You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனைவியை கொன்று, உடலை துண்டாக்கி குக்கரில் சமைத்ததாக புகார் - விடை தெரியாத 12 கேள்விகள்
- எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்.
ஹைதராபாத் மீர்பேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக எழுந்த புகார், தற்போது நாடு முழுவதும் பரபரப்பான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
காணாமல் போவது தொடர்பான வழக்குகள் வழக்கமான ஒன்றே. ஆனால் இந்த சம்பவம் மனதை மிகவும் தொந்தரவு செய்வதாக உள்ளது.
இந்த வழக்கில், மாதவி என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணை அவருடைய கணவர் குருமூர்த்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் அவை இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
மனைவியின் உடலை துண்டுதுண்டாக்கி, குக்கரில் போட்டு சமைத்ததாக, ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வெவ்வேறு ஊகங்கள் உள்ளூர், தேசிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றன.
ஆனால், மாதவி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தோ, ஊடகங்களில் இதுதொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்தோ காவல்துறை இனிதான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை காணாமல் போனவர் தொடர்பான வழக்காகவே விசாரித்து வருவதாக, எல்.பி. நகர் துணை ஆணையர் பிரவீன் குமார் பிபிசி தெலுங்கு சேவையிடம் தெரிவித்தார்.
காணாமல் போனதாக கூறப்படும் பெண்ணின் கணவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என, காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஹைதராபாத்தின் புறநகரில் ஜில்லேலகுடா எனும் பகுதியிலுள்ள நியூ வெங்கடேஸ்வரா காலனியில் புட்ட குருமூர்த்தி என்பவரும் அவருடைய மனைவி வேங்கட மாதவியும் கடந்த ஐந்தாண்டுகளாக வசித்துவந்தனர் .
அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
பிரகாசம் மாவட்டத்தின் ராச்சர்லா மண்டலத்தில் உள்ள ஜேபி செருவு எனும் கிராமம்தான் இவர்களின் பூர்வீகம்.
குருமூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தற்போது தனியார் காவலாளியாக பணியாற்றி வருவதாக, மீர்பேட் காவல் ஆய்வாளர் கீசரா நாகராஜு பிபிசியிடம் கூறினார்.
தாய் அளித்த புகார் என்ன?
மாதவி காணாமல் போனதாக கடந்த 18-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் பதிவானது.
மீர்பேட் காவல் நிலையத்தில் மாதவியின் தாய் உப்பல சுப்பம்மா தான் இந்த புகாரை அளித்தார்.
"கடந்த 16-ஆம் தேதி என் மகள் மாதவிக்கும் அவருடைய கணவர் குருமூர்த்திக்கும் சிறு சண்டை ஏற்பட்டது. இதனால், என் மகள் மதியம் வீட்டிலிருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள், உறவினர்களின் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை," என காவல்துறையினரிடம் சுப்பம்மா புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மீர்பேட் காவல் நிலையத்தில் மாதவி காணாமல் போனதாக வழக்கு (81/2025) பதியப்பட்டது. வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர்.
கணவர் மீது சந்தேகம்
"கடந்த 15-ஆம் தேதி மாதவியும் குருமூர்த்தியும் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், மாதவி குறித்த தடயங்கள் ஏதும் இல்லை. இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகளையும் ஆராய்ந்தோம். மாதவியின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்த போது, குருமூர்த்தி மீது அவர்கள் சந்தேகங்களை எழுப்பினர்.
அவர்களின் சந்தேகங்களை கவனத்தில் கொண்டு நாங்கள் விசாரணையை தொடங்கினோம். இதுவரை, மாதவி காணாமல் போனதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என மீர்பேட் காவல் ஆய்வாளர் நாகராஜு பிபிசியிடம் கூறினார்.
இந்த பிரச்னை தொடர்பாக பிபிசி, மாதவியின் பெற்றோரிடம் பேச முயற்சித்தது. ஆனால், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த கட்டுரை எழுதப்படுவதற்கு முன்பு வரை அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை.
மாதவி வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம் பேசுவதற்கு முயற்சித்தோம், ஆனால் அவர்கள் எங்களிடம் பேச மறுத்துவிட்டனர்.
மாதவியின் கணவர் தற்போது பணிபுரியும் நிறுவனத்திடம் பேசுவதற்கு பிபிசி முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அந்நிறுவனத்தின் கருத்துகளை பெற முடியவில்லை.
குருமூர்த்தி தன் மனைவியை கொன்று, உடல் பாகங்களை துண்டு, துண்டாக்கியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த உடல் பாகங்களை அழிப்பதற்கு குருமூர்த்தி என்ன செய்தார் என்பது குறித்த கொடூரமான, கோரமான தகவல்கள் ஊடகங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன.
ஆனால், இந்த தகவல்களை காவல்துறை எங்கும் உறுதிப்படுத்தவில்லை.
"குருமூர்த்திக்கு எதிராக மாதவியின் பெற்றோர் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது," என மீர்பேட் காவல் ஆய்வாளர் நாகராஜு தெரிவித்தார்.
