You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்
- எழுதியவர், பிபிசி நியூஸ், முண்டோ
- பதவி, செய்திக்குழு
கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாள் காலையிலும், ருடிகர் கோச் ஒரு வித்தியாசமான காட்சியின் முன் கண் விழிக்கிறார். கடலுக்கடியில் சுமார் 11 மீட்டர் ஆழத்தில், மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் தனது ஜன்னல்களைச் சுற்றி நீந்துவதை பார்த்து தான் அவரது நாள் விடிகிறது.
கடந்த 2023ம் ஆண்டில், 100 நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடுரி என்பவர் செய்த சாதனையை கோச் தற்போது முறியடித்துள்ளார். 120 நாட்கள் கோச் நீருக்கடியில் வாழ்ந்திருக்கிறார்.
59 வயதான விண்வெளிப் பொறியாளரான கோச், கடலுக்கடியில் நீண்டநாள் வாழ்ந்தவரின் சாதனையை மட்டும் முறியடிக்கவில்லை. மாறாக, "கடலுக்கடியில் வாழ்வது சாத்தியம்" என்பதும், அது மனித குலம் வாழ்வதற்கு மற்றொரு இடமாக இருக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளார்.
பனாமாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள புவேர்ட்டோ லிண்டோவுக்கு அருகில், தானே வடிவமைத்த ஒரு நீர்மூழ்கி அமைப்பில், கோச் தனது சாதனையை நிகழ்த்திக் காட்டினார். இது ஏற்கனவே பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாக மாறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.
நீருக்கடியில் வாழ்வதை முடித்துக்கொள்வதற்கு முன்பு பிபிசி செய்தியிடம், தன்னுடைய வசிப்பிடத்தில் இருந்து பேசிய அவர், "இது ஒரு அழகான, தனித்துவமான யோசனை" என்று தெரிவித்தார்.
"எனது மகளுக்கு கூடுதல் படுக்கை தேவைப்பட்டபோது, நான் தண்ணீருக்கு அடியில் ஒரு படுக்கையை அமைத்தேன். நாங்கள் அங்கேயே நிறைய நேரம் செலவழித்தோம், அப்போதுதான் டிடுரியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது." என்கிறார் கோச்.
30 சதுர மீட்டர் வாழ்விடம்
நீருக்கடியில் உள்ள கோச்சின் "வீடு" சுமார் 30 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு செங்குத்து குழாய் மூலம் மேற்பரப்பில் உள்ள ஒரு மிதக்கும் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த வீடு. கோச்சின் சில பொருட்கள் மற்றும் வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க உதவும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை அணுகுவதற்கு இந்த குழாய் உதவியாக உள்ளது.
அவர்களின் வித்தியாசமான வீட்டில், ஒரு படுக்கை, இணையம், ஒரு கணினி மற்றும் உடற்பயிற்சிக்கு உதவும் ஒரு சைக்கிள் இருந்தன. இருப்பினும், குளிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பது, ஆரோக்கியதைப் பேணுவது, காற்றின் தரம் போன்று பல தடைகள் இருந்தன.
"என்னிடம் CO2 சென்சார்கள் போன்ற பல்வேறு சென்சார்கள் உள்ளன. நான் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை அளவிடும் கருவிகளையும் கொண்டிருக்கின்றேன், மேலும் எனது உடலின் அடிப்படை ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பதிவு செய்யும் கடிகாரத்தையும் நான் அணிந்திருக்கிறேன்," என்று பிபிசி செய்தியிடம் கூறிய கோச், வீடு போன்ற அந்த அமைப்பு முழுவதும் காணப்பட்ட சாதனங்களை சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு, தனது சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் நீண்ட காலம் தங்கியிருப்பதன் விளைவுகளை அறிய ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கான தரவுகளையும் உருவாக்கியுள்ளார், கோச்.
மீன்களும் பவளப்பாறைகளும்
அந்த வீட்டைச் சுற்றியுள்ள ஆறு ஜன்னல்கள் வழியாக, வியப்பில் ஆழ்த்தும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டார் கோச். அவர் ஒவ்வொரு நாளும் குழுக்களாக நீந்தும் மீன்களைக் கவனித்ததாகவும், அவரது வசிப்பிடத்தைச் சுற்றி வாழும் கடல்வாழ் உயிரினங்களின் தொடர்ச்சியான ஒலிகளைக் கேட்டதாகவும் குறிப்பிட்டார்.
"நீர்வாழ் உயிரினங்கள் எழுப்பும் தொடர்ச்சியான சத்தங்களை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த உயிரினங்கள், அவற்றின் நகம் போன்ற உறுப்புகளை மிக வேகமாக நகர்த்தும் திறன் கொண்டவை. அதன்மூலம், நீர்க் குமிழிகளை அவை உருவாக்குகின்றன. அந்த குமிழிகள் உடையும்போது, கிட்டத்தட்ட ஒரு சவுக்கடி போன்ற ஒரு உரத்த ஒலி உருவாகிறது," என்று அவர் பிபிசி செய்திக்கு விளக்கினார்.
நீண்ட காலமாக நீருக்கடியில் இல்லாதவர்களால் இந்த சத்தத்தை கவனிக்க முடியாது என்பதையும், அவர் இருக்கும் இடம், ஒரு செயற்கைப் பாறை உருவாவதற்கு சாதகமாக இருப்பதையும் இந்தச் சத்தம் அவருக்கு நினைவூட்டியது. அவரது வசிப்பிடத்தின் மேற்பரப்பில் பாசிகள், பவளப்பாறைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் தஞ்சம் அடையத் தொடங்கின.
