You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரீஷ்மா: காதலனை கொன்ற காதலிக்கு நேரடி ஆதாரமே இல்லாதபோதும் மரண தண்டனை கிடைத்தது எப்படி?
- எழுதியவர், சு.மகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
காதலனை கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற காதலிக்கு கேரளாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க டிஜிட்டல் சான்றுகள் உதவியாக இருந்துள்ளது.
''இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும், சூழ்நிலை சான்றுகளை இணைத்து, டிஜிட்டல் ஆதாரங்களின் துணையுடன் குற்றத்தை நிரூபித்து குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் அதிகபட்ச தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.'' என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர்
வழக்கின் பின்னணி என்ன?
அரசு தரப்பு வழக்கறிஞரின் கூற்றுப்படி, ''கன்னியாகுமரி மாவட்டம் தேவிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா, முதுகலை ஆங்கில இலக்கிய பட்டதாரி.
கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஷரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை ரேடியாலஜி (B.Sc., Radiology) இறுதி ஆண்டு மாணவர் (சம்பவம் நடைபெற்ற போது).
கிரீஷ்மாவும், ஷரோன் ராஜும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே கிரீஷ்மாவின் பெற்றோர் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதையடுத்து கிரீஷ்மா ஷரோன் ராஜிடன் தன்னுடனான காதலை கைவிடும்படி கோரியுள்ளார். ஆனால் ஷரோன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளையை மணக்க விரும்பிய கிரீஷ்மா, ஷரோன் தனது மண வாழ்க்கையில் இடையூறாக வரக்கூடும் என எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றார்''. இதுவே வழக்கின் பின்னணி.
- புதுக்கோட்டை: கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி கொலையா? என்ன நடந்தது?
- காரை செலுத்தி 35 பேரை கொன்றவருக்கு சில மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றிய சீனா
- கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளி 'சஞ்சய் ராய்க்கு' ஆயுள் தண்டனை
- ஏமன்: கேரள செவிலியரை இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா?
விசாரணையில் வெளிவந்த உண்மை
இந்த வழக்கின் சிறப்பு புலனாய்வு குழுவில் அங்கமாக இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ரசீத் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஆரம்பத்தில் இந்த வழக்கை பாறசாலை காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க துவங்கினர். ஆனால் ஷரோன் ராஜ் மரணத்தில் கிரீஷ்மா மீது சந்தேகம் உள்ளதாக ஷரோன் ராஜின் உறவினர்கள் தெரிவித்தனர்." என்றார்
"இதையடுத்து வழக்கு குற்ற பிரிவுக்குக்கு மாற்றப்பட்டு, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படு விசாரணை நடந்தது." என்று அவர் கூறினார்.
கிரீஷ்மாவிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது அவர் நடந்தவற்றை மறைக்க இயலாமல் உண்மையை கூறிவிட்டார் என்றும் தொடர்ந்து அவரது அம்மா மற்றும் மாமாவிடமும் குறுக்கு விசாரணை நடந்த போது, ஷரோன் ராஜுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தது ஊர்ஜிதமானது என்றும் டிஎஸ்பி ரசீத் கூறினார்.
தற்கொலைக்கு முயன்ற காதலி
தொடர்ந்து பேசிய டிஎஸ்பி ரசீத், "இதற்கிடையே கிரீஷ்மா காவல்துறை காவலில் இருக்கும் போது, நெடுமன்காடு காவல்நிலையத்தில் வைத்து, கழிவறை கழுவுவதற்காக வைத்திருந்த கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்."
"அப்போது கிரீஷ்மாவிடம் வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்டிடமும் கிரீஷ்மா நடந்த அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். தானும் ஷரோன் ராஜும் காதலித்து வந்ததாகவும், வேறு ஒருவருடன் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் ஷரோனிடம் காதலை கைவிடும் படி கேட்டதாகவும், இதற்கு ஷரோன் மறுத்ததால் அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் கிரீஷ்மா மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்." என்று கூறினார் ரசீத்.