எல்பி நகர் துணை ஆணையர் பிரவீன் குமார் இதுதொடர்பாக தொலைபேசி வாயிலாக பிபிசியிடம் பேசினார்.
"மாதவி காணாமல் போனது குறித்து இரண்டு, மூன்று வெவ்வேறு கோணங்களில் குருமூர்த்தி தகவல்களை அளித்துள்ளார். அவற்றின் அடிப்படையிலும் விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் உண்மை வெளியே வரும்."
மாதவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு, துண்டாக்கப்பட்டதாக கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என, துணை ஆணையர் பிரவீன் குமார் பிபிசியிடம் கூறினார்.
சிசிடிவி பதிவுகளில் உள்ளது என்ன?
சிசிடிவி பதிவுகளின்படி மாதவி உள்ளே போனது தான் தெரிந்தது என்றும், ஆனால் வெளியே வந்தது தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இவ்வழக்கில் இது முக்கியமான ஒன்றாக உள்ளது. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக, துணை ஆணையர் பிபிசியிடம் கூறினார்.
அருகிலுள்ள குளத்தில் உடல் பாகங்களை கொட்டியதற்கான எவ்வித ஆதாரமும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என, நாகராஜு தெரிவித்தார். விரைவிலேயே இவ்வழக்கு குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அவர் கூறினார்.
குருமூர்த்தி உட்பட சந்தேகிக்கப்படும் நபர்கள் யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர்.
மாதவியின் வீட்டில் நிலைமை என்னவாக உள்ளது?
குருமூர்த்தியின் குடும்பம் வசித்து வந்த வீட்டுக்கு பிபிசி நேரில் சென்றது.
வீட்டின் வெளியே பூட்டு போடப்பட்டுள்ளது. அருகே காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
திறந்திருந்த ஜன்னல் வாயிலாக, உள்ளே சிறிய குக்கர், கோழி அல்லது ஆட்டிறைச்சி கடைகளில் இறைச்சிகளை துண்டாக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டை, சிறிய பானை, மதுபான பாட்டில், வாளி ஆகியவை இருப்பது தெரிந்தது. அசாதாரணமானதாக ஏதும் தென்படவில்லை.
தரை தளமும் இரண்டு தளங்களும் கொண்ட வீடு அது. வீட்டில் தற்போது யாரும் இல்லை.
விடை தெரியாத 12 கேள்விகள்
இச்சம்பவத்தில் பதிலளிக்கப்பட வேண்டிய பல கேள்விகள் உள்ளன.
தேசியளவில் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படுவதால், அடிப்படையில் இதுதொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
- மாதவி காணாமல் போனாரா? அவர் எங்கே போனார்?
- மாதவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று போலீசார் கூறுகிறார்கள். அப்படியானால் அவர் எப்படி காணாமல் போனார்?வீட்டில் ஏதாவது நடந்தால் என்ன செய்வது?
- உள்ளூர் ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டாரா?
- அவர் கொலை செய்யப்பட்டிருந்தால், அவரை யார் கொன்றார்கள்?
- கணவர் கொலை செய்திருந்தால், மாதவியின் உடல் என்ன ஆனது?
- அவர் கொல்லப்பட்டிருந்தால், அவரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அல்லது பிற பொருட்கள் என்ன ஆயின?
- குருமூர்த்தி இரண்டு அல்லது மூன்று கோணங்களைச் சொல்வதாக போலீசார் கூறுகின்றனர். அவற்றில் எது உண்மை?
- மாதவி கொலை செய்யப்பட்டிருந்தால், அவர் இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
- தம்பதியினரிடையே என்ன வாக்குவாதம்?
- மாதவியை அவரது கணவர் கொலை செய்திருந்தால், அவர் தனியாகச் செய்தாரா? அல்லது வேறு யாராவது உதவி செய்தார்களா?
- வீட்டில் இறைச்சி வெட்டுவதற்குரிய மரக்கட்டை ஏன் இருந்தது?
- 16 ஆம் தேதி மாதவி காணாமல் போனது உண்மையானால், அடுத்த இரண்டு நாட்களுக்கு குருமூர்த்தி என்ன செய்தார்?
இந்த கேள்விகள் ஊடகங்களுக்கானவை அல்ல, காவல் துறைக்கானது. இந்த வழக்கு தொடர்பாக வலம் வரும் வதந்திகளை தடுப்பதற்கு காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
பல கேள்விகளுக்கு காவல்துறை பதிலளிக்க வேண்டும். அப்போதுதான், இந்த வழக்கின் விசாரணை முடிவடையும்.
"ஓரிரு நாட்களில் இந்த வழக்கின் விசாரணையை முடிப்போம். அதன்பின், அனைத்துத் தகவல்களும் தெரியவரும். இப்போதைக்கு, மாதவி காணாமல் போனதாக விசாரிக்கப்பட்டு வருகிறது," என துணை ஆணையர் பிரவீன் குமார் பிபிசியிடம் கூறினார்.
ஊடகங்களில் வலம் வரும் தகவல்கள் குறித்து கேட்டதற்கு, விசாரணை நடைபெற்று வருகிறது, குறிப்பாக ஏதும் சொல்ல இயலாது என, மீர்பேட் காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜு தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)