முகலாய பேரரசர் ஔரங்கசீப் மகராஷ்டிராவில் மிகவும் எளிய கல்லறையில் புதைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி

    • எழுதியவர், ஶ்ரீகாந்த் பாங்கலே
    • பதவி, பிபிசி மராத்தி

ஒளரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் ஒளரங்காபாத் நகருக்கு 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்தாபாத் நகரில் அமைந்துள்ளது.

ஆனால், டெல்லி சுல்தானகத்தின் பேரரசராக இருந்த ஒளரங்கசீப் குல்தாபாத்தில் ஏன் புதைக்கப்பட்டார் எனப் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி நான் குல்தாபாத் சென்றேன். குல்தாபாத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள கதவுக்குப் பெயர் நாகர்கானா.

நீங்கள் நகருக்குள் நுழைந்தவுடனே ஒளரங்கசீப்பின் கல்லறை வலதுபுறம் தெரிகிறது.

இந்தக் கல்லறை தற்போது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருப்பதுடன் தேசிய நினைவுச் சின்னமாகவும் உள்ளது.

ஒளரங்கசீப்பின் கல்லறைக்குச் செல்லும் முன்பாக காலணிகளைக் கழற்ற வேண்டும். நான் கல்லறையின் கதவை அடைந்தபோது ஷேக் சுக்கூரை அங்கு சந்தித்தேன்.

அது அதிக கூட்டம் இல்லாத ஒரு காலைப் பொழுதாக இருந்தது. ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பார்க்க வெகு சிலரே வந்திருந்தனர்.

கல்லறை பற்றிய தகவல்களை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் ஷேக் சுக்கூர்.

ஒளரங்கசீப்பின் கல்லறை மிகவும் எளிமையாகக் கட்டப்பட்டிருந்தது. அங்கு வெறும் மண் மட்டும்தான் இருக்கிறது. கல்லறை ஒரு சாதாரண வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. சமாதியின் மீது ஒரு செடி நடப்பட்டுள்ளது.

ஷேக் சுக்கூர் ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பராமரித்து வருகிறார். அவருக்கு முன், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து தலைமுறையாக அதைப் பராமரித்து வந்தனர்.

தனது சமாதி மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று பேரரசர் ஒளரங்கசீப் உத்தரவிட்டிருந்ததாக ஷேக் சுக்கூர் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, "எனது கல்லறை மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும். அது காய்கறிச் செடிகளால் மூடப்பட்டிருக்க வேண்டும், அதன் மீது கூரை இருக்கக்கூடாது" என ஒளரங்கசீப் கூறியிருக்கிறார்.

இந்தக் கல்லறையின் அருகே ஒரு கல்வெட்டில் பேரரசர் ஒளரங்கசீப்பின் முழுப் பெயர் - அப்துல் முஸாபர் முஹியுதீன் ஒளரங்கசீப் ஆலம்கிர் - எழுதப்பட்டுள்ளது.

ஒளரங்கசீப் 1618ஆம் ஆண்டு பிறந்து 1707ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஹிஜிரி நாள்காட்டியின் அடிப்படையிலான ஒளரங்கசீப்பின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகள் அந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

ஒளரங்கசீப் ஏன் ஒளரங்காபாத்தில் புதைக்கப்பட்டுள்ளார்?

ஒளரங்கசீப் 1707ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருக்கும் அகமத்நகரில் மரணமடைந்தார். அவரது உடல் குல்தாபாத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தனது குரு, சூஃபி துறவி சையது ஜைனுதீனுக்கு அருகே புதைக்கப்பட வேண்டும் என ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்.

"குவாஜா சையது ஜைனுதீனை அவர் தனது ஆன்மீக வழிகாட்டியாகக் கருதியது, ஒளரங்கசீப் எழுதிய உயிலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ஜைனுதீன் ஒளரங்கசீப்பிற்கு வெகு முன்னரே இந்த உலகைவிட்டுச் சென்றுவிட்டார்," என விளக்குகிறார் வரலாற்று ஆசிரியர் துலாரி குரேஷி.

"ஒளரங்கசீப் அதிகம் படிப்பதுடன் குவாஜா சையது ஜைனுதீன் சிராஜை பின்பற்றுவார். அதனால்தான் தனது கல்லறை சிராஜ்ஜின் கல்லறைக்கு அருகில் இருக்க வேண்டும் என ஒளரங்கசீப் சொல்லியிருக்கிறார். தனது கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஒளரங்கசீப் தனது உயிலில் விரிவாக எழுதி வைத்திருந்தார்" என்று அவர் விளக்கினார்.

மேற்கொண்டு பேசிய குரேஷி, "தனது கடும் உழைப்பால் சேர்த்த பணம் அனைத்தையும் தனது கல்லறை மீது செலவு செய்ய வேண்டும் என ஒளரங்கசீப் உயில் எழுதியிருந்தார். தனது சமாதி மீது ஒரு சிறிய காய்கறிச் செடி நடப்பட வேண்டும் எனவும் அவர் விரும்பியிருந்தார். தனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒளரங்கசீப் தொப்பிகள் தைத்துக் கொடுப்பார். அவர் புனித குர்ஆனையும் கைகளால் எழுதினார்" என்று கூறினார்.

