You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: இன்னும் எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்? - மத்திய அரசு கூறியது என்ன?
இன்றைய (07/02/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக சந்தேகிக்கப்படும் 104 இந்தியர்களை அமெரிக்கா, சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ''அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் கவலை தெரிவித்தோம். இதுபோன்ற செயலை தவிர்த்திருக்கலாம் என கூறினோம். நாடுகடத்தப்படுபவர்களை தவறாக நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.'' என்றார்.
''அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அவர்களில் 298 பேரின் விவரங்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன'' என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
300 பேரை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்
பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்றுவந்த 300க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது என்கிறது தினமணி செய்தி.
பயிற்சிக்கு பிந்தைய உள்நுழைவு தேர்வில் மூன்று முயற்சிகளுக்கு பிறகும் அவர்கள் தேர்ச்சி பெறாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில், ''தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பணி நியமன ஆணை பெற்ற பிறகு 2 ஆண்டுகள் காத்திருப்புக்கு அடுத்துக் கடந்த அக்டோபரில்தான் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர், இந்தநிலையில் 300 பேரைப் பணி நீக்கம் செய்யும் முடிவை இன்ஃபோசிஸ் நிறுவனம் தன்னிச்சையாக எடுத்துள்ளது'' என ஐடி தொழிலாளர்கள் சங்கமான ஐடிஇஎஸ் கூறியுள்ளது.
ரூ.9.48 கோடி மதிப்பிலான கள்ள நோட்டு
ரூ. 9.48 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை வைத்திருந்த நபரை ராயப்பேட்டை காவல்துறையினர் கைது செய்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை பூர்வீகமாக கொண்ட 41 வயது மதிக்கத்தக்க ரஷீத் ஆழிகோடன் தெகாத் கள்ள நோட்டுகளுடன் பிடிப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.9.48 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.
வருமான வரித்துறையினர் ராயப்பேட்டையில் அமைந்துள்ள பூரம் பிரகாஷம் ராவ் சாலையில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது ரூ.2000 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரி ஷ்ரவன் குமார் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் ரஷீத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கிறது அந்த செய்தி.
மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி நிர்வாகி கைது
திருச்சி மணப்பாறையில் தனியார் பள்ளியில் படிக்கும் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 54 வயதான பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவியின் குடும்பத்தினர் திரண்டு போராட்டம் நடத்தியதோடு, இந்த பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் மற்றொரு பள்ளியைச் சூறையாடியதால் மணப்பாறையில் பரபரப்பு நிலவியது என அந்த செய்தி கூறுகிறது.
கடந்த திங்கட்கிழமை வகுப்பறைக்கு வந்த 54 வயதான பள்ளி நிர்வாகி அந்த சிறுமியிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிர்வாகியுடன், இந்த சம்பவத்தை மறைத்த பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)