You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரை செலுத்தி 35 பேரை கொன்றவருக்கு சில மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றிய சீனா
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். சீனாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்தவற்றிலேயே மிகவும் மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான ஜுஹாயில் உள்ள விளையாட்டரங்கிற்கு வெளியே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது ஃபேன் வேய்சியோ (62 வயது) என்ற நபர் காரை வேகமாக செலுத்தி மோதியதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இதற்கு சில நாட்களுக்கு கழித்து நடந்த வேறு ஒரு தாக்குதலுக்கு காரணமான மற்றொரு நபருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்தது.
ஷூ ஜியாஜின் (21 வயது) என்ற அந்த நபர் கிழக்குப் பகுதி நகரான வூக்சியில் தான் பயின்ற பல்கலைக்கழகத்தில் பார்ப்போரையெல்லாம் கத்தியால் தாக்கி, 8 பேரை கொலை செய்திருந்தார்.
படுகொலைக்கான காரணங்கள்
தனது விவாகரத்திற்கு பிறகு தனது சொத்துகள் பங்கு போடப்பட்ட விதம் குறித்த அதிருப்தியால் ஃபேன் செயல்பட்டதாகவும், மற்றொரு சம்பவத்தின் குற்றவாளியான ஜியாஜின், மோசமான தேர்வு முடிவுகளால் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்ய முடியவில்லை என்ற கோபத்தில் தாக்குதலை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபேன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து நவம்பர் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்போது அவரது உடலில், அவரே ஏற்படுத்திய காயங்கள் இருந்ததாகவும் காவல்துறை கூறியது.
பொது பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவரது நோக்கம் மிகவும் மோசமானது என்றும் அவர் பயன்படுத்திய முறைகள் கொடூரமானவை என்றும் ஜூஹாய் மக்கள் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றம் மரண தண்டனை விதித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே ஃபேனின் மரண தண்டனை திங்கட்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜியாஜினைப் பொறுத்தவரை அவர் நவம்பர் 16ஆம் தேதி, தனது குற்றத்தை தயக்கமின்றி ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நீதிமன்றம் அவருக்கு டிசம்பர்17ஆம் தேதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
'மரண தண்டனைகளில் முன்னிலையில் இருக்கும் சீனா'
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, உலகில் சீனா முன்னிலையில் இருப்பதாக மனித உரிமை குழுக்கள் நம்புகின்றன.
மரண தண்டனை தொடர்பான விவரங்களை அந்த நாடு வெளியிடுவதில்லை எனவே நம்பகமான எண்ணிக்கைகள் கிடைப்பதில்லை.
பொது இடங்களில் அதிகரிக்கும் வன்முறைகளுடன் சீனா போராடிக் கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய பலர், சமுதாயத்தின் மீது பழிவாங்கும் நோக்கத்தால் உந்தப்பட்டு தங்களது தனிப்பட்ட குறைகளுக்காக முன்பின் தெரியாதவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது.
2024-ஆம் ஆண்டில் சீனாவில் இதுபோன்ற தாக்குதல்கள் 19-ஐ எட்டியிருந்தன.
ஜுஹாய் மற்றும் வூக்சி தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே, சாங்டே நகரில் தொடக்கப் பள்ளி ஒன்றிற்கு வெளியே குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீது ஒரு நபர் காரை செலுத்தி 30 பேரை காயப்படுத்தினார்.
ஹுவாங் வென் என்ற அந்த நபர், முதலீடுகளில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்ப தகராறால் ஏற்பட்ட கோபத்தை அவ்வாறு வெளிப்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.
ஹுவாங்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடந்த மாதம் நிறுத்திவைக்கப்பட்டது. அவர் அடுத்த இரண்டு வருடங்களில் குற்றங்கள் ஏதும் செய்யாமல் இருந்தால், அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம்.
இதுபோன்ற படுகொலை சம்பவங்கள், சீன மக்கள் மந்தமான பொருளாதாரம் உட்பட அழுத்தம் தரக்கூடிய பிரச்னைகளை எப்படி கையாள்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவதாக திறனாய்வாளர்கள் முன்னதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.
"அழுத்தங்கள் மேலும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தோன்றுகிறது, அவை எதிர்காலத்தில் குறைவதற்கான வழியேதும் தெரியவில்லை," என்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சீன மையத்தின் பொருளாதார நிபுணர் ஜார்ஜ் மேக்னஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)