You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்
- எழுதியவர், இம்ரான் முல்லா
- பதவி, வரலாறு ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர், பிபிசி இந்தி
மகாராஷ்டிராவின் ஓளரங்காபாத் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் அற்புதமான, ஆனால் பாழடைந்த கல்லறை ஒன்று உள்ளது.
இது சாதாரண கல்லறையல்ல.
இதன் சிறப்பம்சமே ஓட்டோமான் துருக்கி பாணியில் கட்டப்பட்ட அதன் குவிமாடம் தான்.
இந்த கல்லறை 20ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது துருக்கியின் கடைசி கலீபா அப்துல் மஜீத் II என்பவருக்காக கட்டப்பட்டது. அப்துல் மஜீத் II ஓர் ஓவியராகவும், கவிஞராகவும், இசையை நேசிப்பவராகவும் இருந்தார்.
அப்துல் மஜீத், கலீபாவாக நியமிக்கப்பட்ட ஓட்டோமான் பேரரசு அல்லது ஓஸ்மானியா சுல்தானகத்தின் கடைசி உறுப்பினராவார். அவர் இறைத்தூதர் முகமது நபியின் அரசியல் வாரிசுரிமையின் பிரதிநிதியாக இருந்தார்.
ஓட்டோமான் பேரரசின் முடிவுக்கு பின்னர், அவர் தனது வம்சாவளி ஆட்சியை இந்தியாவின் ஹைதராபாத் சமஸ்தானத்தில் தொடர நினைத்தார்.
- தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
- 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?
- பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?
- நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை
ஓட்டோமான் பேரரசின் முடிவுக்கு பின்னர், நவம்பர் 1922-ல் அவரை இஸ்தான்புல் கலீபாவாக துருக்கி அரசு நியமித்தது.
ஆனால் 1924ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி கலீபா நியமனத்தை ரத்து செய்த துருக்கி, அப்துல் மஜீத் மற்றும் அவரது குடும்பத்தினரை ரயில் மூலம் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைத்தது.
அவருக்கு ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் அலி கானிடமிருந்து உதவி கிடைத்தது. மிர் அலி கானை டைம்ஸ் இதழ் உலகின் மிகவும் பணக்கார மனிதர் என ஒரு காலகட்டத்தில் விவரித்திருந்தது.
அப்துல் மஜீத்திற்கு உதவ முன்வந்த நிஜாம்
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்த ஹைதாராபாத்தின் ஏழாவது நிஜாம் ஒரு இஸ்லாமியர். ஆனால் அதன் பெரும்பான்மை மக்கள் இந்து. அவர் கோயில்கள், குருத்வாராக்கள், மசூதிகள் மற்றும் சூஃபி தர்காக்களுக்கு புரவலராக இருந்தார்.
மொகலாய பேரரசின் கலாசார பாரம்பரியமாக கருதப்பட்ட ஹைதராபாத் அரண்மனைகள் ஆடம்பரத்திற்கு பெயர் போனவை.
இஸ்லாமிய சமூகத்தில் தனது கெளரவத்தை உயர்த்திக் கொள்ள அப்துல் மஜீத்திற்கு உதவ நிஜாம் முன்வந்தார்.
1924 அக்டோபர் மாதத்தில் அப்துல் மஜீத் பிரான்ஸின் நைஸ் நகரில் ஒரு கடலோர மாளிகையில் குடியமர்ந்தார். இந்த மாளிகைக்கான பணத்தை நிஜாம் கொடுத்தார்.
அங்கிருந்து கலீபா முறையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை அப்துல் மஜீத் தொடங்கினார். அவர் மார்ச் 1931-ல் மெளலானா செளகத் அலியுடன் கூட்டணி அமைத்தார். இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு முகமாக இருந்த மெளலானா செளகத் அலி, மகாத்மா காந்திக்கு நெருக்கமானவராகவும் இருந்தார்.
அப்துல் மஜீத்தின் கவனம் அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெருசலேமில் நடைபெறவிருந்த இஸ்லாமிய கூட்டத்தின் மீது இருந்தது.
கலீபாவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக ஜெருசலேமிற்கு சென்று இஸ்லாம் காங்கிரஸில் உரையாற்ற அப்துல் மஜீத் திட்டமிட்டார். அவரது திட்டம் ஆங்கில அரசால் தடுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பாலத்தீனத்திற்குள் நுழைய அப்துல் மஜீத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அவரிடம் மற்றொரு திட்டமிருந்தது.
1931 அக்டோபரில் அப்துல் மஜீத்தின் மகளான இளவரசி துர்ரு ஷெஹ்வார், நிஜாமின் மூத்த மகன் இளவரசர் ஆசம் ஜா ஆகியோர் திருமணம் செய்துகொள்ள செளகத் அலியும், ஆங்கிலேய அறிஞர் மர்மடியூக் பிக்தாலும் ஏற்பாடு செய்தனர்.
"இந்த இளம் இணை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனை பெற்றெடுத்தால், அவர் உண்மையான கலீபாவாக அறிவிக்கப்படலாம்," என டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது.
"ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகின் மீதும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த இந்த திருமணம் தவறாது," என அப்துல் மஜீத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருமணம் நைஸ் நகரில் நவம்பர் மாதம் நடைபெற்றது. ஒரு சில நாட்களுக்கு பின்னர், செளகத் அலியின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு பாம்பேவிலிருந்து வெளியான உருது நாளிதழ்கள் கலீபா மீண்டும் பதவியேற்பார் என்ற தீர்க்கதரிசனத்தை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.
இது ஆங்கிலேய அதிகாரிகளை எச்சரிக்கையடையச் செய்தது. அப்துல் மஜீத் ஹைதராபாத் வருவதை ரத்து செய்யுமாறு நிஜாமை ஆங்கிலேய அரசு நிர்பந்தித்தது.
ஆவணம் குறித்த கேள்விகள்
திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு உலகின் வரலாற்றையே மாற்றக்கூடிய ஆவணம் ஒன்றில் அப்துல் மஜீத் கையொப்பமிட்டதாக சிலர் நம்புகின்றனர்.
இந்த ஆவணத்தை 2021-ல் சையது அகமது கான் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் கண்டுபிடித்தார். இந்த குடும்பத்தினர் எனது ஆய்விற்காக அவர்களது வீட்டிற்கு என்னை ஏப்ரல் 2024-ல் அழைத்திருந்தனர். இந்த ஆவணத்தை தனது தாத்தாவின் ஆவணங்களுக்கு இடையே டிசம்பர் 2021-ல் அவர் கண்டெடுத்தார் அகமது கான்.
சையத் மொகமது அம்ருதின் கான், ஏழாவது நிஜாமின் ராணுவ செயலாளராக இருந்தவர். அவர் 2012ஆம் ஆண்டு தனது 99ஆவது வயதில் மரணமடைந்தார்.
கனமான தாளில் அரபி எழுத்தில் எழுதப்பட்ட அந்த ஆவணம் நிஜாமுக்கு அப்துல் மஜீத்தால் எழுதப்பட்டிருந்தது. நைஸ் நகரில் திருமணம் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பிறகு அந்த ஆவணம் எழுதப்பட்டிருந்தது.
இந்த ஆவணத்தின்படி, அப்துல் மஜீத் கலீபா பதவியை நிஜாமிற்கு மாற்றியிருக்கிறார். இது இளவரசர் ஆசம்- துர்ரு ஷெஹ்வார் தம்பதியின் மகன் பிறக்கும் வரை ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டியது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
துருக்கி எழுத்தாளர் முராட் பார்டாக் உள்ளிட்ட சில நிபுணர்கள் இந்த ஆவணத்தை போலியானது என்று கூறியுள்ளனர்.
