில் செயலியின் உள்ளே சென்று அசைத்தாலோ, தொட்டாலோ எந்த இடத்தில் இருக்கிறார் என்று இருப்பிட விவரங்களுடன் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்துவிடும்" எனக் கூறுகிறார் துணை ஆணையர் வனிதா.
காவல் நிலைய இருப்பிடங்கள், அவசர உதவி எண்கள், நிதி மோசடிப் புகார் உள்பட 60 வகையான சிறப்பம்சங்கள் இந்தச் செயலியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'ட்ராக் மீ(Track Me)' - என்ன பலன்?
"தனக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனாலும் பயப்படுவது போல ஒரு பெண் உணர்ந்தால் காவல் உதவி செயலிக்குள் சென்று 'ட்ராக் மீ' எனக் குறிப்பிட்டால் போதும். தன்னை ஓர் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் பின்தொடருமாறு அவர் கூறலாம். அவர் சென்று சேரும் இடம் வந்த பிறகு 'ட்ராக் மீ' ஆப்ஷனை அணைத்துவிடலாம்" எனவும் கூறுகிறார்.
"ஆனால் இந்த வசதியைப் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவதில்லை" எனக் கூறும் துணை ஆணையர் வனிதா, "தன்னை ஓர் அரசு இயந்திரம் பின்தொடர்வதை பெண்கள் பலரும் விரும்புவதில்லை. கட்டுப்பாட்டு அறையில் பெருமளவு பெண் காவலர்கள்தான் உள்ளனர். ஆண் காவலர்கள் குறைவுதான். அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.
டிஜிபி அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தச் செயலி இயங்குவதாகக் கூறும் வனிதா, சென்னை நகரில் மாதத்துக்கு சில ஆயிரம் பெண்கள் மட்டுமே இதை பதிவிறக்கம் செய்வதாகவும், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.
காவல் உதவி செயலியைத் தவிர்த்து வேறு சில அவசர உதவி எண்கள் தொடர்பான விவரங்களையும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து வசதியில்லாத இடத்தில் ஒரு பெண் இருக்கிறார் என்றால் அவர் 1091 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அதன்மூலம், அவர் குறித்த தகவல் எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும்.
அவருக்கு அருகில் எந்த ரோந்து வாகனம் உள்ளதோ அது உடனே சென்றுவிடும். அருகிலுள்ள போக்குவரத்து மையத்திற்கு அவரை அழைத்துச் சென்று பாதுகாப்பாக ஏற்றிவிடுவார்கள்" எனக் கூறினார்.
காவல் உதவி செயலி மற்றும் அவசர உதவி எண் 100 ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறிய துணை ஆணையர் வனிதா, "சைபர் கிரைம் தொடர்பான தேசிய அவசர உதவி எண் 1930 உள்ளது. இதைத் தொடர்பு கொண்டால் எந்த காவல் எல்லைக்குள் வருகிறது என்பதை அறிந்து உதவி செய்வார்கள்" என்றார்.
"இதுதவிர, சமூகநலத் துறையில் 181, 1098 என இரண்டு எண்கள் உள்ளன. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தால் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்" என்கிறார் வனிதா.
"இந்த எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். அவர்களுக்கு உதவி செய்வதற்கு காவல்துறை வந்துவிடும். 181 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால் எந்தத் துறையின் உதவி தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து கவுன்சலிங் கொடுப்பார்கள்" எனக் கூறுகிறார் அவர்.
இதுதவிர, சென்னையில் ஆதரவற்றோருக்கு உதவி செய்வதற்காக 'காவல் கரங்கள்' என்ற திட்டம் அமலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசுப் பேருந்துகளில் அவசரக்கால பட்டன்
இவற்றோடு, பெண்களின் பாதுகாப்புக்காக வருங்காலங்களில் அரசுப் பேருந்துகளில் அவசரக்கால பொத்தான்களைப் (Panic Button) பொருத்தும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் இதற்கென ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட துணை ஆணையர் வனிதா, "எந்தப் பேருந்தில் இருந்து சத்தம் வருகிறதோ அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.
தற்போது இந்தத் திட்டம் தொடக்க நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)