You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலை முகட்டில் திடீரென பற்றி எரிந்த 12 அடுக்கு மாடி மர ஓட்டல் - ஜன்னல் வழியே குதித்தவர்கள் என்ன ஆனார்கள்?
- எழுதியவர், மாலு கர்சினோ, காத்தரின் ஆம்ஸ்ட்ராங்
- பதவி, பிபிசி நியூஸ்
துருக்கியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியின் பொலு நகரில் உள்ள கிராண்ட் கர்தல் என்ற பனிச்சறுக்கு ஓட்டலில் (தங்குவதற்கு மற்றும் பனிச்சறுக்கு செய்வதற்கான வசதிகளை கொண்ட ஓட்டல்) இன்று அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மரக்கட்டைகளால் கட்டப்பட்ட அந்த 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட இரவில், அங்கே 234 பேர் தங்கியிருந்தனர். பள்ளி விடுமுறை காலம் என்பதால் பனிச்சறுக்கில் விருப்பம் கொண்ட சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்துடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர்.
முதலில் 10 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சில மணி நேரத்திற்கு பிறகு துருக்கியின் உள்துறை அமைச்சகம் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை உறுதி செய்தது. இதில் இரண்டு பேர் தீயில் இருந்து தப்பிக்க முயன்று ஓட்டலில் தாங்கள் தங்கியிருந்த தளத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிரிழந்துள்ளனர்.
ஓட்டலில் தீயை அணைக்க 12 மணி நேரமானது. விபத்து தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 10 வயது நீச்சல் வீராங்கனை, அவரது தாய், ஓட்டலின் சமையல் கலைஞர், உள்ளூரில் பிரபலமான தொழிலதிபரின் மகள், மற்றும் அவரது 17 வயது பேத்தி, எழுத்தாளர் ஒருவர் மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள், பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் யார்யார் என்ற விவரம் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை.
ஜன்னல் வழியே வெளியே குதித்த தப்பிய மக்கள்
இந்த விபத்தில் காயமடைந்த 51 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் துருக்கி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விபத்து ஏற்பட்ட போது, ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க சிலர் துணிகளை பயன்படுத்தியுள்ளனர். சமூக ஊடகங்களில் ஜன்னல்களிலிருந்து அந்த துணிகள் தொங்கிக் கொண்டிருக்கும் வீடியோ பரவி வருகிறது.
பிபிசியிடம் பேசிய பனிச்சறுக்கு ஆசிரியர் நெச்மே, தீ விபத்தின் போது அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்ததாகவும், அவர் எப்படியோ தப்பிவிட்டதாகவும் அதன் பிறகு மீட்புப் பணிகளில் உதவியதாகவும் தெரிவித்தார்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஓட்டலின் உரிமையாளர்களும் விபத்து நேரிட்ட போது ஓட்டலில் இருந்ததாக தெரிவித்தனர்.
தீ விபத்து நேரிட்டது எப்படி?
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை. எனினும், ஓட்டலின் நான்காவது மாடியில் உள்ள உணவக பகுதியிலிருந்து மற்ற தளங்களுக்கு தீ பரவியதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக பொலு நகரின் ஆளுநர் அப்துலசிச் அய்தின் கூறினார்.
ஓட்டலுக்கும் பொலு நகரின் மைய பகுதிக்கும் இடையிலான தூரம் மற்றும் உறைய வைக்கும் குளிர் ஆகியவற்றின் காரணமாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைய ஒரு மணி நேரத்துக்கு மேலானது என்று ஆளுநர் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு 267 அவசர சேவை ஊழியர்கள் வந்தடைந்தனர்.
தீ பரவ தொடங்கிய போது, ஒவ்வொரு அறையிலும் விருந்தாளிகள் மற்றும் அவரது குழந்தைகள் சிக்கிக் கொண்டுள்ளனரா என்று ஓட்டல் நிர்வாகத்தினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த ஓட்டலில் தீ விபத்திலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருந்துள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கிருந்து 30 முதல் 35 பேரை காப்பாற்றியதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
தீவிபத்து குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக துருக்கி நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஓட்டலில் 2024-ம் ஆண்டு அரசு சோதனை நடத்தியதாகவும் அப்போது தீ விபத்து ஏற்படும் வகையிலான விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் துருக்கி பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் அமைப்பு, ஓட்டலில் தானியங்கி தீயணைப்பான் வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
"ஓட்டலின் இணையதளத்தில் உள்ள அதன் புகைப்படங்களில் தானியங்கி தீயணைப்பான் காணப்படவில்லை." என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் விதிமீறல்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. எனினும் உயிர் பிழைத்தவர்களின் கூற்றுப்படி அந்த ஓட்டலில் தீ பரவலை கண்டறிந்து எச்சரிக்கும் கருவி வேலை செய்யவில்லை. தப்பித்து செல்வதற்கான வழிகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி அதிபர் இரங்கல்
துருக்கி அதிபர் எர்டோகன், தீ விபத்து ஏற்பட காரணமாக, கவனக்குறைவாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
துருக்கியில் இந்த சம்பவத்தின் காரணமாக தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதன்கிழமை மாலை வரை துருக்கியின் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று துருக்கி அதிபர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பனிச்சறுக்கு ஆர்வலர்களின் விருப்பமான இடம்
பொலு நகரில் உள்ள மலைகள் பனிச்சறுக்கு செய்பவர்களுக்கு பிடித்தமான இடமாகும். துருக்கியில் தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் இருந்து பனிச்சறுக்கு செய்பவர்கள் பொலு நகருக்கு வருவது வழக்கம். தற்போது இரண்டு வார காலம் பள்ளி விடுமுறை என்பதால் அந்த ஓட்டல் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது.
துருக்கியின் முன்னாள் பிரிட்டன் தூதர் சர் பீட்டர் வெஸ்ட்மாகோட், தான் அந்த பகுதியில் கடந்த காலங்களில் தங்கியிருந்ததாகவும் இந்த சம்பவம் தனிப்பட்ட முறையில் தன்னை பாதித்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
"துருக்கி பற்றி அக்கறை கொண்ட எவருக்கும் இத்தனை பேர் உயிரிழந்துவிட்டனர் என்பது மிகவும் சோகமான செய்தியாகும்" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)