பகவந்த் கேசரி விமர்சனம்: நந்தமுரி பாலகிருஷ்ணா இந்த முறை எடுத்துள்ள 'புதிய அவதாரம்'

    • எழுதியவர், சாஹிதி
    • பதவி, பிபிசிக்காக

பாலகிருஷ்ணாவுக்கு என்று ஒரு இமேஜ் உள்ளது. தியேட்டரில் அமைதியாக அமர்ந்து படத்தைப் பார்க்கும் இவரது ரசிகர்கள், திரையில் பாலகிருஷ்ணா தோன்றி பத்து பேரை அடித்துப் பறக்கவிட்டு பஞ்ச் டயலாக் பேசும் காட்சிகளின்போது உற்சாகத்தில் மேலும் கீழும் குதிப்பார்கள். அந்தப் படமும் பாக்ஸ்-ஆபிஸ் வசூலை முறியடிக்கும். இதை நாம் பல வருடங்களாகப் பார்த்து வருகிறோம்.

ஆனால் சமீபகாலமாக பாலகிருஷ்ணாவிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அவரது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா.

அதற்கு 'அகண்டா' திரைப்படம் ஒரு நல்ல உதாரணம். அவரது படங்களில் வரும் ஒரு கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தால், மற்றொரு கதாபாத்திரம் வயதான தோற்றத்தில் நிதானமாகவும், முதிர்ச்சியுடனும் நடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த முயற்சி அவருக்கு நல்ல பலனைத் தந்தது.

‘பகவந்த் கேசரி‘ படத்தில் இடம்பெற்றுள்ள பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரமும் இதே ரகம் தான்.

‘சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்’ இதுவரை இல்லாத பாலகிருஷ்ணாவை ‘பகவந்த் கேசரி’ போஸ்டர்களில் பார்த்ததும் ரசிகர்களிடம் காதல் மலர்ந்தது.

‘பாலய்யாவை இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில் பார்க்கலாம்‘, என்று படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடியும் ரசிகர்களிடம் கூறியிருந்தது எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.

பாலகிருஷ்ணாவின் புதிய அவதாரம் எப்படியிருக்கிறது? ரசிகர்கள் அவரின் புதிய தோற்றத்திற்கு வரவேற்பு தருகிறார்களா? இயக்குநருக்கு மீண்டுமொரு ஹிட் படமாக பகவந்த் கேசரி அமைந்துள்ளதா?

படத்தின் கதை என்ன?

பகவந்த் கேசரி கதாபாத்திரத்தில் வரும் பாலகிருஷ்ணா, 'பெண் குழந்தைகளை தைரியத்துடன் சிங்கக் குட்டிகளை‘ போல வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்.

தனது தாயை ஒரு ஜெயிலர் (சரத் குமார்) கவனித்துக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பகவந்த் கேசரி அவருக்கு என்ன செய்ய விரும்பினார்?

இதற்கும் விஜ்ஜூகிக்கும் (ஸ்ரீலீலா) என்ன சம்பந்தம்? விஜ்ஜூவை ராணுவத்திற்கு அனுப்பும் பகவந்த் கேசரியின் நோக்கம் நிறைவேறியதா?

பகவந்த் கேசரி எப்படி தடைகளைத் தாண்டி, தான் நினைத்ததைச் சாதித்தார் என்பதுதான் படத்தின் கதை.

சிங்கமாக வளரும் பெண்கள்

இதுவரை இல்லாத தோற்றத்தில் பாலய்யாவை காட்டுவேன் எனக் கூறிய இயக்குநர் அனில் ரவிபுடி அதை நிறைவேற்றியுள்ளார். அதே நேரத்தில் ரசிகர்கள் விரும்பும் ‘மாஸ் கமர்ஷியல்‘ பாலய்யாவையும் அந்த கதாபாத்திரத்திற்குள் உள்ளடக்கி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து வெற்றி பெற்றுள்ளார்.

