உலக வரைபடத்திலேயே இல்லாத சோவியத் உருவாக்கிய மிதக்கும் 'மர்மத்தீவு' - உள்ளே என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்
- பதவி, பிபிசி உலக செய்திக்காக
காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம்.
1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் விளைவாகவே இந்த நகரம் உருவானது.
அஜர்பைஜானின் பாகு நகரத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தின் படி இந்த நகரம், கடலில் அமைந்துள்ள மிகப் பழமையான எண்ணெய் உற்பத்தி இடமாக அறியப்படுகிறது. இந்த நகரின் பெயரை ரஷ்ய மொழி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் 'எண்ணெய் பாறைகள்' என்றும் பொருள் தருகிறது.
2024ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 29-வது காலநிலை மாற்ற மாநாடு (COP29), பாகு நகரில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

சேதமான கப்பல்கள் மீது நகரம் எப்படி உருவானது?
அஜர்பைஜானில் 1920ஆம் ஆண்டு செம்படைகள் நுழைந்த போது, பாகு நகரம் சோவியத் ஒன்றியத்துடன் (USSR) சேர்க்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில காலம் முன்பு வரை இந்நகரம் 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அதன் ஒரு அங்கமாகவே இருந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது, கிழக்கு போர் முனையில் பயன்படுத்தப்பட்ட பெரும்பகுதி எண்ணெய் பாகுவிலிருந்து வந்ததால், இந்நகரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
ஜோசப் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்நகரம் உருவாக்கப்பட்டது. பொருளாதாரம், குறிப்பாக தொழிற்துறை போன்ற துறைகளின் மேம்பாட்டிற்காக ஸ்டாலின் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கினார். இந்த திட்டம் சோவியத் அதிகாரத்துவத்தின் முதன்மையாக இருந்தது. அதில் சில திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை, மேலும் சில கைவிடப்பட்டன அல்லது தோல்வியடைந்தன.
1949ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான எண்ணெய் வளங்கள் ஆய்வுக்கு பிறகு இந்நகரத்தை உருவாக்குவதற்கான வேலைகள் தொடங்கின. அதன் பிறகு இது மத்திய ஆசியாவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ள இடமாக மாறியது.

பட மூலாதாரம், SOCAR
"நவம்பர் 7ஆம் தேதி அன்று, இங்குள்ள எண்ணெய் கிணற்றில், நாள் ஒன்றுக்கு 100 டன் வரை எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இங்குதான் உலகின் முதல் கடலோர எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. காஸ்பியன் கடல்பகுதியில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்வதில் அஜர்பைஜான் முதன்மையானது" என்று அஜர்பைஜானின் அரசின் எண்ணெய் நிறுவனமான SOCAR வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தங்குவதற்கான வீடுகளை கொண்டு சிறிய அளவில் உருவான இந்நகரத்தில், 1951ஆம் ஆண்டு முதல் பெரிய கட்டுமானங்கள் நடந்தன.
"இந்நகரம் ஒரு கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்ப அதிசயம்" என்று 1990களின் பிற்பகுதியில் இந்த நகரத்தை பார்க்க வந்த திரைப்படத் தயாரிப்பாளர் மார்க் வோல்ஃபென்ஸ்பெர்கர் கூறினார்.
கடற்கரையில் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, தனித்துவமான ஒரு செயல்பாடு செய்யப்பட்டது. பயன்படுத்தப்படாத கப்பல்களை கடலுக்கு அடியில் மூழ்க செய்து, அவற்றை அடித்தளமாக பயன்படுத்தி அதன் மீது தூண்கள் எழுப்பப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இந்த கப்பல்களுள் ஒன்று ஜோராஸ்டர் டேங்கர் ஆகும். இது உலகில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கப்பல்களுள் ஒன்று. இதனை உருவாக்கியவர் லுட்விக் நோபல் ஆவார். இவர் ஆல்பர்ட் நோபலின் சகோதரர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு தீர்வாக இந்த கப்பலை அவர் தயாரித்தார்.
"1951ஆம் ஆண்டில், இந்த தீவை காற்று மற்றும் அலைகளிலிருந்து பாதுகாக்க, கசார்டாங்கர் மற்றும் கசார்டோனன்மா நிறுவனங்களின் ஆறு கூடுதல் கப்பல்கள் பிரித்தெடுக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டன. இந்த கப்பல்களின் அறைகள் குழு உறுப்பினர்களின் தங்கும் அறைகள், உணவருந்தும் அறைகள், மருத்துவ அறைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டன. எனவே இந்த இடத்தின் உண்மையான பெயர் 'ஏழு கப்பல்களின் தீவு' ஆகும்" என்று SOCAR வலைதளம் தெரிவிக்கின்றது.
அதிலிருந்து தற்போது வரை இந்த தீவு, 'நெப்ட் டேஷ்லரி' என்ற பெயரை கொண்டே அழைக்கப்படுகிறது.
மக்கள் வாழும் பகுதி
காலப்போக்கில் நெப்ட் டேஷ்லரி வளர்ச்சி அடைந்ததால், இந்நகரம் கடலின் மீதிருக்கும் பிரமாண்ட ஆக்டோபஸ் போல கட்சியளிக்கின்றது.
அங்கு பணிபுரியும் நபர்களுக்காக, பேக்கரி, கடைகள், மருந்தகங்கள், கால்பந்து விளையாட்டு மைதானம், ஹெலிபோர்ட் மற்றும் திரையரங்கமும் கட்டப்பட்டன.
கடலடியில் இருந்து தூண்கள் எழுப்பப்பட்டு, நெப்ட் டேஷ்லரி நகரமானது அடிமட்டத்திற்கு சில மீட்டர்களுக்கு மேல் கட்டப்பட்டுள்ளாதாக, அஜர்பைஜானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் மிர்வாரி கஹ்ராமன்லி பிபிசியிடம் கூறினார்.
இங்கு மக்கள் தங்கக்கூடிய கட்டடங்கள், மருந்தகம் மற்றும் கடைகள் இருக்கின்றன. கூடுதலாக, இங்கு மரங்கள் நடப்பட்டும், பூங்காக்கள் அமைக்கப்பட்டும் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நெப்ட் டேஷ்லரி நகரின் சிறப்புகள்
"உலகில் திறந்தவெளி கடல்பரப்பில் முதலில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடமாக நெப்ட் டேஷ்லரி கருதப்படுகின்றது. சில சமயங்களில் இந்த இடம் இதன் தனித்தன்மைகளால் உலகின் எட்டாவது அதிசயம், ஏழு கப்பல்களின் தீவு, அதிசயங்களின் தீவு எனவும் அழைக்கப்படுகின்றது" என கஹ்ராமன்லி தெரிவித்தார்.
இங்கு சுமார் 2000 எண்ணெய் கிணறுகள் இருப்பதாகவும், அவை 12 கிலோ மீட்டர் நீளமும், 6 கிலோ மீட்டர் அகலமும் மற்றும் 200 கிலோமீட்டர் ஆழம் வரை இருப்பதாக, கஹ்ராமன்லியின் தரவுகள் கூறுகின்றன.
"இங்கு முதலில் 5,000 ஊழியர்கள் பணிபுரிந்தனர். தற்போது இங்கு 3000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் 15 நாட்கள் கடலிலும் மற்றும் 15 நாட்கள் நிலத்திலும் இருக்கின்றனர்", என்று கஹராமன்லி கூறுகிறார்.

பட மூலாதாரம், SOCAR
நெப்ட் டேஷ்லரி அஜர்பைஜானின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான SOCAR-க்கு சொந்தமானது. இது எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களின் உற்பத்தி, சுத்திகரித்தல் மற்றும் ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்தல் போன்ற பணிகளுக்கு பொறுப்பாக உள்ளது.
SOCAR-ஐ பொருத்தவரை, காஸ்பியன் கடலில் எண்ணெய் உற்பத்தி செய்வதில் இந்த தீவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தீவில் இருந்து சுமார் 180 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு 7.6 மில்லியன் டன் உற்பத்தி செய்து இந்த தீவு சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் SOCAR-இன் தரவுகளின் படி, தற்போது நாள் ஒன்றுக்கு 3000 டன் மட்டுமே எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, மிகவும் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
சரிவை சந்தித்தது எப்போது?
1960-களில் எண்ணெய் உற்பத்தியில் இந்த நகரம் உச்சத்தை எட்டியது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் நிலையற்ற எண்ணெய் விலை மற்றும் சோவியத் யூனியனின் சரிவு போன்றவை காரணமாக இந்நகரம் அதன் சிறப்பை இழக்க தொடங்கியது.
2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 300 கிலோமீட்டர் சாலை கொண்ட இந்த நகரத்தில் வெறும் 45 கிலோமீட்டர் சாலைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக டெர் ஸ்பியிகள் (Der Spiegel) என்ற ஜெர்மன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. Oil Rocks – City Above The Sea என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநர் மார்க் ஒல்ஃப்ஸ்பெர்கர் இந்த நகரத்தில் நடந்த சிலவற்றை பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில், "நான் இளம் வயதில் இருந்தபோது, இந்த சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தன," என உள்ளூர் தொழிலாளி ஒருவர் தனது கனரக வாகனத்திலிருந்து பயணம் செய்தவாறு கூறினார். அடுத்த காட்சியில் முற்றிலும் சிதைந்த, கைவிடப்பட்ட கட்டடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
நகரத்தின் கட்டமைப்பு அல்லது காலநிலை மாற்றத்தால், இந்நகரம் கடலில் மூழ்குவதற்கான ஆபத்து உள்ளதா என்ற கேள்விக்கு, "இந்த நகரம் தற்போது மூழ்குவதற்கான சாத்தியமில்லை, தற்போது அது போன்ற ஆபத்து எதுவும் இல்லை" என்று மிர்வரி கஹ்ராமன்லி பதில் கூறினார்.
"நெப்ட் டேஷ்லரி என்பது கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப நகரம். இங்கு கடல் படுக்கைகளும் எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன, அதில் துளையிடப்பட்டு, எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது", என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த இடத்தைப் பற்றிய தற்போதைய படங்களை கண்டுபிடிப்பது எளிதானது அல்ல.
1990களின் பிற்பகுதியில் ஜேம்ஸ் பாண்ட் தொடரில் வெளியான The World is Never Enough உட்பட அந்தப் பகுதியில் படமாக்கப்பட்ட அனைத்து திரைப்படங்கள் பற்றியும் SOCAR வலைதளத்தில் பதிவுகள் இருக்கின்றன.
இந்த நகரின் கட்டமைப்பினால் இங்கு கப்பல் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக தான் சென்றடைய முடியும். எளிதாக இந்த இடத்தை சென்றடையவோ அல்லது சுற்றிப் பார்க்கவே முடியாமல் போக இதுவும் காரணமாகியுள்ளது.
இருப்பினும், எண்ணெய் உற்பத்தியில் சரிவு மற்றும் தீவின் கட்டமைப்புகளில் தொய்வு ஆகியவற்றால், இது ஒரு சுற்றுலா தலமாக மாறும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.
மிர்வரி கஹ்ராமன்லி, "கடற்கரை ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா இருப்பிடங்கள் போன்றவை இந்த நகரத்தின் எதிர்காலமாக இருக்கும்", என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












