You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?
- எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ்
- பதவி, பிபிசி செய்திகள்
பண்டைய எகிப்தில் மம்மி ஆக்கப்பட்ட உடல்கள், 5,000 ஆண்டுகளாக சர்கோபாகஸ் எனப்படும் கல்லால் ஆன சவப்பெட்டியில் இன்னும் நல்ல வாசனையுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபோன்ற 9 மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்து வந்த வாசனையின் விதத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் வாசனையை கண்டறிந்தனர்.
இந்த வாசனையை, வேதியியல் ரீதியாக மீண்டும் உருவாக்கினால், மற்றவர்களும் இந்த மம்மிகளின் வாசனையை அனுபவிக்கலாம் என்றும் உள்ளே இருக்கும் உடல்கள் எப்போது அழுக ஆரம்பிக்கும் என்பதை அறிய இது உதவும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
"மம்மி ஆக்கப்பட்ட உடல்களை முகர்ந்து பார்த்த அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆதலால் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் இதேபோன்ற வாசனையை மீண்டும் உருவாக்கி வருகிறோம்", என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சிசிலியா பெம்பிப்ரே பிபிசியிடம் தெரிவித்தார்.
வரலாற்று செயல்முறை
உடல்களை மம்மியாக மாற்றும் செயல்முறையின் போது, பண்டைய எகிப்தியர்கள் அந்த உடலை நல்ல மணம் மிக்க பொருட்களால் நிரப்புவர். இறந்த பிறகு மறுமைக்குள் நுழைய ஆன்மாவைத் தயார்படுத்துவதற்கான ஒரு முக்கிய பகுதியாக இதனை அவர்கள் செய்துவந்தனர்.
இதனால், அரசர்கள் மற்றும் பிற பிரபுக்களின் உடல்களை வாசனை தரும் எண்ணெய்கள், மெழுகுகள் மற்றும் தைலம் ஆகியவற்றால் நிரப்பினர்.
"திரைப்படங்களிலும் புத்தகங்களிலும், மம்மி செய்யப்பட்ட உடல்களை முகர்ந்து பார்ப்பவர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும்", என்று பெம்பிப்ரே கூறினார்.
"இந்த மம்மிகளிலிருந்து வந்த மணம் எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம்."
அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்ட ஆசிரியர்கள், கல்லால் ஆன அந்த சவப்பெட்டிக்குள் இருக்கும் மம்மிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு அந்த வாசனையை பெற வேண்டியிருந்தது.
லண்டன் பல்கலைக் கழக கல்லூரி மற்றும் ஸ்லோவேனியாவில் உள்ள லுப்லஜானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு சிறிய குழாயை அந்த சவப்பெட்டிக்குள் செருகி இந்த செயல்பாட்டை செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களால் எந்த உடல் மாதிரிகளையும் எடுக்காமல் வாசனையை மட்டும் எடுக்க முடிந்தது.
இந்த விஞ்ஞானிகள் எப்போதும் புதிய தகவல்களைக் கண்டறிய எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வழிகளைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள் என்று பெம்பிப்ரே விளக்கினார்.
அருங்காட்சியகங்களில் இறந்தவர்களின் உடல்களை (மம்மிகளை) முகர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள், பண்டைய எகிப்தையும் உடல்களை பாதுகாக்கும் அவர்களது செயல்முறையையும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அனுபவிக்க முடியும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மேற்பார்வையாளரான ஆலி லூக்ஸ், வாசனையின் அரசியல் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். மம்மிகள் குறித்து அறிந்து கொள்வதற்கு "உண்மையிலேயே புதுமையான" வழி இது என்று விவரித்தார்.
"உங்கள் மூக்கைப் பயன்படுத்துவது ஒரு வலுவான உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான எதிர்வினையை உருவாக்குகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"[பண்டைய எகிப்தில்] சமூக, மத மற்றும் தனிப்பட்ட நடைமுறைகளுக்கு வாசனைகள் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் மேலும் கூறினார்.
ஏபி செய்தி முகமையிடம் பேசிய ஆய்வுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான மதிஜா ஸ்ட்ரிச், ஒரு 'மம்மி' எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தது என்பதைக் கூட வாசனைகள் குறிக்கலாம் என்று கூறினார்.
"இந்த அணுகுமுறை அருங்காட்சியக சேகரிப்புகளுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
அருங்காட்சியக பார்வையாளர்களுக்கு மம்மிகள் பற்றிய புதிய உணர்வுப்பூர்வமான பார்வையை வழங்குவதோடு, இந்த கண்டுபிடிப்பு மம்மிகளைப் பாதுகாப்பவர்களுக்கு ஒரு சாத்தியமான திருப்புமுனையையும் அளிக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் வாயு குரோமடோகிராபி எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்கோபாகஸுக்குள் இருக்கும் பல்வேறு நாற்றங்களைப் பிரித்து, பின்னர் அவற்றை ஒன்றிணைந்து நறுமணத்தை உருவாக்குகின்றனர்.
எம்பாமிங் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் விலங்கு கொழுப்புகளின் சிதைவுடன் தொடர்புடைய நாற்றங்களை அவர்கள் கண்டறிந்தனர், இது உடல் சிதைவடையத் தொடங்கியுள்ளதைக் குறிக்கலாம்.
இதன் மூலம், உடல்களை பாதுகாத்து வைப்பதற்கு சிறந்த வழியைக் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சி கட்டுரை கூறுகிறது.
"இந்த சேகரிப்பை கவனித்துக் கொள்ளும் பாதுகாவலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் [ஏனெனில்] இது எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்ய முடியும்," என்று பெம்பிப்ரே கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)