You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துப்பாக்கிகளை மவுனமாக்கிய தேநீரும் பிஸ்கட்டும் - ஹமாஸை இஸ்ரேலிய மூதாட்டி சமாளித்தது எப்படி?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திப் பலரைக் கொன்றனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோரைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றனர்.
அப்போது தனது வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினரை டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார்.
அவர் அந்த நாளில் நடந்தவற்றை நினைவுகூர்கிறார்.
'நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்'
"வந்திருந்த ஆயுதக் குழுவினரில் ஒருவர் என்னிடம் 'நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்' என்று கூறியதாக அைத நாளை நினைவுகூர்ந்தார் ரேச்சல் எட்ரி.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் தனது வீட்டுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நுழைந்தபோது நடந்தவற்றை அவர் விவரித்தார்.
"நான் அவரிடம், 'நான் உண்மையிலேயே உன் அம்மாவைப் போன்றவள்தான். நான் உனக்கு உதவி செய்கிறேன். நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டேன்."
அதற்கு அந்த ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் கேட்டது: டீயும் பிஸ்கட்டும்.
அதனால், இந்த 65 வயதான, ஓய்வுபெற்ற பாட்டி, காஸாவிற்கு அருகில் உள்ள ஒபாகிம் நகரில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த ஐந்து ஹமாஸ் போராளிகளை அமைதிப்படுத்த தனது கைமணத்தில் செய்த மொராக்கோ பிஸ்கட்டுகளை வழங்கினார்.
பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறிய உரையாடல்
தானும் தன் கணவரும் மீட்கப்படும் வாய்ப்பு வரும் வரை நேரத்தை இழுப்பதற்காக, அவரது வீட்டிற்கு வந்திருந்த ஹமாஸ் போராளிகளுடன் எட்ரி உரையாடலில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அந்த சிறு உரையாடல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் போராளிகள் அவரையும் அவரது கணவரையும் பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்றபோது, ஏற்கெனவே தெற்கு இஸ்ரேலில் உள்ள அவரது சமூகத்தில் பலரைக் கொன்றிருந்தனர்.
அவரது பொறுமை மற்றும் விருந்தோம்பல் மூலம், அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர். இப்போது எட்ரி ஒரு தேசிய கதாநாயகி. இணையம் எங்கும் அவரது புகைப்படங்களும் மீம்களும் பகிரப்படுகின்றன. மேலும் அக்டோபர் 18ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் சென்றிருந்தபோது எட்ரியை சந்தித்துப் பேசினார்.
ஆயுதமேந்திய போராளிகளுடன் ‘பாட்டுக்குப் பாட்டு’
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், தனது அறையில் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் குழுவினர் ஐந்து பேரால் சூழப்பட்டிருந்த போதும், தனது அபாரமான எதிர்வினையைப் பற்றிப் பேசினார்.
"அப்போது மணி ஏற்கெனவே நான்கு ஆகியிருந்தது. நான் என் மனதுக்குள் இப்படிச் சொல்லிக் கொண்டேன்: ‘ஐயோ... அவர்கள் மதிய உணவு சாப்பிட வேண்டும். எனக்குப் பயமாக இருக்கிறது. பசியுடன் இருப்பவர்கள் தங்கள் பொறுமையை இழந்துவிடுவார்கள்," என்று அவர் கூறினார்.
அவர்கள் டீயும் பிஸ்கட்டும் உண்டபின் மிகவும் அமைதியானார்கள், என்கிறார் எட்ரி.
ஆனால், தன்னையும் தன் கணவரையும் இருபது மணிநேரம் துப்பாக்கி முனையில் வைத்திருந்த போராளிகளுக்கு எட்ரி வெறும் தேநீர் மற்றும் பிஸ்ட்டுகளை மட்டுமே தரவில்லை.
அவர் அந்த ஆயுதமேந்திய போராளிகளுக்கு அரபு மொழியில் பாடல்களைப் பாடினார். மேலும் அவர்கள் பதிலுக்கு ஹீப்ரு பாடல்களைப் பாடினர் என்று கூறுகிறார்.
"நான் உரையாடத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதை நான் ஒரு கணம் மறந்துவிட்டேன்," என்று எட்ரி இஸ்ரேலிய செய்தி வலைத்தளமான Ynet-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
எப்படிக் காப்பாற்றப்பட்டனர்?
இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, அவரது வீட்டிற்கு வெளியே இஸ்ரேலிய போலீஸ் குழு அவர்களை மீட்கத் தயாராகிக் கொண்டிருந்தது.
சுமார் 17 மணிநேரத்துக்குப் பிறகு வீட்டுக்குள் நுழைந்து அவர்கள் ஹமாஸ் போராளிகளைச் சுட்டுக் கொன்றனர்.
எட்ரிஸின் மகன் ஒரு உள்ளூர் போலீஸ்காரர். அவர் அந்த வீட்டின் வரைபடத்தை வரைந்து மீட்புக்கு உதவினார். மீட்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் எதிர்பாராத தருணத்தில் வீட்டிற்குள் நுழைந்தபோது போராளிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆனாலும், அவர்களது வீடு மோசமாகச் சேதமடைந்ததால், எட்ரியும் அவரது கணவரும் மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எல்லை கடந்த புகழ்
இந்தக் கதை இஸ்ரேலின் எல்லைகளுக்கு அப்பால் பரவத் தொடங்கியது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த புதன்கிழமை (அக்டொபர் 18) இஸ்ரேலுக்கு பயணம் செய்தபோது ஹமாஸ் தாக்குதலில் இருந்து தப்பியவர்களைச் சந்தித்தார். அப்போது, ரேச்சல் எட்ரியையும் சந்தித்தார்.
அவர் அமெரிக்க அதிபரை கட்டிப்பிடித்தவாறு புன்னகைத்தார். பைடன், தேநீர், பிஸ்கட்டுகள் மற்றும் அமைதியான உரையாடலுடன் ‘நாட்டைக் காத்த’ அவருக்கு நன்றி தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)