குரேஷியின் கூற்றுப்படி, ஒளரங்கசீப் இறந்த பின்னர் அவரது மகன் அசம் ஷா அவரது கல்லறையை குல்தாபாத்தில் கட்டினார். ஒளரங்கசீப்பின் விருப்பப்படி, அவர் சையது ஜைனுதீன் சிராஜ் அருகே ஓர் எளிய சமாதியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அதற்கு முந்தைய பேரரசர்களின் கல்லறைகளைப் பொறுத்தவரை, ஆடம்பரத்திற்கு முழு கவனம் செலுத்தப்பட்டதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் ஒளரங்கசீப்பின் கல்லறை வெறும் மரத்தால் செய்யப்பட்டது."

"கடந்த 1904-05ஆம் ஆண்டு கர்சன் பிரபு இங்கு வந்தபோது, ஒரு மாபெரும் அரசனின் கல்லறை எப்படி இவ்வளவு எளிமையாக இருக்க முடியும் எனக் கருதி, கல்லறையைச் சுற்றி பளிங்குக் கற்களால் ஆன பாதுகாப்பு வளையத்தை அமைத்து அலங்கரித்தார்," என்று குரேஷி விவரித்தார்.

'பூமியில் சொர்க்கம்'

குல்தாபாத் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம். பத்ர மாருதி கோவில் தவிர, பல சூஃபி துறவிகளின் இடமும், முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் உள்படப் பல பிரபுக்களின் கல்லறைகளும் இங்கு அமைந்துள்ளன.

குல்தாபாத் முன்னதாக பூமியின் மீது அமைந்துள்ள சொர்க்கம் எனவும் அழைக்கப்பட்டது.

குல்தாபாத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய வரலாற்றாசிரியர் சங்கெட் குல்கர்னி, "காபூல், புக்காரா, கந்தஹார், சமர்கண்ட், இரான், இராக் மற்றும் தொலைதூர இடங்களில் இருந்து சூஃபிக்கள் குல்தாபாத்திற்கு வந்தனர்.

இந்தியாவின் மத்திய நிலப்பரப்பில் குல்தாபாத் இஸ்லாத்தின் வலுவான இடமாகவும் சூஃபி துறவிகளின் மையமாகவும் இருந்தது. நம் நாட்டைச் சேர்ந்த சூஃபிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து சூஃபிக்கள் இங்கு வந்தார்கள். அவர்களது சமாதிகள் இங்கு குல்தாபாத்தில் இருக்கின்றன" என்றார்.

இஸ்லாமிய இயக்கத்தின் மையமாக மாறிய குல்தாபாத்

வரலாற்றாசியர்கள் கூற்றுப்படி, சூஃபி துறவி ஹஸ்ரத் நிஜாமுதின் ஒளலியா, தனது சீடர் முண்டாஜிபுதீன் பக்ஸ் மற்றும் 700 சூஃபிகள், ஃபக்கீர்களை டெக்கான் பகுதியில் இஸ்லாத்தை பரப்ப தேவகிரிக்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் டெல்லியின் சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராஜா ராம்தேவ்ராஜ் யாதவை அடிபணிய வைத்திருந்தார்.

முன்டாஜிபுதீன் தெளலதாபாத்தை தனது தலைமை இடமாக்கிக் கொண்டு, தன்னுடன் வந்த சூஃபிக்களையும், பக்கீர்களையும் தென் இந்தியாவில் இஸ்லாத்தை பரப்ப அனுப்பி வைத்தார். அவர் இங்கு 1309ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரது தர்கா குல்தாபாத் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டது.

அதுகுறித்து விளக்கினார் வரலாற்றாசிரியர் சங்கேட் குல்கர்னி: "முண்டாஜிபுதீனின் மரணத்திற்குப் பிறகு, நிஜாமுதீன் ஒளலியா தனக்குப் பிறகு வந்த புர்ஹனுதீ கரீப் நவாஸை, மேலும் 700 பல்லக்குத் தூக்கிகளுடன் (பக்கீர்கள் மற்றும் சூஃபிக்கள்) டெக்கானுக்கு அனுப்பி வைத்தார்.

இறைத்தூதர் முகது நபியின் உடையில் ஒரு பகுதியையும் அவர் முகத்தில் இருந்த ரோமத்தையும் அளித்தார். அப்போது முதல் குல்தாபாத் இஸ்லாத்தின் மையமாக மாறியது. புர்ஹனுதீன் இங்கு 29 ஆண்டுகள் சேவையாற்றினார்."

"பின்னாளில் சுல்தான் முகமது துக்ளக் தேவகிரியைத் தனது தலைநகராக்கிக் கொண்டார். அந்த நேரத்தில் நீதிமன்றத்தின் காஸியும், இஸ்லாமிய அறிஞருமான தாவூத் ஹுசைன் ஷிராஜியை தனக்குப் பின் பதவியேற்கவுள்ளவராக ஜைனூதீன் நியமித்தார். ஆனால் யாரையும் தகுதியுள்ளவராகக் கருதாததால் ஜைனூதீன் தனக்குப் பின் பொறுப்பேற்க உள்ளவரை அறிவிக்கவில்லை."

முகலாய பேரரசர் ஒளரங்கசீப், 17ஆம் நூற்றாண்டில் சிராஜியின் தர்காவுக்கு சென்றபோது, அவர் 14ஆம் நூற்றாண்டில் டெக்கானில் மேற்கொண்ட பணிகளால் ஊக்கமடைந்தார். ஜைனூதீன் ஷிராஜியின் கல்லறையை முத்தமிட்ட ஒளரங்கசீப் அவரைத் தனது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்தே, "நான் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இறக்கலாம், ஆனால் நான் இங்கு ஜைனுதீன் ஷிராஜியின் அருகே புதைக்கப்பட வேண்டும்" என்று ஒளரங்கசீப் கூறியதாக குல்கர்னி விளக்குகிறார்.

மகாராஷ்டிராவுடன் ஒளரங்கசீப்பின் தொடர்பு

ஷாஜகான் முகலாய அரசராக இருந்தபோது, அவர் தனது மூன்றாவது மகன் ஒளரங்கசீப்பை தெளலதாபாத்திற்கு அனுப்பி வைத்தார். ஒளரங்கசீப் 1636 முதல் 1644ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார். இது அவரது முதல் ஆளுநர் பதவி.

பின்னர் ஒளரங்கசீப்பிற்கு ஒளரங்காபாத்தை அதிகம் பிடித்ததால் தனது தலைமையகத்தை தெளலதாபாத்தில் இருந்து ஒளரங்காபாத்திற்கு மாற்றினார்.

"ஒளரங்கசீப் தெளலதாபாத் முதல் எல்லூரு வரை டெக்கான் பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தெளலதாபாத் முதல் எல்லூரு வரை ஒரு சாலையையும் அமைத்தார். 1652ஆம் ஆண்டு ஒளரங்கசீப்பிற்கு ஒளரங்காபாத் ஆளுநர் பதவி மீண்டும் கிடைத்ததால் இங்கு திரும்பினார்.

கடந்த 1652ஆம் ஆண்டு முதல் 1659 வரை ஒளரங்கசீப் ஒளரங்காபாத்தில் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். இதில் ஹிமாயத் பாக், ஃபோர்ட் ஆர்ச் போன்ற பல பூங்காக்களும் அடங்கும். முகலாய சுல்தானகத்தை கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரப்பியிருந்தார் ஒளரங்கசீப்" என்று விவரித்தார் குரேஷி.

ஆனால் "மகாராஷ்டிராவில் இருந்து மராத்தா படையெடுப்பு அதிகரித்து வந்தது. ஒளரங்கசீப் 1681-82ஆம் ஆண்டில் டெக்கானுக்கு திரும்பி 1707ஆம் ஆண்டு இறக்கும் வரை அங்கிருந்தார். ஒளரங்கசீப் அகமத்நகரில் 1707ஆம் ஆண்டு மரணமடைந்தார்" என்று அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாவுக்கு குல்தாபாத் முக்கியமானது

குல்தாபாத்தின் அடையாளம் ஒளரங்கசீப்பின் கல்லறையுடன் நின்று விடுவதில்லை. இங்கு பத்ர மாருதியின் புகழ்பெற்ற கோவில் ஒன்று உள்ளது. ஒளரங்கசீப்பின் பேரனின் மனைவி பனி பேகத்தின் பூங்கா இங்கு இருக்கிறது. அங்கு தோட்டத்தை அடுத்து ஒரு ஏரியும் இருக்கிறது.

அக்பருதீன் ஓவைசி வந்து சென்றபின் அரசியல் விமர்சனம் இருந்தாலும், சுற்றுலா கோணத்தில் குல்தாபாத் ஒரு முக்கியமான இடம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். அதற்கு வரலாற்று முக்கியத்துவமும் உள்ளது.

"சத்வாகனா வம்சத்தின் எச்சங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. ஒளரங்கசீப்பின் கல்லறையைத் தவிர, 12-15 புகழ்பெற்ற சூஃபி துறவிகளின் தர்காக்கள் இங்கு இருக்கின்றன. அங்கு ஒவ்வொரு ஆண்டும் உர்ஸ் நடத்தப்படுகிறது," என்கிறார் சங்கெட் குல்கர்னி.

குல்தாபாத்தில் இருக்கும் பத்ர மாருதி கோவில் ஹனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் வரும் புகழ்பெற்ற புனித தலம். ஒளரங்காப்பாத்தில். ஒளரங்கசீப் தனது மனைவிக்காக பிபி கா மக்பாராவை கட்டினார். இது டெக்கானின் தாஜ்மகால் எனவும் அறியப்படுகிறது.

முகலாய பேரரசர் ஒளரங்கசீப் தனது 87 ஆண்டுக்கால வாழ்க்கையில் 36-37 ஆண்டுகளை ஒளரங்காபாத்தில் கழித்ததுடன், அங்கேயே புதைக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)