கோவிட் சோதனைக் கருவிகளை புதினுக்கு ரகசியமாக அனுப்பி வைத்தாரா டிரம்ப்? புதிய புத்தகம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நாடின் யூசிப்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது.
ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது.
'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோள் காட்டிய பகுதிகளைக் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், "அவர் (பாப் உட்வர்ட்) ஒரு கதைசொல்லி, அதிலும் மோசமானவர். அவர் தன்னிலையை இழந்துவிட்டார்," என ஏ.பி.சி நியூஸ் சேனலிடம் கூறினார்.
இவை கற்பனைக் கதைகள் என்றும், இதில் எந்த உண்மையும் இல்லை என்றும் டிரம்ப்-இன் பிரசாரக் குழு கூறியுள்ளது.

'புதினுடன் தொடர்பில் இருந்த டிரம்ப்'
டிரம்ப் பிரசாரக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் செவ்வாயன்று (அக்டோபர் 8) பிபிசிக்கு அளித்த பதிலில், “தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்கும் ஒரு கடையின், புனைகதைப் பிரிவில் இருக்கவேண்டிய புத்தகம் இது. அல்லது கழிவறை டிஷ்யூக்களாக இது பயன்படுத்தப்படும். இந்தக் குப்பை புத்தகத்தை எழுதுவதற்காகத் தன்னைச் சந்திக்க டிரம்ப் ஒருபோதும் அந்த எழுத்தாளருக்கு அனுமதி வழங்கவில்லை,” என்று கூறினார்.
அடுத்த வாரம் வெளிவரும் இந்த ‘வார்’ எனும் புதிய புத்தகம், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் புதினுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தகவல்களை டிரம்பின் உதவியாளர் ஒருவர் அளித்தார் என்று கூறுகிறது. அந்த உதவியாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.
'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் செய்தி அறிக்கையின், ஒருமுறை மார்-ஏ-லாகோவில் உள்ள (புளோரிடாவில் உள்ள கடற்கரைப் பகுதி) டிரம்பின் அலுவலகத்தில் இருந்து அவரது உதவியாளர் வெளியேற உத்தரவிடப்பட்டது குறித்து அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், புதினுடன் தொலைபேசியில் தனியாகப் பேச வேண்டும் என்பதற்காகவே அந்த உதவியாளர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு, டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதில் இருந்து இருவரும் குறைந்தது 6 முறை பேசியிருக்கலாம் என்று அந்த உதவியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்ய அரசு கடந்த புதன்கிழமை (அக்டோபர் 2) அன்று இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.
டிரம்ப், புதின் இருவரும் என்ன விவாதித்தார்கள் என்று புத்தகம் கூறவில்லை, ஆனால் இருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து டிரம்ப் பிரசாரக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சந்தேகங்கள் எழுப்பியதை மேற்கோள் காட்டி அது விவரிக்கிறது.
புத்தகத்தின் பிரதியை பிபிசி இன்னும் பார்க்கவில்லை. டிரம்பின் உதவியாளரது கூற்றைத் தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று பாப் உட்வர்ட் கூறியதாக டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவரும் புதினும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டது பற்றி வேறு நபர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் அந்த செய்தித்தாள் கூறுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கு காரணமாக இருந்த வாட்டர்கேட் (Watergate) ஊழலை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர் மூத்த நிருபர் பாப் உட்வர்ட். உயர்மட்ட நபர்களை அணுகி, தகவல்களைப் பெறுவதன் அடிப்படையில் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவை அதிகளவில் விற்பனையும் ஆகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
புதினுக்கு கோவிட் சோதனைக் கருவிகள் அனுப்பினாரா டிரம்ப்?
உட்வர்டை ‘மனவளர்ச்சி குன்றியவர்’ என்றும் 'குழப்பமடைந்தவர்’ என்றும் விவரித்த டிரம்ப் பிரசாரக் குழுவின் செய்தித் தொடர்பாளர், “உட்வர்ட் மலிவான எண்ணங்கள் கொண்ட மனிதர். மேலும் அவர் முன்பு டிரம்புடன் செய்த நேர்காணல் பதிவுகளை அங்கீகாரம் பெறாமல் வெளியிட்டார். இதனால் டிரம்ப் அவர் மீது வெற்றிகரமாக வழக்குத் தொடுத்துள்ளதால், உட்வர்ட் வருத்தத்தில் இருக்கிறார் போல," என்று கூறினார்.
'ரேஜ்' (Rage) என்ற, 2021-ஆம் ஆண்டு புத்தகத்திற்காக டிரம்ப் முன்பு உட்வர்டிடம் பேசியிருந்தார். இருவருக்குமான நேர்காணல்களின் பதிவுகளை அனுமதி இன்றி உட்வர்ட் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரம்ப், உட்வர்ட் மீது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் உட்வர்ட் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.
தனது ‘வார்’ புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் உட்வர்ட்: “முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியில் இருந்தபோது, புதினுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ‘அபோட் பாயிண்ட் ஆஃப் கேர் கோவிட் சோதனை இயந்திரங்களை’ ரகசியமாக அனுப்பி வைத்தார்".
அமெரிக்க ஊடகங்களில் வெளியான உட்வர்டின் புத்தகத்தின் மறுபரிசீலனையின் படி, அப்போது கொரோனா வைரஸால் நோய்வாய்ப்படுவதைப் பற்றி புதின் அதிகம் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
'டிரம்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற அச்சத்தில், தனக்கு கோவிட் சோதனை இயந்திரங்களை அனுப்பியதை பகிரங்கமாக கூற வேண்டாம்' என்று புதின் டிரம்பைக் கேட்டுக் கொண்டதாக அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
“ ‘நீங்கள் யாரிடமும் இதைப் பற்றி சொல்வதை நான் விரும்பவில்லை, ஏனென்றால் மக்கள் உங்கள் மீது தான் கோபப்படுவார்கள். என் மீது அல்ல’ என்று புதின் டிரம்பிடம் கூறியதாக” ‘வார்’ புத்தகத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது.
அதற்கு டிரம்ப், "நான் அது குறித்து கவலைப்படவில்லை.” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில வாரங்களே இருக்கும்போது, டிரம்புக்கும் புதினுக்கும் இடையிலான உறவு பற்றிய கேள்விகளை இந்தக் கூற்றுக்கள் மீண்டும் எழுப்பியுள்ளன.
முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல்களுக்காக ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்ததாக கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நீதித்துறையின் விசாரணையில் இதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதேபோல டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த குற்றச்சாட்டின் விசாரணையைத் தடுத்தாரா என்பது குறித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளின் படி, ‘கடந்த நான்கு வருடங்களில் நிகழ்ந்த வெளிநாட்டு மோதல்கள் மற்றும் அப்போது இருந்த மோசமான அமெரிக்க அரசியல் சூழல்கள், ஆகியவற்றில் டிரம்பிற்கு இருந்த பங்கையும் இந்த புத்தகம் ஆராய்கிறது’.
மெர்ரிக் கார்லண்டை அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்தது போன்ற, தனது சொந்த தவறுகள் குறித்த அதிபர் ஜோ பைடனின் வெளிப்படையான விமர்சனமும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு வழக்கறிஞர் கார்லண்ட், ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வழக்கின் விசாரணையை முன்னெடுத்தார். இந்த விவகாரம் குறித்து தனது உதவியாளர் ஒருவரிடம் பேசியபோது, "ஒருபோதும் நான் கார்லண்டைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது," என்று ஜோ பைடன் கூறினார் என்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