ஜெயிலில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சியின் மூலம் திரையில் அறிமுகம் ஆகிறார் பாலக்கிருஷ்ணா. சண்டைக் காட்சிகளுக்கு நடுவிலும் ஸ்டைலாக வருகிறார் பாலய்யா. இந்த சண்டையில் இயக்குநர் அனில் ரவிபுடியின் அக்மார்க் காமெடியும் இடம்பெற்றிருக்கும். பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும், எதிரிகளை அடித்துத் துவைக்கும் காட்சிகளை வேடிக்கையாகக் காட்டி தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இந்தக் கதையில் எனக்குப் பிடித்தது மகளிர் முன்னேற்றம் குறித்த காட்சிகள்தான். பெண் குழந்தைகளை சிங்கத்தைப் போல வளர்க்க வேண்டும் என்ற தனது எண்ணத்தைக் காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் அனில். மேலும் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது ‘பெப்பர் ஸ்பிரே’ மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிட தங்களின் தைரியத்தின் மீது கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற கருத்தை இயக்குநர் முன்வைத்துள்ளார்.

ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தில் இப்படி ஒரு கருத்தைச் சொல்லும் எண்ணம் வந்ததற்காக இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்.

ஒரு காட்சியில் பகவந்த் கேசரி, பத்து வயது சிறுமிகளு ‘நல்ல தொடுதல் - தவறான தொடுதல்‘ (Good Touch - Bad Touch) குறித்து விளக்குவார். படத்தின் கதைக்கும் இந்த காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இந்தக் காட்சி ஏதோ ஒரு காரணத்திற்காகப் படத்தில் சேர்க்கப்பட்டது போலத் தெரிகிறது.

பாலய்யாவின் மேனரிசம்

வயது குறித்த பகவந்த் கேசரியின் அணுகுமுறை, படத்தின் முதல் காட்சியிலேயே புரிகிறது. ‘ஐ டோன்ட் கேர்‘ என்று பாலய்யா தனது மேனரிஸம் குறித்து ஒரு டயலாக் பேசுகிறார். பல காட்சிகள் இந்த அணுகுமுறையிலேயே வருகின்றன.

காவல் நிலைய சீன், ரவிசங்கர் வீடு சீன் என ரசிகர்களுக்கு ஹாஸ்யத்தை தரும் நிறைய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இடைவெளிக் காட்சி வழக்கமான வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாதியில் ‘நெல்கொண்டா பகவந்த் கேசரியின்‘ பிளாஷ் பேக் தொடங்குகிறது. அந்த பிளாஷ் பேக் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. பல படங்களில் பார்த்த ஹீரோ-வில்லன் மோதல் காட்சிகள் மட்டுமே வருகிறது.

இவ்வளவு வலிமையான வில்லன், ஒரு சாதாரண ஹீரோவை எதிர்கொள்ள முடியாமல் கஷ்டங்களை சந்திக்கிறார் என்பது நம்பும் விதத்தில் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம். படத்தின் இயக்குநர் இந்தக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி எடுத்திருக்கலாம். ப்ரீ க்ளைமாக்ஸின் போதே படம் முடிய வேண்டும். ஆனால், இன்னொரு சண்டைக் காட்சி வரை படம் நீள்கிறது.

பெண் குழந்தைகளை சிங்கம் போல வளர்க்க வேண்டும் என்ற கருத்தை கிளைமாக்ஸ் வரை கொண்டு வந்து, படத்தை முழுமையடைய வைத்திருக்கிறார் இயக்குநர் அனில். ஆனால், கடைசி சண்டைக் காட்சியில் ஸ்ரீலீலாவின் வருகை தனியாகத் தெரிகிறது.

ஒரு வழக்கறிஞர், சில குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் இயக்குநர் தேர்ந்தெடுத்த திரைக்கதை உத்தி. இந்தக் கதையை நேரடியாகவே சொல்லியிருக்கலாம். மூன்றாம் நபரை வைத்து கதையைச் சொல்லியதில் கூடுதலாக எந்தப் பயனும் இல்லை.