அதன் பின்னர் கிரீஷ்மா கூறிய அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்ததாக தெரிவித்தார் டிஎஸ்பி ரசீத்.
கைபேசி தகவல்கள் அழிப்பு
வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் வி.எஸ்.வினீத் குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த வழக்கில் நேரடி சான்றுகள் எதுவும் இல்லாதது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனால் சூழ்நிலை சான்றுகளை ஒவ்வொன்றாக இணைத்து டிஜிட்டல் மற்றும் விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளின் துணை கொண்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிரூபித்தோம்" என்றார்.
"கிரீஷ்மா ஒரு முறை பழச்சாற்றில் (Juice) அளவுக்கு அதிகமாக காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து ஷரோன் ராஜை கொல்ல முயற்சி செய்துள்ளார். அதற்கு முன்பு தனது கைபேசியில் உள்ள தேடு பொறியில் இது குறித்தான தகவல்களை தேடியுள்ளார். ஆனால் பழச்சாற்றை ஷரோன் ராஜ் முழுவதுமாக குடிக்காததால் அன்று உயிர் பிழைத்துள்ளார்." என்கிறார் வழக்கறிஞர் வி.எஸ்.வினீத் குமார்.
''அடுத்ததாக 14 அக்டோபர் 2022 அன்று, கிரீஷ்மா தனது கைபேசியில் உள்ள தேடு பொறியில் கொடிய நச்சு தன்மையுடைய பூச்சிக்கொல்லி மருந்து (விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவது) குறித்தும், அதன் எதிர்வினைகள் மற்றும் நச்சுத்தன்மை குறித்தும், அது மனித உடலில் எவ்வாறு செயல்படும், எவ்வாறு கொடுப்பது என்பது குறித்தும் தகவல்கள் தேடியுள்ளார். அந்த மருத்து அவரது வீட்டில் இருந்துள்ளது'' என்று கூறுகிறார் வினீத் குமார்.
அன்று இரவே ஷரோன் ராஜை தனது வீட்டிற்கு அழைத்த கிரீஷ்மா, கசாயத்தில் அந்த பூச்சிகொல்லி மருந்தை கலந்து கொடுத்ததாகக் கூறுகிறார் அவர்.
அதை குடித்த பிறகு ஷரோன் ராஜுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் சிகிச்சை பலனளிக்காமல் 25 அக்டோபர் 2022 அன்று உயிரிழந்தார்.
"இதை அறிந்த கிரீஷ்மா காவல்துறையினர் தன்னிடம் விசாரணைக்கு வரக்கூடும் என சந்தேகித்து தனது கைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழித்துள்ளார். மேலும் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா என்பது குறித்தும் தேடு பொறியில் தேடியுள்ளார்." என்கிறார் வினீத் குமார்.
''விசாரணையின் போது, கிரீஷ்மாவின் கைபேசி ஆராயப்பட்டது. ஆனால் அதில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தடயவியல் ஆய்வகத்துக்கு கைபேசி அனுப்பப்பட்டு Cloud Data-வில் பதிவாகி இருந்த அனைத்து தகவல்களும் மீட்டு எடுக்கப்பட்டன'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
அவரது கைபேசியில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்கள், வீடியோ அழைப்புகள், அவரது தேடு பொறியில் தேடிய தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் மீட்டு எடுக்கப்பட்டு டிஜிட்டல் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
மேலும், "சம்பவம் நடந்த அன்று ஷரோன், கிரீஷ்மாவின் வீட்டிற்கு வந்து சென்றதற்கான ஆதாரமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், இருவருக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகள், இருவரும் பயன்படுத்திய பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் மற்றும் சிடி ஆகியவற்றில் உள்ள தகவல்கள் டிஜிட்டல் ஆதாரமகவும், சூழ்நிலை ஆதாரங்களையும் துணையாக கொண்டு நிலைநிறுத்தி வழக்கை நீதிமன்றத்தில் நிரூபித்தோம்," என்றார் வழக்கறிஞர் வினீத் குமார்.
'தடயம் இல்லை'
"கிரீஷ்மா, ஷரோன் ராஜுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார் என்பது புலன் விசாரணையில் தெளிவாகிவிட்டது. ஆனால் உயிரிழந்த ஷரோன் ராஜின் உடலில் விஷம் குடித்து இறந்ததற்கான எந்த தடயமும் உடற்கூறாய்வில் இல்லை." என்கிறார் வழக்கறிஞர் வினீத் குமார்.
''காரணம் விஷம் கொடுக்கப்பட்ட ஷரோன் ராஜ் 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மேலும் சிகிச்சையின் போது மூன்று முறை ஷரோன் ராஜுக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது ரத்தம் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டதோடு உடலில் விஷ தடயங்கள் எதுவும் இல்லாமல் போயிருந்தது'' என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் வினீத் குமார்.
இவற்றை எல்லாம் சூழ்நிலை சான்றுகளைக் கொண்டு நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினோம், என்கிறார் வழக்கறிஞர் வினீத் குமார்.
500 பக்க தீர்ப்பு
வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர், 20 ஜனவரி 2025 அன்று வழங்கிய தீர்ப்பில், கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனையும், அவரது மாமா நிர்மல் குமரன் நாயருக்கு 3 வருட சிறை தண்டனையும் அளித்து தீர்பளித்தார்.
தீர்ப்பில் அவர் காவல்துறையினரின் புலன் விசாரணையை வெகுவாக பாராட்டியுள்ளார்.
தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது, "வழக்கில் பாதிக்கப்பட்ட ஷரோன் ராஜ், கொலையாளியின் வயதை ஒத்த வயதுடைய ஒரு மாணவர். ஷரோன் ராஜ், கிரீஷ்மா மீது ஆழ்ந்த காதல் வயப்பட்டிருந்தார். அப்பெண் மீது நம்பிக்கை வைத்து கண்மூடித்தனமாக நம்பி இருந்தார். ஆனால் அந்த நம்பிக்கையை கிரீஷ்மா தவறாக பயன்படுத்திவிட்டார்."
"மரண படுக்கையில் ஷரோன் ராஜ் இருந்த போது, மாஜிஸ்த்ரேட்டிடன் மரண வாக்குமூலம் அளித்த போதும், கிரீஷ்மா மீது தனக்கு எந்த புகாரும் இல்லை என்றும் ஏனென்றால் அவளை தான் தண்டிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த குற்றம் மிக மூர்க்கத்தனமாக நடந்துள்ளது. ஒரு அப்பாவி இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்."
''விஷம் கொடுக்கப்பட்டதால் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் அனைத்தும் அழுகி, உதடு முதல் ஆசனவாய் வரை தாங்க முடியாத வலியுடன் 11 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தமுடியாமல் ஷரோன் மரண படுக்கையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடியுள்ளார்'' என்ற நீதிபதி பஷீர், "குற்றவாளி அந்த கல்லூரி மாணவன் அளித்த பரிசுத்தமான கபடமற்ற தூய காதலையும் கொன்றுள்ளார். அது ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக கொண்டு தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.
'அம்மாவின் பிரார்த்தனை நிறைவேறியது'
இந்தத் தீர்ப்பை முழுமையாக வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட ஷரோன் ராஜின் சகோதரர் டாக்டர். ஷிமோன் ராஜ் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தோம். அதுபோல் தான் வழக்கின் தீர்ப்பும் வந்துள்ளது. எனவே இது எங்களுக்கு மகிழ்ச்சிதான். தீர்ப்பை கேட்ட பிறகு அம்மாவிற்கு ஆறுதல் கிடைத்துள்ளது." என்று கூறினார்.
"தம்பி எங்களோடு இல்லையே என்ற கவலை ஒரு நாளும் எங்களை விட்டு மறைய போவதில்லை. ஆனால் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைத்தது எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)