சந்திரமுகி: உண்மையான மாளிகையும் கொலைகளும் - நூறாண்டுக்கு முன் நடந்தது என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ரஜினிகாந்த் நடித்து தமிழில் பெரும் வெற்றிபெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது. ஒரு இளம் பெண்ணிற்குள் நிலவுடமை காலத்து பெண்ணின் ஆவி புகுந்து கொள்ளும் இந்தக் கதையின் துவக்கம் என்ன?

ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு ஆகியோர் நடித்து 2005ஆம் ஆண்டில் 'சந்திரமுகி' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். ரஜினிகாந்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது.

1993ல் மலையாளத்தில் வெளிவந்த 'மணிச்சித்திரத்தாழு' என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம்தான் இந்த 'சந்திரமுகி' திரைப்படம். மணிச்சித்திரத்தாழு படத்தின் கதையை மது முட்டோம் என்பவர் எழுதியிருந்தார். படத்தை ஃபாஸில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் சுமார் 300 நாட்கள் ஓடியது.

இந்தப் படத்தை தமிழில் 'சந்திரமுகி'யாக ரீ - மேக் செய்த பி. வாசு, அதற்கு முன்பாக கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் 2004ஆம் ஆண்டிலேயே ரீ - மேக் செய்திருந்தார்.

இதில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடித்திருந்தனர். அந்தப் படம் பெரும் வெற்றிபெற்ற நிலையில்தான் ரஜினியை வைத்து, தமிழில் எடுக்கலாம் என முடிவானது. எதிர்பார்த்தபடியே அந்தப் படமும் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

'மணிச்சித்திரத்தாழு' தமிழ், கன்னடம் தவிர, வங்க மொழியில் 'ராஜ்மொஹோல்' என்ற பெயரிலும் இந்தியில் 'பூல் புலையா' என்ற பெயரிலும் இந்தப் படம் ரீ - மேக் செய்யப்பட்டது.

மணிச்சித்திரத்தாழு படத்தின் கதை

கங்காவும் நகுலனும் கொல்கத்தாவில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு வருகிறார்கள். உறவினர்கள் பலர் தடுத்தும் மாதம்பள்ளி என்ற தங்கள் குடும்ப மாளிகையில் மனைவியுடன் தங்க முடிவுசெய்கிறான் நகுலன். அந்த மாளிகையில் தங்க வேண்டாம் என்று பலரும் தடுத்ததற்கு ஒரு காரணம் இருந்தது.

அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மாளிகையில் வசித்த சங்கரன் தம்பி காரணவர் என்பவர் தஞ்சாவூரில் இருந்து நாகவல்லி என்ற நடன மங்கை ஒருவரை விலைக்கு வாங்கி தன் மாளிகைக்கு அழைத்து வருகிறார். நாகவல்லியின் காதலனான ராமநாதன், ரகசியமாக அந்த ஊருக்கு வந்து அருகில் உள்ள குடிசையில் தங்கி, நாகவல்லியை சந்தித்து வருகிறான்.

இந்த விஷயம் தெரிய வந்ததும் சங்கரன் தம்பி, நாகவல்லியைக் கொன்று விடுகிறார். நாகவல்லியின் பேய் அவரைப் பழிவாங்க முயல்கிறது. சில மந்திரவாதிகளின் உதவியுடன் சங்கரன் தம்பி அவளை தெக்கினி என்ற ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். பிறகு அவரும் தற்கொலை செய்துகொண்டு பேயாகி தெக்கினியிலேயே சிக்கிக்கொள்கிறார். இரவில் நாகவல்லியின் குரல் கேட்பதாக பலரும் சொல்கிறார்கள்.

இந்தக் கதையை கங்கா நம்பவில்லை. அந்த அறையில் விலை உயர்ந்த நகைகள், செல்வம் ஏதாவது இருக்கலாம் என்பதால் அப்படிச் சொல்வதாக நினைக்கிறாள். அந்த அறையின் சாவியை வாங்கி திறக்கிறாள். இதற்குப் பிறகு வீட்டில் பல விபரீதமான சம்பவங்கள் நடக்கின்றன. கங்காவின் நடவடிக்கைகள் மாறுகின்றன.

இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள தனது நண்பரும் மனநல மருத்துவருமான சன்னியை மாதம்பள்ளி மாளிகைக்கு வரவழைக்கிறான் நகுலன். நடந்த விஷயங்களை ஆராயும் சன்னி, கங்கா மனநலம் பாதிக்கப்பட்டு, தன்னை நாகவல்லியாக கருதி செயல்படுவதை கண்டுபிடிக்கிறார்.

நகுலனாக சுரேஷ் கோபியும் கங்காவாக ஷோபனாவும் டாக்டர் சன்னியாக மோகன்லாலும் நடித்திருந்தனர்.

'மணிச்சித்திரத்தாழு'வின் அனைத்து ரீமேக்கிகளிலுமே கிட்டத்தட்ட இதே கதையே சற்று மாறுபாடுகளுடன் இடம்பெற்றன.

'மணிச்சித்திரத்தாழு' கதைக்கு அடிப்படையாக அமைந்த நிஜ மாளிகை

'மணிச்சித்திரத்தாழு' கதையை எழுதியவர் மது முட்டோம். அவர் இந்தக் கதையை ஆழப்புழா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகவே வைத்து எழுதினார். ஆழப்புழையில் முட்டோம் என்ற இடத்தில் அலுமூட்டில் மேடா என்ற மாளிகை இருக்கிறது.

இந்த அலுமூட்டில் மாளிகையில் வசித்தவர்கள், ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த நிலவுடமையாளர்கள். திருவிதாங்கூர் மகாராஜா இந்தக் குடும்பத்தினருக்கு 'சன்னார்' என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கார் வைத்திருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்களில் அலுமூட்டில் குடும்பமும் ஒன்று.

அங்கு கொச்சுகுஞ்சு சன்னார் (1903-1921) என்பவர் குடும்பத் தலைவராக இருந்தார். ஒரு நாள், கொச்சுகுஞ்சு சன்னாரும் அங்கிருந்த பணிப்பெண்ணும் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

மாளிகையில் நடந்த கொலை

அதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது. அதாவது, கேரள வழக்கப்படி, சொத்துகள் பெண்வழியில் செல்ல வேண்டும். ஆகவே சொத்துகளை ஒருவர் தன் மருமக்களுக்கு எழுதிவைக்க வேண்டும். ஆனால், கொச்சுகுஞ்சு சன்னார் சொத்துகளை தன் குழந்தைகளுக்கு எழுதி வைத்ததாகச் சொல்லப்பட்டது. இதில் கோபமடைந்த பெண் வழிப் பேரன் ஒருவர் அவரைக் கொன்றவிட்டதாகப் பேசப்பட்டது.

அந்தக் கொலையை பணிப்பெண் பார்த்துவிட்டதால், அவளையும் கொன்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது. பிறகு நடந்த விசாரணையில் கொச்சுகுஞ்சு சன்னாரின் அக்காள் பேரனான ஸ்ரீதரன் சன்னார்தான் அந்தக் கொலையைச் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்தது 1921ல்.

இதற்குப் பிறகு அந்த மாளிகையில் இருந்து எல்லோரும் வெளியேறிவிட்டனர்.

இந்த மூட்டோம் ஊரைச் சேர்ந்தவர்தான் மது மூட்டோம். இந்தக் கொலைகளைப் பின்னணியாக வைத்து, அவர் உருவாக்கிய கதைதான் 'மணிச்சித்திரத்தாழு' படத்தின் கதை.

அந்தப் படத்தில் தெக்கினி என்ற மூடப்பட்டிருக்கும் அறை, அலுமூட்டில் மாளிகையில் கொலை நடந்த அறையின் மாதிரியிலேயே அமைக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள அனைத்துக் கதைகளும் கற்பனையானவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: