சிஎஸ்கே கனவுக்கு காத்திருக்கும் 'ஆபத்து'; இனி பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த சில ஐபிஎல் சீசன்களை விட ஐபிஎல் 2023 சீசன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தொடராக அமைந்திருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் நாட்கள் செல்ல செல்ல பிளே ஆஃப் ரேஸில் போட்டி தீவிரமாவதே.

ஐபிஎல்லில் லீக் போட்டிகளை பொறுத்தவரையில் மொத்தம் 70 போட்டிகள் தான். அதில் 53 போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனால், இன்னமும் எந்தவொரு அணியும் அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதைவிட இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் இன்னமும் எந்தவொரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை முழுமையாக இழந்துவிடவில்லை.

ஆக, இனிவரும் ஒவ்வொரு போட்டியும் 'திடுக்' திருப்பங்களை பிளே ஆஃப் ரேஸில் ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு போட்டியும் கிட்டதட்ட நாக்அவுட் போட்டி போல அமையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு உதாரணத்தை இங்கே பட்டியலிடுவது மேற்சொன்ன கூற்றுக்கு வலு சேர்க்கக்கூடும். இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இன்று காலை நிலவரப்படி பெங்களூரு புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி எட்டாவது இடத்திலும் இருக்கின்றன.

ஆனால் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒரே போட்டியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு தாவிவிடும்.

ஆகவே, இனி வரும் போட்டிகள் அனல்பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சரி, எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு அதிகம்? எவற்றுக்கு குறைவு என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

'ட்விஸ்ட்' வைக்குமா டெல்லி & ஹைதரபாத்?

முதலில் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான வாய்ப்பை அலசுவோம்.

இந்த இரு அணிகளும் தற்போது 10 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டும் வென்று எட்டு புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் மீதமுள்ள நான்கு போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும். ஆனால், அதுமட்டும் போதாது ரன்ரேட்டையும் உயர்த்த வேண்டும்.

டெல்லி தற்போது (-0.529) சன் ரைசர்ஸ் (-0.472) எனும் ரன்ரேட்டில் உள்ளன.

ஆகவே பிரமாண்ட வெற்றிகள் பெற்றால், இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் செல்வதை பற்றி நினைத்துப் பார்க்கலாம்.

இதில் ஹைதரபாத் அணி தனது கடைசி ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. அந்த அணி இனிவரும் போட்டிகளில் லக்னௌ, குஜராத், பெங்களூரு, மும்பை என வலுவான அணிகளை சந்திக்கவுள்ளது.

டெல்லி அணி இந்த தொடரை தோல்வியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்ற டெல்லி கேபிட்டல்ஸ் பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது கடைசி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் குஜராத், பெங்களூரு, ஹைதரபாத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான வெற்றிகள் உள்ளடங்கும்.

லீக் போட்டியில் இனி வரும் ஆட்டங்களீல் டெல்லி அணி இரண்டே அணிகளைத் தான் சந்திக்கவுள்ளது. ஆனால், அந்த இரு அணிகளுடனும் தலா இரண்டு போட்டிகளை விளையாடவுள்ளது. ஆம், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுடன் லீக் தொடரின் தனது கடைசி நான்கு ஆட்டங்களை ஆடுகிறது டெல்லி கேபிட்டல்ஸ்.

இந்த இரு அணிகளையும் நேர்த்தியாக வீழ்த்தும் பட்சத்தில் டெல்லிக்கு பிளே ஆஃப் கனவு நனவாகக்கூடும்.

திடீர் சிக்கலில் மூன்று அணிகள்

இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி தலா இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் டாப் நான்கு இடங்களில் இருந்த மூன்று அணிகள் சிறப்பான ஆட்டத்தை சீராக வெளிப்படுத்த தவறியதால் தற்போது பிளே ஆஃப் வாய்ப்பில் சிக்கலை சந்தித்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது நான்காமிடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது ஐந்தாமிடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் ஏழாமிடத்தில் உள்ளன.

ஆனால் இந்த அணிகளின் நிலைமைக்கும் கடைசி இரு இடங்களில் உள்ள ஹைதரபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

ஏனெனில் இந்த மூன்று அணிகளும் தற்போது 11 போட்டிகளை விளையாடி ஆறு தோல்விகளுடன் 10 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. ஆகவே இனி இந்த அணிகள் தான் விளையாடும் அனைத்து லீக் ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை பற்றி சிந்திக்கவாவது முடியும்.

இதில் ராஜஸ்தான் அணிக்கு மட்டும் ஒரு நல்ல செய்தி என்னவெனில் அதன் ரன்ரேட் (0.388) நல்ல நிலையில் உள்ளது. எனவே அந்த அணி வெற்றி குறித்து மட்டும் யோசித்தால் போதுமானது .

கொல்கத்தா ரன்ரேட் மோசமில்லையென்றாலும் (-0.079) சிறப்பான வெற்றிகளை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணி சென்னை, ராஜஸ்தான், லக்னௌ என புள்ளிப்பட்டியலில் தற்போது தனக்கு மேல் உள்ள அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது.

இதில் பஞ்சாபின் நிலை (-0.441) சற்று மோசமாகவே உள்ளது. அந்த அணி மூன்று பிரமாண்ட வெற்றிகளை பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு பிற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

பஞ்சாப் அணி தனது கடைசி மூன்று ஆட்டங்களில் இரண்டை டெல்லியுடனும், மீதமுள்ள ஒரு போட்டியில் தன்னுடன் போட்டி போடும் ராஜஸ்தான் அணியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது

இரண்டு 'நட்சத்திர' அணிகள்

ஐபிஎல் தொடங்கிய காலம் தொட்டு தொடர்ச்சியாக அமோக ரசிக ஆதரவு கொண்டுள்ள அணிகளில் மிக முக்கியமானவை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஆனால் இந்த இரு அணிகளுமே தற்போது பிளே ஆஃப் வாய்ப்புக்கு மல்லுக்கட்டவுள்ளன.

மே 9-ம் தேதி இந்த இரு அணிகள் மோதியபோது யார் வென்றாலும் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேற முடியும் எனும் சூழல் நிலவியது. 

மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு நிர்ணயித்த 200 ரன்கள் எனும் இலக்கை 17வது ஓவரிலேயே கடந்தது. இதன்மூலம் ரன்ரேட்டையும் உயர்த்திக்கொண்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. 

ஆர்சிபி தற்போது ஏழாவது இடத்தில் இருக்கிறது. 

மும்பை இந்தியாய்ன்ஸ் அணி இனி வரும் மூன்று போட்டிகளையும் வென்றால் ரன்ரேட் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நேரடியாக பிளே ஆஃபுக்குள் நுழைந்துவிடும். ஒருவேளை இரண்டு போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். ஆனால் மூன்றில் இரண்டில் தோற்றால் நிலைமை சிக்கல்தான். 

பெங்களூரு அணியை பொருத்தவரையில் மும்பை அணியுடனான மோசமான தோல்வி கடுமையாக பாதித்திருக்கிறது. இனி ஆர்சிபி மூன்று போட்டிகளையும் வென்று ரன்ரேட்டையும் கணிசமாக உயர்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் பற்றி யோசிக்கலாம்.

சறுக்கலில் 'லக்னௌ'

இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் முதன்மையானது லக்நௌ.

ஆரம்பத்தில் இருந்தே இந்த அணி எப்படியோ புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் நீடித்துவருகிறது. ஆனால் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே தொடர்ச்சியாக இரு போட்டிகளை வென்றுள்ளது. கடைசி ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே கிடைத்திருக்கிறது. எனினும் நல்ல ரன்ரேட் காரணமாக தப்பித்துவந்தது. ஆனால் இப்போது தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது லக்னௌ.

தற்போது 11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. இனி ஒரு போட்டியை தோற்றால் கூட அதிகபட்சம் 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அது சிக்கலை உண்டாக்கக் கூடும். ரன்ரேட் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்வியை நம்பி பிளே ஆஃப் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் அமையலாம்.

ஆனால் மீதமுள்ள மூன்று போட்டிகளை வென்றால், 17 புள்ளிகளை பெறும். அந்தச் சூழலில் எந்த கவலையும் இன்றி பிளே ஆஃப் விளையாடலாம்.

கேப்டன் கே.எல்.ராகுல் காயத்தால் விலகியுள்ள நிலையில் தனது மீதமுள்ள லீக் ஆட்டங்களில் ஹைதரபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது லக்னௌ.

எட்டிப் பிடிக்கும் உயரத்தில் பிளே ஆஃப் வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் உடனான இரண்டு தோல்விகள் தவிர்த்து குஜராத் மற்றும் பஞ்சாப் அணியுடன் தலா ஒரு போட்டியில் தோற்றது.

தற்போது 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் எடுத்துள்ளது சிஎஸ்கே.

தோனி அணிக்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன. தான் விளையாடும் மீதமுள்ள மூன்று போட்டிகளையும் வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் தகுதி பெறுவது மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கு எளிதாக தகுதி பெறும்வகையில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் குவாலிபயர் 1 போட்டி சென்னை மண்ணில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சென்னை மீதமுள்ள மூன்று போட்டிகளில் எதாவது ஒன்றில் தோற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு முற்றிலுமாக கைவிட்டு போய்விடாது. ஏனெனில் அப்போது சென்னைக்கு 17 புள்ளிகள் கிடைக்கும். இப்போதைய சூழலில் மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மட்டுமே 17 புள்ளிகளை விட அதிகம் பெறும் வாய்ப்பை கொண்டிருக்கின்றன. சென்னை அணி ரன்ரேட்டில் கவனம் செலுத்தினால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துவிடும்.

ஒருவேளை சென்னை அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெல்லும் பட்சத்தில் 15 புள்ளிகள் கிடைக்கும். அப்போதும் பிற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆனால் மீதமுள்ள மூன்று போட்டிகளையும் தோற்றால் சென்னை அணியின் கோப்பைக் கனவு கானல் நீராகும்.

சென்னை அணிக்கு ஒரு நல்ல செய்தி என்னவெனில் மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளில் இரண்டு ஆட்டங்களை சென்னை மண்ணில் விளையாடவுள்ளது. பலத்த ரசிக படையை கொண்டுள்ள சென்னையை அதன் மண்ணில் தோற்கடிப்பது டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எளிதல்ல.

சென்னை தனது கடைசி மூன்று ஆட்டங்களை டெல்லியுடன் இரண்டு ஆட்டமும், கொல்கத்தாவுடன் ஒரு ஆட்டமும் விளையாடவுள்ளது.

உச்சாணிக் கொம்பில் குஜராத் டைட்டன்ஸ்

இதுவரை மூன்று தோல்விகளை மட்டுமே சந்தித்து 16 புள்ளிகளுடன் அசத்தலான ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

ஹர்திக் பாண்டியா அணி இனிவரும் மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்றில் வென்றால் கூட பிளே வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஒருவேளை மூன்று ஆட்டங்களையும் மோசமாக தோற்றால் கூட பிரமாண்ட ரன்ரேட் அந்த அணியை கரைசேர்த்துவிடும்.

ஆகவே, குஜராத் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை எந்தவொரு அணியும் தட்டிப்பறிப்பது அவ்வளவு சுலபமல்ல.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: