தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை சேர்த்தது ஏன்?

ஸ்டாலின் கரும்பு விவசாயம்

 தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு வழங்கும் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பையும் சேர்த்து வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலில் கரும்பு இடம்பெறாத நிலையில், கரும்பை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது ஏன்?

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக, மாநிலத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் திருநாளை ஒட்டி பரிசாக, ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ வெல்லமும் வழங்கப்படும் என்றும் மேலும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால், கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகள், போராட்ட அறிவிப்புகளை அடுத்து, பொங்கல் பரிசுடன் கரும்பையும் சேர்த்து வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. இந்தப் பரிசுத் தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய துணிப் பை வழங்கப்பட்டது.

இத்தோடு, முழு கரும்பு ஒன்றும் அளிக்கப்பட்டது. 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பரிசுத் தொகுப்பிற்காக மொத்தமாக 1,297 கோடி ரூபாய் செலவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

விவசாயிகள் முறையீடு

ஆனால், இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டபோது பல முறைகேடு புகார்கள் எழுந்தன. பலருக்கு வழங்கப்பட்ட வெல்லம் உருகிய நிலையில் இருந்தது. சிலருக்கு எல்லா பொருட்களும் கிடைக்கவில்லை என புகார் கூறப்பட்டது.

பாதி பேருக்கு மேல் துணிப்பை வழங்கப்படாமல், சொந்தமாக பைகளை எடுத்துவந்து பொருட்களை வாங்கிச் செல்லும்படி கூறப்பட்டது. மேலும், கரும்பு வாங்கியதில் முறைகேடு இருந்ததாகவும் விவசாயிகளும் புகார் தெரிவித்தனர்.

மேலும், இந்த பரிசுத் தொகுப்பிற்காக பொருட்களை கொள்முதல் செய்யும் டெண்டர் தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அதில் முறைகேடு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

அதிமுக இந்த விவகாரத்தைப் பெரிதாக எழுப்பியது. ஆனால், 500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 353 ரூபாய்க்கு வாங்கியதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோல, விவசாயிகளிடமிருந்து கரும்பை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு அரசுக்கு சப்ளை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இவை எல்லாவற்றையும் தாண்டி, வெல்லம் உருகிய நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பெரும் நெருக்கடியாக உருவெடுத்தது.

முதலமைச்சரே பல இடங்களில் நேரில் ஆய்வுசெய்தபோதும், பொருட்கள் மாற்றிக்கொடுக்கப்பட்டதாக புகார்களே் தொடர்ந்தன.

ஸ்டாலின் பொங்கல் கரும்பு பரிசு

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இந்த நிலையில்தான் இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றோடு, ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்பிற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, பொங்கலை ஒட்டி தங்களிடமிருந்து கரும்பை அரசே கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில், பல மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றதாக விவசாயிகள் கூறினர்.

கடந்த முறை அரசு ஒரு கரும்பை நல்ல விலை கொடுத்து வாங்கிய நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால், இடைத்தரகர்கள் ஒரு கரும்பை ஐந்து ரூபாய்க்குக் கேட்பதாக விவசாயிகள் கூறினர்.

நாற்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்து கரும்பை விளைவித்தால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், அரசின் முடிவு தங்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜகவும் அதிமுகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இடதுசாரி கட்சிகளும் பொங்கல் பரிசுடன் கரும்பை வழங்க வேண்டுமெனக் கோரின.

திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும் வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக அ.தி.மு.க. இன்று அறிவித்தது.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palaniswami

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர்

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதன் முடிவில், பொங்கல் பரிசுடன் கரும்பையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளதால், கரும்பைக் கொள்முதல் செய்யும் பணிகள் இன்றே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் கரும்புக்கு மட்டும் 71 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

"இந்த அறிவிப்பு நல்ல விஷயம். தமிழ்நாட்டில் 10,000 ஏக்கருக்கு மேல் இந்த செங்கரும்பை சாகுபடி செய்கிறார்கள். இந்த கரும்பை சாகுபடி செய்பவர்கள் பெரிய விவசாயிகள் இல்லை. இதனை ஏக்கர் கணக்கிலும் செய்ய மாட்டார்கள். பெரும்பாலும் கால் ஏக்கர், அரை ஏக்கர் என சிறிய அளவில்தான் இதனைப் பயிர் செய்வார்கள்.

இப்போது இந்த அறிவிப்பின் மூலம் இதுபோல சிறிய அளவில் பயிர் செய்த 15,000 குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கரும்பை பயிர் செய்ய குடும்ப உழைப்புக் கூலி, நில வாடகை ஆகியவை இல்லாமல் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் செலவழித்திருக்கிறார்கள். இந்தக் கரும்பில் சர்க்கரைத் திறன் குறைவு என்பதால் ஆலைகளில் எடுக்க மாட்டார்கள்.

கொள்முதல் ஆலைகளில், கரும்பு டன்னுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் கொடுப்பார்கள். அப்படியானால், ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய்தான் கிடைக்கும். அது சிறிய விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பாக முடியும். இப்போது அரசே கரும்பை வாங்குவதால், இழப்பிலிருந்து விவசாயிகள் தப்பியிருக்கிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரவீந்திரன்.

விநியோகம் எப்படி நடக்கும்?

ஸ்டாலின் கரும்பு பரிசு

கடந்த முறை ஒரு கரும்புக்கு 33 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, அரசே அறுப்பு, போக்குவரத்து ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, 18 ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்குக் கொடுத்தது.

இந்த முறை, ரூ. 15 முதல் ரூ. 20 வரை ஒரு கரும்புக்கு அளிக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு செலவிட்ட சுமார் 71 கோடி ரூபாயே இந்த ஆண்டும் கரும்புக்காக செலவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வரும் மூன்றாம் தேதி முதல் 8ஆம் தேதிவரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இதற்கான டோக்கன் வழங்கப்படவிருக்கிறது. ஜனவரி 9ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் துவங்கி வைக்கிறார்.

இப்போது பொங்கலுக்கு கரும்பும் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அ.தி.மு.கவின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

2019ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டும் இதே போன்று வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: