You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விமானத்துக்குள் பாம்பு: 11,000 அடி உயரத்தில் விமானி செய்தது என்ன? பயணிகள் தப்பியது எப்படி?
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த விமான ஓட்டுநர் ருடால்ப் எராஸ்மஸ், தனது விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கூடுதல் பயணியை பார்த்துள்ளார். அந்த கூடுதல் பயணி, மனிதர் அல்ல. அவரது இருக்கைக்கு அடியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்புதான் அது.
“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது என்ன நடக்கிறது என்பதே மூளையில் பதிவாகவில்லை ” என்று பிபிசியிடம் ருடால்ப் எராஸ்மஸ் தெரிவித்தார்.
"அது ஒரு அதிர்ச்சியான தருணம்" என்று மேலும் கூறிய அவர், ஆரம்பத்தில் தனது முதுகில் குளிர்ச்சியாக இருந்தபோது, தண்ணீர் பாட்டில் என்று நினைத்ததாக குறிப்பிட்டார்.
“அந்த குளிர்ச்சியான உணர்வை நான் உணர்ந்தேன். என் சட்டையின் மேல் அது ஊர்ந்து சென்றது ” என்று அவர் நம்மிடம் கூறினார். பாட்டிலை சரியாக மூடாததால் அதில் இருந்து தண்ணீர் வடிந்திருக்கலாம் என்று அவர் முதலில் நினைத்திருந்தார்.
“நான் இடது பக்கம் திரும்பி கீழே பார்த்தபோது நாகப்பாம்பு இருக்கைக்கு அடியில் தலையை பின்னோக்கி சாய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன் ”
பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ப்ளூம்ஃபோன்டைனில் இருந்து பிரிட்டோரியா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். பீச்கிராப்ட் பேரோன் 58 என்ற அந்த தனியார் விமானத்தில் 4 பயணிகளுடன் பயணியாக பாம்பும் பயணம் செய்துள்ளது.
கேப் கோப்ரா வகை பாம்புகள் கடித்தால் 30 நிமிடங்களில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட முடியும். எனவே, யாருக்கும் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக,விமானத்தில் பாம்பு இருப்பது தொடர்பாக மற்ற பயணிகளிடம் கூறுவதற்கு முன்பாக மிகவும் யோசித்ததாக அவர் தெரிவித்தார்.
தனது அறையில் இருந்து பின்னால் சென்று பயணிகள் மத்தியில் அந்த பாம்பு ஏதாவது பீதியை ஏற்படுத்திவிடுமோ என்று அவர் பயந்துள்ளார்.
இறுதியில் பயணிகளிடம் இந்த விஷயத்தை சொல்வது என்று அவர் முடிவு செய்தார். “விமானத்தின் உள்ளே பாம்பு இருக்கிறது. என் இருக்கைக்கு கீழ் அது உள்ளது. எனவே, முடிந்தவரை விரைவாக தரையிறங்க முயற்சிப்போம்” என்று அவர் பயணிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பீதியடையக்கூடிய தகவலுக்கு பயணிகள் பதில் எப்படி இருந்தது என்று ருடால்ப் கூறும்போது, “நான் தகவலை கூறிய பின்னர் எல்லோரும் உறைந்து போய்விட்டனர். ஊசியை கீழே போட்டால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி விமானத்தில் நிலவியது” என்று விவரித்தார்.
விமானத்தின் ஓட்டுநர்கள் பல்வேறு சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக பயிற்சிகளை பெற்றிருப்பார்கள். ஆனால் நிச்சயம் விமானிகள் அறையில் பாம்பு இருந்தால் அதனை எப்படி கையால்வது என்ற பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள் என்று கூறிய ருடால்ப், அந்த நேரத்தில் பதற்றம் அடைவது சூழலை மேலும் மோசமாக்கும் என்று தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்காவில் உள்ள வெல்கோம் நகரில் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட வொர்செஸ்டர் ஃபெளையிங் கிளப்பில் பணிபுரியும் இரண்டு பேர், விமானத்தின் அடியில் ஊர்வனம் தஞ்சம் புகுந்ததை தாங்கள் முன்பே கண்டதாகவும், அதனை பிடிக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
விமானத்தை இயக்குவதற்கு முன்பாக, அதனுள் பாம்பு இருக்கிறதா என்பதை பயணிகளுடன் சேர்ந்து எராஸ்மஸ் ஆய்வு செய்துள்ளார். பாம்பை கண்டுபிடிக்க முடியாததால், அது ஏற்கனவே வெளியேறி இருக்க வேண்டும் என்று எண்ணி விமானத்தை அவர் இயக்கியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் எராஸ்மஸ் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். தென்னாப்பிரிக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையர் பாப்பி கோசா ,`விமானத்தில் இருந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றிய சிறந்த விமானி` என்று பாராட்டியதாக நியூஸ்24 தளம் குற்ப்பிட்டுள்ளது.
ஆனாலும், தான் செய்த செயலை நினைத்து எதுவும் சிறப்பாக உணரவில்லை என்று ருடால்ப் எராஸ்மஸ் அடக்கமாக கூறுகிறார். “ நாம் சொதப்பி இருப்பேன். அந்த நேரத்தில் பயணிகளும் மிகவும் அமைதியாக இருந்தனர்” என்று அவர் தன்னடக்கத்துடன் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்