இந்த சாகசத்தில் கோச் மட்டும் தனியாக ஈடுபடவில்லை. அவரது ஆழ்கடல் வீடு, மேல் அறையில் இருந்து செயல்படும் ஒரு ஆதரவுக் குழுவைக் கொண்டிருந்தது. அது அவருக்கு உணவு வழங்குவதையும் மின்சாரம் மற்றும் வானிலையை மேற்பார்வை செய்வது போன்ற பிற முக்கிய அம்சங்களையும் கவனித்துக்கொண்டது.
கூடுதலாக, அவர், கடல் பகுதிகளில் அமைந்துள்ள கட்டமைப்புகளில் நிரந்தர குடியேற்றங்களை நிறுவும் நடைமுறையில் ஈடுபட்டுள்ள மக்களின் ஆதரவையும் அவர் கொண்டிருந்தார்.
ஒரு புதிய சாதனையை உருவாக்குவதற்கான முயற்சியாக மட்டும், கோச்சின் அனுபவத்தை அந்த மக்கள் பார்க்கவில்லை. மாறாக, திறந்த கடலில் நிலையான வாழ்விடங்களை நிறுவுவது சாத்தியம் என்ற கருத்தை நிரூபிப்பதின் முதல்கட்டமாக கோச்சின் சாதனையைப் பார்க்கிறார்கள்.
"நீருக்கடியில், அழுத்தம் நிறைந்த சூழலில் 100 நாட்கள் வாழ்ந்த டிடுரி என்ன செய்தார் என்பதற்கான ஒரு 'அளவுகோலைப்' போல் நான் கண்காணிக்கப்படுகிறேன்," என்று கோச் கூறினார். டிடுரி என்பவர், இதுவரை நீருக்கடியில் அதிக நேரம் செலவழித்ததற்காக உலக சாதனை படைத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இருவருக்குமான "வேறுபாடு என்னவென்றால், அறைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல ஸ்கூபா கியர் தேவையில்லாமல், என்னைச் சுற்றியுள்ள இயற்கையான நீரின் அழுத்தத்தை நான் உணர்கிறேன்."என்றார் கோச். 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அழுத்தம் நிறைந்த நீருக்கடியில் அமைந்துள்ள வாழ்விடத்தில் 100 நாட்கள் தங்கி டிடுரி சாதனை படைத்தார்.
தினசரி வாழ்வும் சவால்களும்
தொழில்நுட்ப சோதனைகள் செய்தல், காணொளிகளைப் பதிவு செய்தல் மற்றும் இணையம் மூலம் தொலைதூரத்தில் நடக்கும் அன்றாடப் பணிகளை கவனிப்பது போன்ற செயல்களில், தனது பெரும்பாலான நேரத்தை கோச் செலவிட்டார்.
அதிக ஈரப்பதம் மற்றும் நீருக்கடியில் அவர் வசிக்கும் சிறிய இடத்தை சமாளிப்பதில் இருக்கும் சவால்களை அறிந்திருந்தார் அவர். கூடுதலாக, அச்சூழ்நிலையில் குளிக்காமல் இருப்பதும் அவருக்கு சிரமமாக இருந்தது.
அவரைக் காண வந்த அவரது பார்வையாளர்களை அவ்வப்போது பார்த்தாலும், மேலே உள்ள காப்ஸ்யூல் போன்ற அமைப்பின் மூலம் தனது குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தாலும், அந்த அனுபவம் சில சமயங்களில் தனிமையை உணர வைக்கும் என்று கோச் ஒப்புக்கொண்டார்.
இவற்றுக்கு அப்பால், கடலுக்கு அடியில் தங்கியிருந்த போதிலும், ஒரு வகையான "சாதாரண வாழ்க்கையை" வாழ முடிந்தது என்று அவர் கருதுகிறார். ஜனவரி 24 அன்று, கடலுக்கடியில் உள்ள அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, பிபிசியிடம் கூறியது போல், "வெற்றியை கொண்டாடும் வகையில் சுருட்டு புகைத்தார்" கோச்.
"அதன் பிறகு, நான் நன்றாக குளிக்க விரும்புகிறேன். நிஜமாகவே, நன்றாக குளிக்க விரும்புகிறேன்," என்றும் கோச் தெரிவித்தார்.
பலருக்கு, கோச் செய்தது, ஒரு அசாதாரணமான செயல். ஆனால் அவரைப் பொறுத்தவரை, மேற்பரப்பில் வாழ்வதற்கும் நீருக்கடியில் வாழ்வதற்கும் இடையிலான வாழ்க்கை வாழ முடியாதது அல்ல என்பதற்கான ஒரு சான்று.
"மனிதர்கள் புதிய சூழலில் வாழ முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கான கூடுதல் முயற்சி தான் இந்த சாதனை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மனிதர்கள் விரிவடைந்து வாழ்வதற்கு, கடல் ஒரு நல்ல இடமாக இருக்கும்" என்பதைத்தான் இதிலிருந்து நாங்கள் கூற விரும்புகிறோம் என்றார் கோச். தொடர்ந்து பேசிய அவர், "எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும், நிலத்தில் உள்ள வளங்கள் குறித்தான பிரச்னைகள் மற்றும் விண்வெளியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இதுபோன்ற கடல் சார்ந்த வாழ்க்கை முறை உதவக்கூடும்" என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)