புகைப்பட கலைஞர்கள் காரில் துரத்திய சம்பவம்: இளவரசர் ஹாரி கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க நிறுவனம்

இளவரசர் ஹாரி - இளவரசி மேகன்

பட மூலாதாரம், PA Media

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இயங்கி வருகிறது பேக்கிரிட் புகைப்பட நிறுவனம். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் வழக்கறிஞர்கள் குழு இந்த நிறுவனத்துக்கு புதன்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அதில், “இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, அவர்களை புகைப்படக் கலைஞர்கள் காரில் பின்தொடர்ந்துள்ளனர்.

அப்போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது படங்கள் என அனைத்தையும் தங்களிடம் உடனடியாகத் தர வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளது பேக்கிரிட் நிறுவனம். அரச உரிமைகளை அமெரிக்கர்கள் நிராகரித்து நீண்ட காலம் ஆகிறது என்று நையாண்டியுடன் கூடிய பதிலை, தங்களின் வழக்கறிஞர்கள் ஹாரியின் வழக்கறிஞர்களுக்கு அளித்துள்ளனர் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அமெரிக்காவில் சொத்துகள் அதன் உரிமையாளருக்கே சொந்தம். அதைத் தரும்படி மூன்றாம் நபர் கோர முடியாது என உங்களுக்குத் தெரியும் எனக் கருதுகிறோம். ஒருவேளை அரசர்கள் இப்படி கோரலாம்.

அப்படி அவர்கள் கோரினால், குடிமக்கள் தங்களது சொத்துகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரும்படியான பிரிட்டன் அரசின் விதிமுறைகள், நீண்ட காலத்துக்கு முன்பே அமெரிக்காவில் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று அவர்களுக்கு நீங்கள்தான் ஆற அமர அறிவுறுத்த வேண்டும். நாங்கள் எங்கள் நாட்டு சட்டத்தின் பக்கம் நிற்கின்றோம்” என்று ஹாரி மற்றும் மேகனின் வழக்கறிஞர் குழுவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பேக்கிரிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஹாரி மற்றும் மேகனின் கருத்தை பிபிசி கேட்டிருந்தது. அதற்கு அவர்களின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சம்பவத்தை விளக்கினார்.

“ஹாரி மற்றும் மேகன் பயணித்த காரை சிலர் பின்தொடர்ந்தனர். பெரிய விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்த அந்தத் துரத்தல், கார்கள் ஒன்றையொன்று மோதிக் கொள்ளும் அபாய சூழலை ஏற்படுத்தும்படியாக இருந்தது. பரபரப்பான இந்தச் சம்பவம் புதன்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது” என்று அலர் கூறினார்.

இளவரசர் ஹாரி - இளவரசி மேகன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹாரியும் மேகனும் ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்

நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஹாரி, மேகன் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து காரில் பயணித்த அவர்களை ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் கார்களில் பின்தொடர்ந்தனர் எனத் தெரிய வந்ததாக நியூயார்க் நகர போலீசார் கூறினர்.

ஆனால், இந்த கார் துரத்தல் சம்பவத்தில் மோதல்களோ, காயங்களோ, கைது நடவடிக்கைகளோ நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பிரிட்டரில் அரச தனி சிறப்புரிமை என்று எதுவுமில்லை என்பதுடன், தனியுரிமை (Privacy) தொடர்பாக, பிரிட்டன் அரச குடும்பத்துக்கும் அந்நாட்டு ஊடகங்களுக்கும் இடையே நீண்ட காலமாக மனகசப்பு இருந்து வருகின்றது.

ஹாரி மற்றும் மேகனை புகைப்படம் எடுத்த நிகழ்வில் ஈடுபட்ட நான்கு புகைப்பட கலைஞர்களின்(freelance photographers) நடத்தை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பேக்கிரிட் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

குறிப்பிட்ட இந்த நிகழ்வின் எந்தத் தருணத்திலும் ஹாரி, மேகன் தம்பதிக்கு ஆபத்து எதுவும் நேரவில்லை என்பதை புகைப்படக் கலைஞர்கள் உணர்ந்திருந்தனர் எனவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

இந்த சம்பவத்தின்போது ஹாரி, மேகன், அவரது தாய் மற்றும் அவர்களின் பாதுகாவலர் ஆகியோர் காரில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

புகைப்படக்காரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததையடுத்து கார் இரண்டு முறை அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிகழ்வின்போது காரில் இருந்த ஓட்டுநர் சுக்சர்ன் சோனி சிங்கிடம் பிபிசி நேர்காணல் நடத்தியது. அப்போது, “தங்களது கார் ஒரு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தது என்று சிங் கூறினார். கொஞ்ச தூரம் பயணித்த நிலையில், ஒரு குப்பை லாரி குறுக்கே வந்ததால் தங்களின் கார் இடைமறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அப்போது அங்கு திடீரென வந்த புகைப்பட கலைஞர்கள் (paparazzi) ஹாரி மற்றும் மேகனை புகைப்படம் எடுத்துத் தள்ளினர். இதனால் காரை மீண்டும் காவல் நிலையத்தை நோக்கிச் செலுத்தும்படி நான் பணிக்கப்பட்டேன்,” என்று அந்தச் சம்பவத்தை விளக்கினார் ஓட்டுநர் சிங்.

இளவரசர் ஹாரி - இளவரசி மேகன்

ஹாரி மற்றும் மேகன் தாங்கள் பிரபலமானவர்கள் என்பதைப் புரிந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து எழும் ஆர்வத்துக்கு அவர்களின் பாதுகாப்பை ஒருபோதும் விலையாகக் கொடுக்க முடியாது என்று அவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புகைப்படக் கலைஞர்கள் மீதான தமது கோபத்தை இளவரசர் ஹாரி பல ஆண்டுகளாகப் பேசி வந்தார். பிபிசி ஆவணப்படம் ஒன்றில், தனது தாயின் (டயானா) மரணத்துக்குக் காரணமான 'இவர்களை வேட்டை நாய்களுடன்' அவர் ஒப்பிட்டிருந்தார்.

“எனது வாழ்க்கையில் நான் விரும்பும் மற்றொரு பெண்ணைப் பார்ப்பது கடினம்” என்று சமீபத்தில் வெளியான நெட்ஃப்லிக்ஸ் ஆவணப்படமான “ஹாரி அண்ட் மேகனில்” உணர்ச்சி ததும்ப அவர் கூறியிருந்தார்.

இளவரசர் ஹாரியின் தாயான டயானா, கடந்த 1997இல், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுப்பதற்காக, அவரது காரை கலைஞர்கள் பின்தொடர்ந்தனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு டயானா உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: