You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?
மகாராஷ்டிராவில் கியான் பரே சின்ட்ரோம் (Guillain-Barré syndrome) பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோலாபூரில் ஒருவர் இந்த நோயால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. அம்மாநிலத்தில் நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒர் உயர்நிலைக் குழுவை அனுப்பியுள்ளது.
இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் மருத்துவ உலகில் கண்டறியப்படவில்லை. எனினும் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு காரணமாக ஏற்படும் தொற்று, இந்த நோய் பாதிப்புக்கு இட்டுச் செல்லலாம் என்று நம்பப்படுவதால், பொது மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நோயின் அறிகுறிகள் என்ன?
தசை சார்ந்த பாதிப்புகளே இந்த நோயின் முதல் கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- கைகள் அல்லது கால்கள் திடீரென பலவீனமடைதல் அல்லது மரத்துப் போகுதல்
- நடப்பதில் சிரமம் அல்லது திடீரென தசை பலவீனம் ஏற்படுவது
- தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு
- அமெரிக்க நிதியுதவி நிறுத்திவைப்பு: டிரம்ப் உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?
- கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர்
- ரஞ்சி கோப்பை : 42 முறை வென்ற மும்பை அணி ஜம்மு காஷ்மீரிடம் தோல்வி, போட்டியில் நடந்தது என்ன?
- கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை
நோய்த் தடுப்பு வழிகள் என்ன?
இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்ட பிறகு உருவாவதால், சுகாதாரம் பேணுவதே இந்த நோயைத் தடுக்க முக்கியமான வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிப்பது
- சாப்பிடும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும், சமைத்தவுடன் சாப்பிட வேண்டும்.
- தனிநபர் சுகாதாரம் பேண வேண்டும்
- சமைத்த மற்றும் சமைக்காத உணவை ஒன்றாகக் கலக்க வேண்டாம். இதனால் தொற்று ஏற்படலாம்.
கியான் பரே சின்ட்ரோம் என்றால் என்ன?
கியான் பரே சின்ட்ரோம் என்பது அரிய வகை நோயாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தவறுதலாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும்போது இந்த நோய் ஏற்படும்.
இந்த நோய் முதல் உலகப் போரின்போது முதலில் கண்டறியப்பட்டது. சோம் போரில் இரண்டு வீரர்களுக்கு கை கால்கள் முடங்கிப் போயின.
அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராணுவ நரம்பியல் மருத்துவர்கள் கியான், பரே மற்றும் ஸ்ட்ரால் இந்த நோய் குறித்து ஆராய்ந்தனர். பிறகு இந்த நோய் கியான் பரே சின்ட்ரோம் என்றழைக்கப்பட்டது.
இந்த நோய் எதனால் ஏற்படுகிறது?
இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு இந்த நோய் பாதிப்பு உடலில் உருவாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காம்பிலோபாக்டர் ஜெஜுனி (Campylobacter jejuni ) எனும் தொற்று காரணமாக வயிற்றுக் கோளாறு ஏற்படும். வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படக்கூடும். பல பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்ட பிறகே, கியான் பரே சின்ட்ரோம் பாதிப்பு உருவாகியுள்ளது.
சில நேரங்களில் ஜிகா, சிக்குன்குனியா, தடுப்பூசிகள், அறுவை சிகிச்சைகள், காயங்கள் ஆகியவற்றோடு கியான் பரே சின்ட்ரோம் தொடர்புபடுத்தப்படுகிறது.
உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்?
உடலின் எதிர்ப்பு சக்தி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் மூளைக்கும் தசைகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது.
இதனால் தசை பலவீனம், மரத்துப் போகுதல் ஆகியவை ஏற்படக்கூடும். நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால், முடக்குவாதம் ஏற்படலாம்.
இந்த நோய் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். எனினும் பெரியவர்கள் குறிப்பாக ஆண்களுக்கே பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தீவிர பாதிப்புகள் காரணமாக முடக்குவாதம் மட்டுமின்றி சுவாசக் கோளாறுகளும் ஏற்படக்கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துவிடுகிறார்கள்.
தசை பாதிப்பு ஏற்படுவதால், பல நோயாளிகள் ஃபிசியோதெரபி, பேச்சு பயிற்சி செய்ய வேண்டியுள்ளது.
நரம்பியல் மருத்துவர் கஸ்துப் மஹஜன், "இந்த நோய் எந்த வயதிலும் ஏற்படலாம், நோய் அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் தென்படலாம். அறிகுறிகள் ஆரம்பக் காலத்திலேயே கண்டறியப்படுவதும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதும் நோயாளி முழுமையாகக் குணமடைய அவசியம்" என்கிறார்.
பொதுவாக உடலில் ஒரு தொற்று ஏற்படும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்ப்பதற்காகப் புரதங்களை வெளியிடும். அது ஆன்டிபாடி எனப்படும்.
கியான் பரே சின்ட்ரோம் நோய் பாதிப்பின்போது, "உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகள் இருக்கின்றனவா என்று நவீன மருத்துவ தொழில்நுட்பம் கொண்டு கண்டறிந்து மருந்துகள் கொடுக்கப்படும். பிளாஸ்மா மாற்று சிகிச்சை இதற்கு உதவக்கூடும். டயாலிசிஸ் போன்ற அந்த சிகிச்சையில் ரத்தத்தில் உள்ள தீங்கு செய்யும் ஆன்டிபாடிகளை வெளியேற்றப்படும்" என்கிறார் கஸ்துப் மஹஜன்
மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தீவிர சிகிச்சை நிபுணர், மருத்துவர் அஜித் தம்போல்கர் கூறுகிறார்.
"பதற்றமடைய வேண்டாம். உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டால், பெரும்பாலான நோயாளிகள் குணமாகிவிடுவர். குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை சுகாதாரமாகப் பேணுவது நோய் வராமல் தடுக்க மிக முக்கியம். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்" என்கிறார்.
இந்த நோயால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த நிலேஷ் அபங் பிபிசியிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
"கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி எனக்கு கியான் பரே சின்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. நான் மே மாதம் 30ஆம் தேதி வரை வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தேன். நான்கு மாதங்களுக்கும் மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளேன்.
கழுத்துக்குக் கீழே எனது உடல் முடங்கிவிட்டது. எனது நுரையீரல்கள் மிகவும் பலவீனமாயின. ஆனால் மருத்துவ சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மூலம் நான் முழுவதுமாகக் குணமடைந்தேன்" என்று நினைவு கூர்ந்தார்.
உடல் பாதிப்பு மட்டுமல்லாமல் நோயாளியும் அவருடன் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று கூறும் நிலேஷ், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு நேர்மறையான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான நோயாளிகளை நான் பார்த்துள்ளேன், அவர்களுடன் பேசியுள்ளேன். அவர்களில் பலர், முழுவதும் குணமடைந்து வாழ்கிறார்கள். வென்டிலேட்டரில் இருந்தவர்கள்கூட முழுவதுமாக குணமடைந்துள்ளனர்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)