You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவை விட சௌதியில் இருந்தே அதிக இந்தியர்கள் வெளியேற்றம் - 5 ஆண்டுகளில் என்ன நடந்தது?
- எழுதியவர், அவதார் சிங்
- பதவி, பிபிசி பத்திரிகையாளர்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவால் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் பெரும விவாதப் பொருளானது.
இருப்பினும், இந்திய அரசின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 18-ஆம் தேதி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், 2025-ஆம் ஆண்டில் மட்டும் சௌதி அரேபியாவிலிருந்து 7,019 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சக தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சௌதி அரேபியாவிலிருந்து 46,875 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, 81 நாடுகளில் இதுவே மிக அதிக அளவாகும்.
பிடிஐ செய்தி படி , 2024 ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவில் 2.4 மில்லியன் இந்தியத் தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.
சௌதி அரேபியாவில் 2.69 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
பெண்கள் உட்பட பல இந்தியர்கள் கொத்தனார், ஓட்டுநர் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் என வேலைகளுக்காக சௌதி அரேபியா செல்கின்றனர். சௌதி அரேபியாவின் தொழிலாளர் சந்தையில் 'இந்தியத் தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்'.
எத்தனை இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்?
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, சௌதி அரேபியாவிலிருந்து 2021ம் ஆண்டில் 8,887 இந்தியர்களும், 2022-ஆம் ஆண்டில் 10,277 பேரும், 2023-ஆம் ஆண்டில் 11,486 பேரும், 2024-ஆம் ஆண்டில் 9,206 பேரும், 2025-ஆம் ஆண்டில் 7,019 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மறுபுறம், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து மொத்தம் 7,824 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா, நியூயார்க், ஹூஸ்டன், சிகாகோ மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகிய இடங்களிலுள்ள இந்திய தூதரக பதிவுகளின் படி, அமெரிக்காவிலிருந்து 2021-ஆம் ஆண்டில் 888 இந்தியர்களும், 2022-ஆம் ஆண்டில் 963 பேரும், 2023-ஆம் ஆண்டில் 686 பேரும், 2024-ஆம் ஆண்டில் 1,475 பேரும் மற்றும் 2025-ஆம் ஆண்டில் 3,812 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தலுக்கான காரணங்கள் என்ன?
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கின் கூற்றுப்படி, பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
"வெளிநாடுகளில் இந்தியர்கள் காவலில் வைக்கப்படுவதற்கும், நாடு கடத்தப்படுவதற்கும் பல காரணங்கள் உள்ளன. விசா அல்லது குடியிருப்பு அட்டை காலாவதியான பிறகும் தங்கியிருப்பது, பணி அனுமதி இன்றி பணியாற்றுவது, தொழிலாளர் விதிகளை மீறுவது, வேலை தருபவரிடமிருந்து தப்பிச் செல்வது மற்றும் சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்வது போன்றவை இதில் அடங்கும்"என்று கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
"வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. இந்திய அரசு அவ்வபோது சம்பந்தப்பட்ட அரசாங்கங்களுடன் அரசியல் மட்டத்தில் இந்தப் பிரச்னைகளை எழுப்பி வருகிறது," என்று அவர் கூறினார்.
சௌதி அரேபியாவில் எட்டு ஆண்டுகள் சிவில் இன்ஜினியராகப் பணியாற்றிய லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த குர்பக்ஷ் சிங் இதுகுறித்துக் கூறுகையில், "சௌதி அரேபியாவின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை, ஆனால் அவை யாருடைய உரிமைகளையும் மீறுவதில்லை. நாம் ஏதேனும் தவறு செய்தால், எந்த நிறுவனமும் நம்மைத் திருப்பி அனுப்பிவிடும். நாம் பெண்களிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும். அங்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடக்கும். அந்த நேரத்தில் அரை மணி நேரம் வேலை செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும்"என்று கூறுகிறார்.
சௌதி அரேபியாவில் சம்பாதிக்க எவ்வளவு செலவாகும்?
இந்தியாவில் இருந்து நிலமற்ற மக்கள் பெரும்பாலும் சௌதி அரேபியா அல்லது பிற அரபு நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர் என்று கூறுகிறார் தல்வண்டி சாபோவில் உள்ள குரு காஷி பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் பல்தேவ் சிங் ஷெர்கில்.
"அவர்களுடன் சேர்ந்து, முந்தைய தலைமுறையினர் போக்குவரத்து அல்லது பிற சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களைத் தவிர, பெண்களும் பெருமளவில் சௌதி அரேபியாவுக்குச் செல்கின்றனர். ஜிஎன்எம் அல்லது ஏஎன்எம்(செவிலியர் படிப்புகள்) முடித்த பிறகு, பெண்கள் அரபு நாடுகளில் குழந்தைப் பராமரிப்பாளர்களாக பணியாற்றச் செல்கின்றனர்"என்று பல்தேவ் சிங் ஷெர்கில் கூறுகிறார்.
கொத்தனார், வெல்டர்கள் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக அளவில் அரபு நாடுகளுக்குச் சென்றாலும், ஓட்டுநர் துறையிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணி செய்கின்றனர் என்று பல்தேவ் சிங் ஷெர்கில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "சௌதி அரேபியா போன்ற நாடுகளில் பணிபுரிபவர்கள் இந்திய மதிப்பில் மாதம் 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால், நமது நாட்டில் அமைப்புசாரா துறையில் இருப்பவர்களுக்குச் சராசரியாக 15 முதல் 17 ஆயிரம் ரூபாய் வரையே கிடைக்கிறது"என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இங்கு ஏஎன்எம் செவிலியர்களுக்குச் சம்பளம் மிகக் குறைவு. அவர்கள் சராசரியாக ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை மட்டுமே பெறுகிறார்கள். இங்கு அவர்களின் வேலைச் சூழலும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. ஆனால் அங்கு அவர்களுக்குச் சுமார் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதுடன், வேலைச் சூழலும் நன்றாக உள்ளது. அங்கு குழந்தைப் பராமரிப்பாளர் வேலைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது"என்று விளக்கினார்.
சௌதி அரேபியாவில் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசிய குர்பக்ஷ் சிங், தினசரி கூலியுடன் கூடுதல் நேரம் பணி செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்று கூறுகிறார்.
மேலும், "எனக்கு அங்கு நல்ல சம்பளம் கிடைத்தது. தினசரி கூலியுடன் கூடுதல் நேரம் பணி செய்ததன் மூலம் மாதம் சுமார் 78 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தேன். ஓட்டுநர் துறையிலும் அங்கு நல்ல வருமானம் கிடைக்கிறது"என்கிறார் குர்பக்ஷ் சிங்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு