You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
AI செயற்கை நுண்ணறிவால் உங்கள் வேலை பறிபோகும் என்று கவலையா? இதை எப்படி தவிர்க்கலாம்?
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையைச் சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனரான நவீன், AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனக்கு முன்பு போல ஆர்டர்கள் கிடைப்பதில்லை என்கிறார்.
கிராபிக்ஸ் டிசைனிங் துறையில், மனிதர்களின் பல மணி நேர உழைப்பில் உருவாகும் ஒரு விஷயத்தை, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில நொடிகளில் செய்து விட முடிகிறது.
இன்றைய சில நவீன AI தளங்கள் இதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட எனக்கு வேலை கிடைப்பது சவாலாகி விட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த துறையில் மனிதர்களுக்கு தேவையே இல்லாமல் போகலாம் என்ற கவலை தனக்கு தினமும் ஏற்படுகிறது என்கிறார் நவீன்.
நவீன் போலவே AI தொழில்நுட்பத்தால் தனது வேலை பறிபோகக்கூடும் என்று உலகம் முழுவதும் இருக்கும் சிலர் தங்களது சமூக ஊடகங்கள் மூலமாக தங்களது பயத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
'AI-nxiety'
Chat GPT, Google Bard போன்ற சாட்பாட்(Chatbot) உதவியால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது.
உங்களுக்கு அறிமுகம் இல்லாத தலைப்பில் ஒரு கட்டுரை தேவையென்றாலும், நிலவில் நீங்கள் விடுமுறைக்குச் சென்று ஜூஸ் குடிப்பது போல ஒரு புகைப்படம் வேண்டும் என்றாலும், ஒரு ஆப்பை உருவாக்க தேவைப்படும் coding வேண்டும் என்றாலும், அதை AI உதவியுடன் உங்களால் சில நொடிகளில் உருவாக்க முடிகிறது.
AI துறையில் ஏற்பட்ட வளர்ச்சியால், நவீனைப் போல வேலையை இழக்கக்கூடும் என்ற பயம் உங்களுக்கும் இருந்தால் அதன் பெயர் 'AI-nxiety'.
'டே ஒன்' என்ற நிறுவனம் 2023ஆம் ஆண்டு இணையத்தில் பரவலாக பயன்படுத்தும் தலைப்புகள் குறித்து சில சொற்களை அதன் டிக்சனரியில் சேர்த்துள்ளது.
அதில் சேர்க்கப்பட்ட சொற்களில் ஒன்று, 'AI-nxiety'. அப்படியென்றால் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்களின் பங்கேற்பு இல்லாத வேலைகள் உருவாகி இருக்கின்றன. இதன்மூலம் மனிதர்கள் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஏற்படும் பயமே 'AI-nxiety' என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பறிபோகும் வேலைகள்
"என்னுடைய சிம்கார்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் நான் பேச வேண்டுமெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னால் தொலைபேசியில் ஒரு நபரிடம் பேசி, எனக்கு தேவையான உதவியைப் பெற முடிந்தது.
இப்போது வங்கி, செல்போன், உணவு டெலிவரி என பல துறைகளில் இருந்த வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் பணியில் இல்லை. அந்த இடத்தில் எனக்கு உதவி செய்ய AI சாட்பாட்டுகள் மட்டுமே இருக்கின்றன," என்று கூறுகிறார் நீரஜ் சர்மா.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் 30 கோடி வேலைகள் காணாமல் போகும் என்று அமெரிக்க முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் அண்மையில் வெளியிட்ட தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"என்னுடைய வேலையை ஒரு மெஷின் செய்ய முடியுமா? அதை இயக்க நான் தேவையில்லையா?" என மனிதர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் பல்வேறு மட்டங்களில் AI உதவியுடன் சில வேலைகள் மனிதர்கள் உதவியின்றி தானாகவே(automatic) நடக்கும் செயல்முறை நடைமுறைக்கு வந்துள்ளது, என்று கோல்ட்மேன் சாக்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொறியியல், சட்டம், நிதி மேலாண்மை, விற்பனை, விவசாயம், உற்பத்தி, சாப்ட்வேர் என பலதுறைகளில் ஆட்டோமேசன் உதவியுடன் மனிதர்களின் தேவை தவிர்க்கப்படுகிறது.
மருத்துவத் துறைகளிலும் அறுவை சிகிச்சை, உள்நோயாளிகளை கவனித்துக் கொள்வது, நோயாளிகளின் பதிவேடுகளை பரமாரிப்பது, மருத்துவ உபகரணங்கள் என பல மட்டங்களில் AI உதவி செய்கிறது.
ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரி எடுக்கும் முடிவுகளை கூட AI உதவியுடன் எளிமையாக எடுக்க முடியும். இதனால் பல துறைகளில் தொடக்க நிலைகளில் உள்ள பணியிடங்கள் AI உதவியால் மறைந்துள்ளது என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோவன் சாங் என்ற பயனர் ட்விட்டரில் Chat GPT-யிடம், GPT-4 தொழில்நுட்பம் பதிலீடு செய்யும் 20 வேலைகளை பட்டியலிடும்படி கேட்டிருந்தார்.
வாடிக்கையாளர் சேவை அதிகாரி, மொழி பெயர்ப்பாளர், பயண முகவர், ஆன்லைன் உதவியாளர் என 20 வேலைகளில் மனிதர்களின் பங்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கும் என்று Chat GPT பதிலளித்தது.
'பரிணமிக்க வேண்டும்'
Chat GPT போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களின் வளர்ச்சியால் முதலில் காணாமல் போகும் வேலைகளில் மொழிபெயர்ப்பாளர், கன்டென்ட் ரைட்டர், கிராபிக்ஸ் டிசைனர், இணையதளம் உருவாக்குபவர், ஆப் வடிவமைப்பாளர், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என சில வேலைகள் குறிப்பிடப்படுகின்றன.
"AI தொழிநுட்பத்தால் நமது வேலைகளை ஆக்கிரமிக்க முடியாது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் வேலைகளை எளிமையாக்க முடியும்," என்கிறார் 5 வருடமாக கன்டென்ட் ரைட்டராக பணியாற்றும் அம்ரிதா அங்கப்பா.
எழுத்துத் துறையை பொறுத்தவரை அனுபவத்தை தொழில்நுட்பத்தால் ஆக்கிரமிக்க முடியாது. AI உதவியுடன் பள்ளி, கல்லூரிகளில் சமர்ப்பிக்க கட்டுரைகளை எழுத முடியும், ஆனால் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய நினைக்கும் ஒரு நிறுவனத்திற்கு AI-யால் தேவையான உள்ளடக்கத்தை எழுதித் தர முடியாது, அது மனிதர்களால் மட்டுமே முடியும் என்றார் அவர்.
AI வளர்ச்சியால் தொடக்க நிலையில் இருக்கும் நபர்களின் வேலைகள் காணாமல் போகும். குறிப்பாக 20% வேலைகளை AI தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கும். அதனால் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது வேலைகளை இன்னும் திறம்பட செய்யும் வகையில் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என ஐலேசா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில்நாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
Chat GPT போன்ற தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும். Chat GPT தளத்தில் அனைவராலும் கேள்வியை கேட்டு சரியான பதிலைப் பெற முடியாது, மாறாக சரியான கேள்வியை எப்படிக் கேட்பது எனக் கற்றுக் கொள்ளும் நபர்களுக்கு AI தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகும் என்ற கவலை ஏற்படத் தேவையில்லை என்று பிபிசியிடம் பேசிய கூகுள் ஆப் ஸ்கேல் அகாடமியில் பயிற்சி பெற்ற செல்வ முரளி தெரிவித்தார்.
காணாமல் போகும் வேலைகளுக்கு மாற்று என்ன?
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலமாக பல்வேறு துறைகளில் 20% வேலை முற்றிலும் காணாமல் போகும் என்றும், 40% பணிகளில் AI-யின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கும் என்று செந்தில்நாதன் குறிப்பிட்டார்.
இந்த நிலை வரலாற்றில் எப்போதும் நடந்துள்ளது. முதலில் மனிதர்கள் கைகளை பயன்படுத்தி வேலை செய்தார்கள். அடுத்து மெஷின்கள் வந்த போது வேலை காணாமல் போகும் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து கம்ப்யூட்டர் வந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு வந்திருக்கிறது. இதிலிருந்து மனிதர்கள் வேலையிழப்பை தடுக்க தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் செந்தில்நாதன்.
2025ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் செய்யும் வேலையும், கம்ப்யூட்டர்களால் நடக்கும் வேலையும் சரிசமாக இருக்கும் என்று உலக பொருளாதார மன்றம்(world economic forum) குறிப்பிடுகிறது.
ஆட்டோமேசனால் வேலை போகும் என்ற அவதானிப்புகள் மட்டுமே இப்போது வரை இருக்கின்றன. ஆனால் மனிதர்களின் வேலையை, AI பதிலீடு செய்ய இன்னும் 5 வருடங்கள் ஆகும் என்றார் செல்வ முரளி.
"வரலாற்றில் புதிதாக ஒரு தொழில்நுட்பம் வரும்போது சில வேலைகள் காணாமல் போவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. ஆனால் வேலை இழப்பவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய கொள்கைகளை வகுத்தால் மட்டுமே திடீர் வேலையிழப்புகளை தடுக்க முடியும்," என்றார் செந்தில்நாதன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்