"இந்த ஆவணம் சில ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது. எனவே இது போலியானது," என்கிறார் முராட் பார்டாக். "இந்த ஆவணத்தில் உள்ள கையொப்பங்கள் அந்த நபர்களின் உண்மையான கையொப்பங்கள் அல்ல," என்று அவர் சொல்கிறார்.
ஆனால் இந்த ஆவணம் உண்மையானது என சிலர் சொல்கின்றனர்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் கன்வெர்ஷன் ஆஃப் மேனுஸ்கிரிப்ட்ஸ் எனப்படும் மேலாண்மை மற்றும் ஆவணங்கள் காப்பு நிறுவனத்தில் பணியாற்றும் சையத் அப்துல் காத்ரி, "இந்த ஆவணத்தில் இருக்கும் அப்துல் மஜீத்தின் கையொப்பம் மற்ற ஆவணங்களில் உள்ள அவரது கையொப்பத்தை ஒத்திருக்கிறது," என்று தெரிவித்தார்.
"இளவரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட அதே ஆழமான கருப்பு மைதான் இது," என்கிறார் காத்ரி.
அவர், "இதுபோன்ற காகிதங்கள் ஆட்சியாளர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. இவை சாமானிய மக்களின் கைகளுக்கு எட்டாதவை." எனச் சொல்கிறார்.
இந்தியாவில் சிலர் இதை ஒப்புக்கொள்கின்றனர். இந்திய அரசின் சலார் ஜங் அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற அகமத் அலி, "கலீபா என்கிற வார்த்தையை தவிர பிற வார்த்தைகளும் உண்மையானவை. அவை மற்ற ஆவணங்களுடன் ஒத்துப்போகின்றன." எனச் சொல்கிறார்.
இந்த விவாதம் தொடர்கிறது. அவரது குடும்பத்தின் சார்பில் பேசிய சையத் அகமத் கான், "மத ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கலீபா முறையை மீட்டெடுக்க எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை," என்று சொல்கிறார்.
சிறப்புத் திட்டம்
இந்த மர்மம் இருந்தாலும், கலீபா அதிகாரம் ஹைதராபாத்தில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என அப்துல் மஜீத் விரும்பியதற்கு எனக்கு வேறு இடத்தில் வலுவான ஆதாரங்கள் கிடைத்தன.
துர்ரு ஷெஹ்வார் 1933ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி நைஸ் நகரில் முகரம் ஜாவை பெற்றெடுத்தார். அவர் அப்துல் மஜீத் மற்றும் நிஜாமின் பேரன்.
முகரம் ஜா குழந்தையாக இருந்த போது, தனக்கு நெருக்கமானவர்களிடம் தனது வாரிசு முகரம் தான், ஆசம்கான் அல்ல என நிஜாம் கூறியுள்ளார் .
கலீபா அப்துல் மஜீத் ஆகஸ்ட் 1944-ல் மரணமடைந்தார். 1944 நவம்பரில் சர் ஆர்தர் லோதியன் ஹைதராபாத்தில் உள்ள தனது பிரதிநிதிக்கு ஒரு ரகசிய கடிதம் எழுதியிருந்தார்.
"அப்துல் மஜீத்தின் உயிலை பிரதமர் பார்த்திருக்கிறார். அவரது பேரன் அடுத்த கலீபாவாக பொறுப்பேற்கவுள்ள இந்தியாவில் அப்துல் மஜீத்தின் உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என விரும்புகிறார்."
1946-ல் இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளிடையே எழுதப்பட்ட கடிதங்களும், அப்துல் மஜீத், முகரமை தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார் என்பதையும் அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார் என்பதையும் காட்டுகின்றன.
அதே ஆண்டில் தற்போது மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக இருக்கும் குல்தாபாத்தில் ஒரு கல்லறையை கட்ட நிஜாம் உத்தரவிட்டார். இது ஹைதராபாத்தின் முதல் நிஜாம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இருந்தது.
