You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூடான் உள்நாட்டு போரில் சொத்துகள், உடைமைகளை இழந்து வெறும் போர்வையுடன் உயிர் தப்பிய கால்பந்து வீரர்
- எழுதியவர், தமரா எபிவெய்
- பதவி, பிபிசி நியூஸ், அபுஜா
நைஜீரியாவைச் சேர்ந்த 28 வயதான சார்ல்ஸ் காலின்ஸ் என்ற கால்பந்தாட்ட வீரர், சூடான் பிரீமியர் லீக்கின் அடுத்த போட்டியில் ஹைதோப் என் நஹுட் (Haidob en Nahud), அணியில் பங்கேற்பதற்காக தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்த போது கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை மூண்டது.
இதன் தொடக்கமாக தலைநகர் கார்டூமில் இரு தரப்புக்கும் இடையே மிகப்பெரிய தாக்குதல்கள் தொடங்கி அது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவின. சார்ல்ஸ் காலின்ஸ் வசித்த இடத்திலும் தாக்குதல் நடந்த போது அவர் அனைத்தையும் விட்டுவிட்டு தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சுமார் ரூ. 16,00,000 ரொக்கம் உள்ளிட்ட தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டு, விட்டு வெறும் அரைக்கால் சட்டையுடன் அவர் தப்பினார்.
எகிப்து நாட்டு வழியாக நைஜீரியா தலைநகர் அபுஜாவுக்கு தப்பி வந்த 396 விளையாட்டு வீரர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அபுஜாவை அடைவதற்காக பல நாட்கள் அவர் மேற்கொண்ட பயணம் மிக, மிக ஆபத்தான அனுபவமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.
"இந்த போர்வை மட்டுமே மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய போது என்னிடம் இருக்கிறது," என அவர் பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார். அபுஜா நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய போது அவரிடம் ஒரு சிறிய கருப்பு பை மட்டுமே இருந்தது.
"எனது ஆடைகளைக் கூட இழந்து இந்த ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து வரும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். அது ஒரு பயங்கரமான அனுபவமாக இருந்தது," என்கிறார் அவர்.
ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய கோப்பையான கேஃப் கான்ஃபெடரேசன் கோப்பையைப் பெறுவதற்காகவே அவருடைய ஹைடாப் அணி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.
தாக்குதல் தொடங்கியதற்கு ஒரு வாரத்துக்கு முன் தான் கோபர் எஸ்சி பாரி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்த அணி தோல்வியைச் சந்தித்திருந்தது. தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள லீக் போட்டியில் நான்காவது இடத்தை அந்த அணி தக்கவைத்திருந்தது.
ஆனால் சூடானில் பயங்கர தாக்குதல் நடந்துவரும் நிலையில், மீண்டும் ஒரு முறை சார்ல்ஸ் காலின்ஸ் அங்கு சென்று தமது விளையாட்டைத் தொடங்கப்போவதில்லை.
கண்டங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக நைஜீரியாவிலிருந்து வெகுசில வீரர்கள் மட்டுமே கடந்த பல ஆண்டுகளில் சூடான் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
'அது ஒரு பயங்கரமான அனுபவம்'
ரிச்சி மூர் ரோவெர்ஸ் என்ற மொரிசியஸ் நாட்டு அணியிலிருந்து விலகி கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் தான் சூடான் நாட்டுக்கு காலின்ஸ் வந்தார். ஆனால் சூடான் நாட்டில் அவருக்கு இருந்த சுமார் ரூ. 16,00,000 ரொக்கம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் தற்போது இழந்து விட்டதாக அவர் கூறினார்.
சூடான் நாட்டில் கால்பந்தாட்ட விளையாட்டுடன் அவர் சில தொழில்களையும் செய்துவந்தார். அதில் செயற்கை முடியை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் தொழிலையும் அவர் செய்துவந்தார். இத்தொழிலுக்காக அவர் இறக்குமதி செய்த சரக்குகள் சண்டை தொடங்குவதற்கு எட்டு நாட்களுக்கு முன் தான் சூடானை அடைந்திருந்தன. அந்த சரக்குகளையும்ம் தற்போது அவர் இழந்துவிட்டார்.
"சூடானிலிருந்து தப்பி வரும் பலரும் அனைத்தையும் இழந்துவிட்டு வரும் போது, நானாவது ஒரு போர்வையுடன் வந்திருக்கிறேன்," என அபுஜாவை அடைந்த போது, வெறும் கருப்பு பாலிதீன் பையுடன் வந்திருந்த மற்றொருவரை சுட்டிக் காட்டி அவர் விரக்தியுடன் கூறினார். "அவர் தனது உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு தாய் நாடு திரும்பியுள்ளார்."