காஜல் வரும் காட்சிகளும் போரடிக்கிறது. பிளாஷ்பேக் காட்சிகளுக்கு இயக்குநர் கொஞ்சம் கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

ஆயினும், பாலய்யாவுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் காட்சிகளுக்கு நடுவே, பெண் குழந்தைகளை தைரியமாக வளர்ப்பது பற்றிப் பேசியிருப்பது மற்ற பாலய்யாவின் படங்களில் இருந்து இந்தப் படத்தை தனித்துக் காட்டுகிறது.

‘வழக்கத்திற்கு மாறாக‘

பாலய்யாவின் படங்களில் ஆங்காங்கே சில அரசியல் வசனங்களை வைப்பது வழக்கமான ஒன்று. தெலுங்கு பேசும் மாநிலங்களின் அரசியல் நிகழ்வுகளை வசனமாக வைத்து, அதை பாலய்யா சொல்வது போல காட்சிகளை உருவாக்கினால், படத்திற்குக் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பது பாலய்யா பட இயக்குநர்களின் பொதுவான நம்பிக்கை.

ஆனால் இந்தப் படத்தில், இயக்குநர் அனில் ரவிபுடி அப்படியான முயற்சியை எடுக்கவில்லை. மற்றபடி பாலகிருஷ்ணாவின் பலங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

பாலய்யா பாடிய 'சிவ சங்கரி' பாடல் வெளியானது முதல் இணையத்தில் அவர் கேலி செய்யப்பட்டார். இந்த வயதில் அவருக்கு ஏன் பாட்டு பாடும் ஆசை என இணையவாசிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் ஜெயில் எபிசோடில் வரும் இந்தப் பாட்டில், கேலி செய்வபர்களைப் பார்த்து பாடுவது போல ‘ஐ டோண்ட் கேர்‘ என பாலய்யா பாடி கடந்து சென்றிருக்கிறார்.

பாலகிருஷ்ணா, தனது ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ திரையில் அதை அப்படியே செய்து முழுமையான வணிக சினிமாவை உருவாக்குவார்.

ஆனால் இம்முறை கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார். வயதுக்கு ஏற்ற கெட்டப், நடிப்பு என அவரது திரைமொழி மாறியிருக்கிறது. காஜலுடன் டூயட் ஆடவில்லை. கதையின் நாயகனாகத் திரையில் தோன்றியிருக்கிறார்.

படம் எப்படி இருக்கிறது?

இந்தப் படத்திற்காக பிரபலமான ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்து தயாரித்திருந்தனர். ஆனால் படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்தவில்லை, ஏனெனில் கதையில் அந்தப் பாடலுக்கு இடமில்லை.

இம்முறை வியாபார நோக்கத்தைவிட கதைக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் பாலய்யா.

ஆரம்ப காட்சி முதல் கடைசிக் காட்சி வரை படத்தை பாலய்யாதான் தாங்கியிருக்கிறார். ஸ்ரீலீலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வந்து தனது பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார். காஜலுக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லை. சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் டோலிவுட்டில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுன் ராம்பால். அவரை ஸ்டைலாக காட்ட இயக்குநர் எடுத்த முயற்சி திரையில் தெரிகிறது.

இசையமைப்பாளர் தமன் தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். படத்திற்கு வேகம் தேவைப்படும் இடங்களில் அவரது இசை மூலம் திரைக்கதைக்கு வேகம் சேர்க்கிறார். ஆனால் பாடல்களுக்கு படத்தில் தேவை அதிகம் ஏற்படவில்லை.

இயக்குநர் அனில் ரவிபுடி தனது காமெடிக்காக இதுவரை அறியப்பட்டிருக்கிறார். ஆனால் இந்தப் படம் அவரை வேறு வகையில் அடையாளப்படுத்தியுள்ளது.

வழக்கமான கதையைத் தேர்வு செய்திருந்தாலும், அதில் பாலய்யாவை காட்டிய விதத்திலும், திரைக்கதை நேர்த்தியாலும் பிற கமர்ஷியல் படங்களின் அடையாளங்களில் இருந்து இயக்குநர் விலகியே நிற்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)