இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி

ஷ்ரேயாஸ் அய்யர், IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் ஷ்ரேயாஸ் அய்யர்

ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், அக்ஸர் படேல் ஆகியோரின் அபாரமான அரை சதத்தால், நாக்பூரில் வியாழக்கிழமை (பிப். 06) பகலிரவாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஷ்ரேயாஸ் அய்யர் (59), சுப்மான் கில் (87), அக்ஸர் படேல் (52) ஆகியோரின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது.

19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியபோது, 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ், சுப்மான் கில் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தது.

4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது, இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்த 3 பேரும் சேர்ந்து அமைத்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான் வெற்றியை எளிதாக்கியது. சாம்பியன்ஸ் டிராஃபி நெருங்கி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பிரகாசிப்பது இந்திய அணிக்கு பலமாகும். 96 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விராட் கோலி இல்லை

முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருந்தார். "ஒருவேளை கோலி ஆடியிருந்தால், எனக்கு அணியில் இடம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம், "என்று ஷ்ரேயாஸ் அய்யரே பேட்டியில் தெரிவித்தார்.

வெற்றிக்கு யார் காரணம்?

வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஆடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவாக இந்த ஃபார்முக்கு மாற வேண்டும், புரிந்துகொண்டு ஆடவேண்டும் என நினைத்தேன். நல்ல தொடக்கத்தை நாங்கள் வழங்கவில்லை, இருப்பினும் நடுவரிசை பேட்டர்கள் அற்புதமாக ஆடினர். பந்துவீச்சாளர்கள்தான் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டினர்.

தொடர்ந்து கட்டுக்கோப்புடன் பந்துவீசியது, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது, உத்வேகம் குறையாமல் இருந்தது வெற்றிக்கான காரணம்.

அக்ஸர் படேலை நடுவரிசையில் களமிறக்க விரும்பினோம், அவரும் சிறப்பாக பேட் செய்தார். கடந்த சில ஆண்டுகளில் அக்ஸர் பேட்டிங் மேம்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டிங் வலுப்பெறுவது நல்ல அம்சம். ஒரு அணியாக சரியான திசையில் செல்கிறோம், பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்

ரோஹித் சர்மா, IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது வெற்றிக்கான காரணம் என ரோஹித் சர்மா கூறினார்

அனுபவம், இளமை

இந்திய பந்துவீச்சில் அனுபவமும், இளமையும் கலந்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிலும் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். ஷமி 8 ஓவர்களில் ஒரு மெய்டன் 38 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்திய அணி பந்துவீச்சைப் பொருத்தவரை ராணா, ஷமி இருவருமே சிறப்பாகப் பந்துவீசினர். தொடக்கத்தில் ராணா பந்துவீச்சை இ்ங்கிலாந்து பேட்டர்கள் அடித்தாலும் அதன்பின் கட்டுக்கோப்பாக வீசினார். அதேநேரம், அறிமுகப் போட்டியில் ஒரே ஓவரில் 26 ரன்கள் கொடுத்த மோசமான சாதனையையும் ராணா பதிவு செய்தார். அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என 3 பேருமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

சுழற்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவது இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜோ ரூட், பெத்தல் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளும் ரஷித் விக்கெட்டும் வீழ்ந்தது. பவர்பிளே ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு ரன்கள் கொடுத்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகியோரின் ஓவர்கள் இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது.

ரோஹித் சர்மா, ஹர்சித் ராணா, IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா, ஹர்சித் ராணா

திறம்பட விளையாடாத ரோஹித்

இந்திய பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா கூட்டணி ஏமாற்றம் அளித்தது. 19 ரன்களுக்குள் இருவருமே ஆட்டமிழந்து நெருக்கடியான சூழலை ஏற்படுத்தினர். கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், ரஞ்சிக் கோப்பைத் தொடர் இரண்டிலும் திறம்பட விளையாடாத நிலையில் இந்த ஒருநாள் தொடர் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

கடந்த 10 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 70 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

ஷ்ரேயாஸின் அனல்பறக்கும் அரைசதம்

2 விக்கெட்டுகள் விரைவாக இழந்த நிலையில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.