சூடான் நாட்டில் இருந்து தப்பி வந்தவர்கள், நைஜீரிய ராணுவத்துக்குச் சொந்தமான ஒரு விமானத்திலும், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானத்திலும் எகிப்திலிருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர். எகிப்து நாட்டு எல்லை நகரமான அஸ்வானில் விசா பிரச்னை காரணமாக அவர்கள் பல நாட்கள் தவித்து வந்துள்ளனர்.
அரபி மொழி மற்றும் இஸ்லாமிய மதம் தொடர்பான கல்வியை போதிப்பதில் சூடான் நாடு பெருமை பெற்ற நாடாக இருப்பதால் நைஜீரியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சூடானில் படித்து வந்தனர். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நைஜீரியர்களாவது சூடானில் சண்டை தொடங்குவதற்கு முன்பு இருந்தனர்.
அளவான கட்டணங்களுடன் செயல்படும் மருந்து மற்றும் மருத்துவக் கல்வி நிலையங்களும் நைஜீரிய நாட்டு மாணவர்களை பெரிதும் ஈர்த்துள்ளன.
சூடானில் இருந்து மீட்கப்பட்டு நைஜீரியா வந்தடைந்துள்ள மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசிய போது அனைவரிடமும் ஒரு மகிழ்ச்சி தென்பட்டது.
இருப்பினும் இந்த துயரமான நிகழ்வுகள் இன்னும் தொடக்கநிலையிலேயே இருக்கின்றன.
"எங்கள் பயணம் முழுவதும் ஒரு பயங்கரமான அனுபவமாகவே இருந்தது," என ஜைனாப் அப்துல்காதிர் என்ற மாணவி பிபிசியிடம் தெரிவித்தார்.
சூடானில் இருந்து தண்ணீர், உணவு என எதுவும் இல்லாமல் தப்பிவந்த போது விடியவிடிய ஒரு காரில் அமர்ந்திருந்ததால் தமது கால் வீங்கிப் போனதாகவும் அவர் கூறினார்.
"உச்சகட்ட பயம், பதற்றம் போன்ற உணர்வுகளுடன் கூடியதாக அந்த பயணம் இருந்தது," என்றார் அந்த மாணவி.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் சண்டை தொடங்கிய நாளில் துப்பாக்கி சத்தம் கேட்டபோது, அது வெறும் மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட சத்தம் என நினைத்ததாக அந்நகரில் செயல்படும் ஆப்ரிக்கா இன்டர்நேஷனல் பல்கலைக்கழக மாணவி அப்துல்லாஜீஸ் மூய்ஸா தெரிவித்தார்.
"எங்களில் சிலர் கர்ப்பமாக இருந்த நிலையில், அந்த பயங்கரத்திலிருந்து தப்பி வந்ததற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்."
முதலாம் ஆண்டு படித்து வரும் மூய்ஸா, சூடானில் சண்டை முடிவுக்கு வந்த பின் மீண்டும் அங்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.
சூடானில் இருந்து தப்பி வந்த அனைவரும், சண்டை முடிந்த பின் மீண்டும் அந்நாட்டுக்கு வரவேண்டும் என நைஜீரியாவுக்கான சூடான் தூதர் முகமது யூசுஃப் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூடான் தங்களது இரண்டாவது தாய்நாடு என அவர்கள் கருத வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கும் முகமது யூசுஃப், விரைவில் சூடான் சண்டை முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என நம்புகிறார்.
"அங்கு நடக்கும் தாக்குதல்களுக்காக நான் வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் யாருடைய உயிருக்கும் எந்த பாதிப்பும் இன்றி அனைவரும் பத்திரமாக தப்பி வந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என அவர் கூறியதாக கேபிள் என்ற செய்தி இதழ் தெரிவிக்கிறது.
சூடானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்டவர்கள் அனைவரும் வீடு திரும்புவதற்காக ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ. 16,000 நிதி அளிக்கப்படும் என நைஜீரிய சமூக நலம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாதியா ஃபரூக் அறிவித்துள்ளார்.
சூடான் நாட்டிலிருந்து எகிப்து நாட்டுக்குத் தப்பி வந்த நைஜீரியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக விமான நிலையத்துக்குப் பயணம் செய்ய நைஜீரிய அரசு 40 சொகுசு பேருந்துகளை அனுப்பிவைத்துள்ளது.
ஆனால் 5,000 மாணவர்களில் பலர் தாங்களாகவே அண்டை நாடுகள் வழியாக தாய்நாட்டுக்கு தப்பி வந்துவிட்ட நிலையில், எத்தனை பேரை மீட்க நைஜீரிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
சூடானில் இருந்து தப்பி வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியாவிலேயே கல்வியைத் தொடர முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், கால்பந்தாட்ட வீரர் காலின்ஸுக்கு அது போன்ற வாய்ப்புகள் இல்லை.
"இங்கு என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை," என்றார் அவர்.
"ஆனால் நான் திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சூடானில் இருந்த நிலை ஒரு பயங்கர அனுபவமாகவே இருந்தது."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்