சென்னை நீர்நிலைகளில் நச்சுக் கழிவுகளா? ஐஐடி ஆய்வும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுப்பும்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை நீர்நிலைகளில் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பி.எஃப்.ஏ.எஸ் எனப்படும் நிரந்தர ரசாயனங்கள், அனுமதிக்கத்தக்க அளவைவிட அதிகளவில் இருப்பதாக, சென்னை ஐஐடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆய்வறிக்கை ஒன்றை சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை நீர்நிலைகளின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ரசாயனங்கள் குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

ஐஐடி நிறுவனம் தன் ஆய்வில் இத்தகைய ரசாயனங்கள் புற்றுநோய் வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள நிலையில், அந்த ஆய்வை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

ஆனால், இந்த ஆய்வை மேற்கொண்ட ஐஐடி ஆய்வுக்குழுவில் ஒருவரான பேராசிரியர் இந்துமதி பிபிசி தமிழிடம் பேசியபோது, "நாங்கள் எந்தெந்த இடங்களில் ஆய்வை மேற்கொண்டோமோ அதே இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே சரியாக இருக்கும்" என்றார்.

நீர்நிலைகளில் பி.எஃப்.ஏ.எஸ் மாசுபாடு இருப்பதாகக் கூறும் ஐஐடி ஆய்வு முடிவுகளை மறுத்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம், அதே நேரம் இரும்பு, ஃப்ளோரைடு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணன்.

பி.எஃப்.ஏ.எஸ் என்பது என்ன?

பாலிஃப்ளோரோல்கைல் சப்ஸ்டன்சஸ் (polyfluoroalkyl substances) என்பதன் சுருக்கமே பி.எஃப்.ஏ.எஸ் . கரிம ரசாயனங்களை இது உள்ளடக்கியுள்ளது.

இந்த ரசாயனம், நீரில் எளிதில் உடையாது, அழியாது என்பதால், 'நிரந்தர ரசாயனங்கள்' (Forever Chemicals) என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரசாயனம் நீரில் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிப்பதற்கான தர நிர்ணய அளவீடு இந்தியாவில் இல்லை.

"பி.எஃப்.ஏ.எஸ்-ஐ பொறுத்தவரை இந்தியாவில் அதற்கான தர நிர்ணயம் இல்லை. அமெரிக்கா அல்லது உலக சுகாதார மையம் என்ன வகுத்துள்ளதோ அதைத்தான் பின்பற்ற வேண்டியுள்ளது," என்கிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பிரபாகரன் வீரஅரசு.

இந்த ரசாயனங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நான்-ஸ்டிக் பாத்திரங்கள், சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தும் பொருட்கள், ரெயின்கோட், உணவு பேக்கேஜிங் செய்வதற்கான பொருட்கள், ஏரோஸ்பேஸ், வாகனம், கட்டுமானம் மின் உபகரணங்கள் போன்ற துறைகளின் உற்பத்திகள் ஆகியவற்றில் இந்த ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

"இந்த ரசாயனங்கள், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளுடன் நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரிலும் கண்டறியப்பட்டுள்ளன" என்று ஐஐடி ஆய்வு கூறுகிறது.

ஆய்வில் தெரியவந்தது என்ன?

சென்னை ஐஐடி, சென்னை நீர்நிலைகளில் நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை கடந்தாண்டு ஏப்ரல் மாதம், என்விரான்மென்டல்சயின்சஸ் யூரோப் ' எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியானது.

சென்னையின் முக்கிய நீர்நிலைகளான அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி போன்ற நீர்நிலைகளில் மாதிரிகளை எடுத்து ஐஐடி சோதித்தது. இதுதவிர, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பெருங்குடி குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள நீர் மாதிரிகளையும் பரிசோதித்தது. அந்த மாதிரிகளில், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) குறிப்பிடும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் மிக அதிகமாக இருப்பதாக தெரியவந்தது என ஐஐடி குறிப்பிட்டுள்ளது.