ஆங்கிலேய அரசு இந்தியாவை விட்டுச் சென்ற பின்னர் 1948 செப்டம்பரில் அந்த கல்லறை கட்டி முடிக்கப்பட்டது.
அதே மாதத்தில் இந்திய ராணுவம் படையெடுத்து, நிஜாமை பதவியிறக்கியது. இந்த படையெடுப்பில் சுமார் 40,000 பேர் உயிரிழந்தனர். அப்துல் மஜீத்தின் உடலை இந்தியாவில் புதைக்கும் திட்டம் தோற்றது.
அவர் இறந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954-ல் அப்துல் மஜீத்தின் உடல் செளதி அரேபியாவில் மதினா நகரில் புதைக்கப்பட்டது.
துருக்கியில் முகரம் ஜா உயிரிழப்பு
1967-ல் தனது பாட்டனார் மரணமடைந்த பின்னர் முகரம் அதிகாரமற்ற நிஜாமானார். கலீபாவாக பதவியேற்கும் சூழலில் அவர் இருக்கவில்லை.
1971-ல் இந்திய அரசு அவர்களது நில உரிமையை ரத்து செய்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்தது.
ஜா வழக்கத்திற்கு மாறான தீர்வை தேர்ந்தெடுத்து 1973-ல் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் 2,00,000 ஹெக்டேர் பரப்பளவிலான ஆட்டுப்பண்ணையை வாங்கினார்.
பின்னர் துருக்கிக்கு இடம்பெயர்ந்த அவர், 2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி இஸ்தான்புல்லில் மரணமடைந்தார்.
அவரது மூத்த மகன் இளவரசர் அஸ்மத் ஜா ஒன்பதாவது நிஜாமாக பட்டம் பெற்றார். ஆங்கிலேய திரைப்படத் தயாரிப்பாளரான அவருக்கு ஹைதராபாத்தில் பல சொத்துகள் உள்ளன.
அப்துல் மஜீத் மற்றும் மிர் ஆஸ்மன் அலி வாரிசுகளின் இணைப்பு, இஸ்லாத்தின் இரண்டு பெரிய அரச குடும்பங்களின் இணைவாக இஸ்லாமிய உலகில் பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேய ஆட்சியின் முடிவில் ஹைதராபாத் ஒரு சுதந்திர நாடாக உருவெடுத்திருந்தால், இளவரசர் முகரம் ஜா நிஜாமாக பதவியேற்றபின் கலீபா பதவிக்கு உரிமை கோரியிருப்பார்.
ஆனால் அது நடக்கவில்லை. வரலாற்றாசிரியர் ஜான் ஜூப்ரர்ஜைகி, முகரம் ஜாவை துருக்கியில் 2005ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தார். இந்த வரலாறு குறித்து என்ன நினைக்கிறார் என அவரிடம் நான் கேட்டேன்.
ஜாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது கலீபா அப்துல் மஜீத்தின் உயில் தொடர்பான ஒரு முக்கியமான ஆவணத்தை ஜூப்ரர்ஜைகி கண்டுபிடித்தார்.
"மிர் ஓஸ்மான் அலி கான் திட்டம் தீட்டுவதில் ஒரு புத்திசாலி." என அவர் சொல்கிறார்.
அவர் தனது பேரனை கலீபாவாக்க விரும்பியதாக ஜூப்ரர்ஜைகி சொல்கிறார்.
2005-ல் ஜூப்ரர்ஜைகி ஜாவை சந்தித்த போது, அவர் "கவரக்கூடியவராக, நாகரீகமானவராகவும், தாராள குணமுள்ளவராகவும் இருந்ததாக" அவர் கண்டார்.
"அவர் வாழ்நாளில் சந்திக்க வேண்டியிருந்தவை குறித்து அவர் கவலைகொண்டார்." என்கிறார் ஜூப்ரர்ஜைகி.
கடைசி கலீபாவின் பேரன் ஹைதராபாத்தில் உல்ள மெக்கா மஸ்ஜித்தில் புதைக்கப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)