பவர்பிளேயை சரியாகப் பயன்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் அரைசத்தை ஷ்ரேயாஸ் அய்யர் நிறைவு செய்தார். ஷ்ரேயாஸ் களத்தில் இருந்தவரை அணியின் ரன்ரேட் 7-க்குக் குறையாமல் சென்றது.

36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் அய்யர், பெத்தல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் இருந்த 45 நிமிடங்களில் ஆட்டத்தில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மான் கில்

கில், அக்ஸர் பொறுப்பான அரைசதம்

4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். அக்ஸர் படேல் வழக்கமாக 7-வது பேட்டராக களமிறங்கிய நிலையில், அவரை நடுவரிசையில் களமிறக்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய அக்ஸர் படேல் கட்டுப்பாடின்றி, சுதந்திரமாக ஷாட்களை அடித்தார்.

சுப்மான் கில் 38 ரன்கள் சேர்த்திருந்தபோது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் கால்காப்பில் டிஆர்எஸ் அப்பீல் சென்று தப்பித்தார். அதன்பின் விழித்துக்கொண்டு ஆடிய கில், மிகுந்த கவனத்துடன் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடி 14-வது அரைசதத்தையும், இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார்.

சுப்மான் கில், IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்

மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார். 28 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ரஷித் பந்துவீச்சில் அக்ஸர் படேல் 52 ரன்களில் க்ளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 2 ரன்னில் ரஷீத் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

சுப்மான் கில் 87 ரன்கள் சேர்த்திருந்தபோது மெஹ்மூத் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 221 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்த 14 ரன்களுக்குள் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியா (9), ஜடேஜா (12) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.

 அக்ஸர் படேல், IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார்

அதிரடி தொடக்கமும், திடீர் சரிவும்

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பில் சால்ட், டக்கெட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். தொடக்கத்திலிருந்தே ராணாவின் திறமையாக பந்துவீசினார். ராணாவின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டர்கள் என 26 ரன்கள் சேர்த்து சால்ட் அதிரடியாக ஆடினார்.

இதனால் விரைவாகவே ராணாவின் ஓவரை நிறுத்திவிட்டு அக்ஸர் படேலை பந்துவீச கேப்டன் ரோஹித் அழைத்தார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் அவுட்சைட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு சால்ட் ரன் ஓடினார். 2 ரன்கள் ஓடியநிலையில், 3வது ரன் ஓடத் தொடங்கும்போது, ஷ்ரேயாஸ் ஃபீல்டிங் செய்து பந்தை விக்கெட் கீப்பர் ராகுலிடம் எறிந்தார். ஆனால், சால்ட் ஓடிய வேகத்துக்கு, டக்கெட் ஒத்துழைக்கவில்லை.

இதனால், பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். டக்கெட்டுடன் தகவல் பரிமாற்றம் சரியாக அமையாததால் சால்ட் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை சால்ட் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.

75 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்த 2 ரன்கள் சேர்ப்பதற்குள் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக் விக்கெட்டுகளை பறிகொடுத்து 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவ வீரர் ஜோ ரூட் 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் விளையாடியதால், ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதப்பட்டது. ரூட் 19 ரன் சேர்த்திருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து நிலைகுலைந்தது.

அதன்பின், கேப்டன் பட்லர், ஜேக்கப் பெத்தல் இருவரும் நடுவரிசையில் விக்கெட்டை ஸ்திரப்படுத்தி, நிதானமாக பேட் செய்தனர். நிதானமாக ஆடிய பட்லர் 58 பந்துகில் அரைசதம் அடித்து (52), ரன்களில் அக்ஸர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து பட்லர், பெத்தல் கூட்டணி பிரிந்தது.

பொறுமையாக பேட் செய்த பெத்தல் 2வது அரைசதம் அடித்து (51) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், இங்கிலாந்து அணியின் கடைநிலை பேட்டர்கள் லிவிங்ஸ்டோன் (5), பிரைடன் கார்ஸ் (10), ரஷித் (8), மெஹ்மூத் (2) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.

206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 42 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூ ட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)