சுகாதார பாதிப்புகள்

இந்த ரசாயனங்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பேசிய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர், "இதனால், சரும நோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிராங்கடீஸ், சளி, இருமல், வீசிங் உள்ளிட்டவை ஏற்படலாம். எந்த ரசாயனமாக இருந்தாலும் நீண்ட காலத்துக்கு நுகரும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிரந்தரமான ரசாயனங்கள் இவை. ஃபுளோரோ கலந்திருக்கும் எந்த ரசாயனமாக இருந்தாலும் சரும நோய் முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும். பிசிஓடி, ஹார்மோன் பிரச்னைகளை பெண்களுக்கு ஏற்படுத்தும்" என்றார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது என்ன?

சென்னையின் நீர்நிலைகளில் குறிப்பிடத்தக்க அளவு பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்தது. அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் 30 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அளவிடத்தக்க அளவை விட குறைவாகவே அந்த ரசாயனங்கள் இருப்பதாக வாரியம் (Below Limit of Quantification) தெரிவித்துள்ளது.

எனினும், சில பகுதிகளில், இரும்பு மற்றும் ஃபுளோரைடு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இருங்காட்டுகோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தண்ணீரில் இருக்கக்கூடிய இத்தகைய ரசாயனங்கள் குறித்து பேசிய 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு, "அடிப்படையான சில ரசாயனங்களின் அளவுகளை மட்டுமே பரிசோதிப்பார்கள். கன உலோகங்களை தொடர்ச்சியாக பரிசோதனை செய்ய மாட்டார்கள். எனவே, இத்தகைய பரிசோதனைகளை வைத்து குடிநீர் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. இந்த ரசாயனங்கள் குறைவான அளவில் இருந்தாலும் பிரச்னைதான்" என்றார்.

பி.எஃப்.ஏ.எஸ் போன்ற ரசாயனங்கள் வீட்டு உபயோக பொருட்களில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்தே அவை அதிகம் கலப்பதாக கூறுகிறார் அவர்.

"தொழிற்சாலைகளில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை ஆய்வுக்கு சென்றாலும் இணையம் வாயிலாகவும் கண்காணித்தாலும் விதி மீறல்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்பாக சேமித்து வைக்காதது, மழை காலங்களில் திறந்துவிடுவது போன்றவை நீர்நிலைகளில் அவை கலப்பதற்கான காரணங்களாக உள்ளன." என்கிறார், பிரபாகரன்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணன், "எந்தவொரு கழிவும் நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தொழிற்சாலைகள் Zero liquid discharge முறை மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும், இல்லையெனில், கழிவுகளை அவர்களின் ஆலைகளிலேயே வைத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறோம்" என தெரிவித்தார்.

வீடுகளிலிருந்து உருவாகும் கழிவுநீரை தடுத்து அதை சுத்திகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐஐடி மேற்கொண்ட ஆய்வில் சில இடங்களில் குறைவான செறிவுடன் ரசாயனங்கள் இருக்கலாம் என்றும் இரண்டுக்குமான முடிவுகளில் சில வித்தியாசங்கள் இருக்கும் என்றும் கூறினார்.

எனினும், தாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார், ஐஐடி பேராசிரியர் இந்துமதி.

"எந்தெந்த இடங்களில் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்தது என்பது தெரியவில்லை. நாங்கள் மாதிரிகளை எடுத்த இடங்களை பரிசோதித்து ஒப்பிட்டார்களா என்பது தெரியவில்லை. ஒரேமாதிரியான ஆய்வு முறைமைகள், அதிஉயர் உபகரணங்களை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே சரியான தரவுகள் கிடைக்கும். மற்ற கருவிகள், குறைந்தளவிலான அளவீடுகளை காட்டாது, அதிகமாக உள்ளவற்றை மட்டும்தான் காண்பிக்கும். அவற்றை, அளவிட முடியாத அளவில் இருப்பதாகக் காட்டிவிடும்" என்றார்.

இதற்கு பதிலளித்த கண்ணன், "அதி உயர் கருவிகளையே நாங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினோம். வருங்காலத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து ஒரே இடங்களில் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய தயாராக இருக்கிறோம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)