தெலங்கானா தேர்தல்: இரு முதல்வர் வேட்பாளர்களையும் தோற்கடித்த பாஜக வேட்பாளர்

தெலங்கானா முதல்வர் பதவியில் இருந்து பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நோக்கி நகர்ந்த நேரத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டிஜிபி அஞ்சனி குமார் சஸ்பெண்ட்
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமார் தேர்தல் ஆணையத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் இரண்டு அதிகாரிகளான சஞ்சய் ஜெயின், நோடல் மகேஷ் பகவத் ஆகியோர் ரேவந்த் ரெட்டி வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்களை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இரு முதல்வர் வேட்பாளர்களையும் தோற்கடித்த பாஜக வேட்பாளர்

பட மூலாதாரம், ANI
காமாரெட்டியில் சந்திரசேகர் ராவ் தோல்வியடைந்த தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கே.வி.வெங்கட ரமண ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 19வது சுற்று முடிவில் 65,198 வாக்குகளைப் பெற்றிருந்தார். கேசிஆர் 59,388 வாக்குகளைப் பெற்றிருந்தார். காமாரெட்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி போட்டியிட்டார்.
ஆனால், இந்த இருவரையும் தவிர்த்து, காமாரெட்டி மக்கள் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். காமாரெட்டி தொகுதியில் ரேவந்த் ரெட்டி 54,296 வாக்குகளைப் பெற்றார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி

பட மூலாதாரம், FACEBOOK/ANUMULA REVANTH REDDY
தெலங்கானாவில் வெற்றி உறுதியானதும், பத்திரிகையாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, தலைமைச் செயலகத்தின் கதவுகள் சாமானியர்களுக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என்று கூறினார்.
இனி, தெலங்கானாவில் நிர்வாகம் கடந்த காலத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்றார்.
மேலும், மக்கள் அளித்த தீர்ப்பை சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஏற்றுக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம் என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.
தெலங்கானா மாநிலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
கொண்டாடி வரும் காங்கிரஸ் தொண்டர்கள்
காங்கிரஸ் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் ஹைதராபாதில் இருக்கும் கட்சி அலுவலகத்தின் முன் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் கட்சியாக உள்ளது. தெலங்கானாவில் கடந்த 2018-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (பாரத் ராஷ்டிர சமிதியின் அப்போதைய பெயர்) 88 தொகுதிகளை வென்றது, அப்போது, காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
தெலங்கானா சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 119 இடங்கள் இருக்கும் தெலங்கானாவில் 60 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை. தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், ANI
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடபடத் துவங்கினார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரெட்டி, அப்போது ஏ.பி.வி.பி.யில் இணைந்திருந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக, 2009-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார்.
2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். இருப்பினும், 2018 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால் காங்கிரஸில் சேருவது அவருக்குப் பெரிதாகப் பலனளிக்கவில்லை.
ஆட்சி முடிவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே சட்டசபையை கலைத்து தேர்தலை நடத்திவிட்டார் கே.சி.ஆர்.
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் வெறும் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தது.
இந்தத் தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் அவர் தற்போதைய முதல்வர் கே.சி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

பட மூலாதாரம், ANI
தெலங்கானாவில் போட்டி எப்படி இருந்தது?
தெலங்கானாவில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது பி.ஆர்.எஸ். (முன்பு டி.ஆர்.எஸ்.). தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியது அந்தக் கட்சி.
ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்-க்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.
பா.ஜ.க. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. இது தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருந்தன.
பாரத் ராஷ்ட்ர சமிதி - காங்கிரஸ் கூட்டணி - பா.ஜ.க. கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுவதைப் போலத் தோற்றம் இருந்தாலும், களத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.

பட மூலாதாரம், ANI
வேட்பாளர்களைப் பாதுகாக்க சொகுசுப் பேருந்துகள்
தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தங்களது வேட்பாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்ல, சொகுசுப் பேருந்துகள் வரவழைத்துள்ளன.
இதுகுறித்துப் பேசிய தெலங்கானா மாநிலக் காங்கிரஸின் துணைத் தலைவர் கிரண் குமார் சமாலா, கே.சி.ஆர் மற்ற கட்சிகளிலிருந்து வெற்றி வேட்பாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் பழக்கமுடையவர் என்பதால் இந்த முன்னேற்பாடுகள் தேவைப்படுவதாகக் கூறினார்.
சூழ்நிலையை நிர்வகிக்க அண்டை மாநிலமான கர்நாடகாவின் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் ஹைதராபாத் சென்றிருக்கிறார்.
இதுகுறித்து கர்நாடகாவின் காங்கிரஸ் அமைச்சர் ரஹீம் கானிடம், தெலங்கானா வேட்பாளர்களை பெங்களூருவுக்குக் கொண்டுவர திட்டம் இருக்கிறதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் "அப்படி ஒரு நிலைமை வந்தால் அதை கட்சித் தலைமை முடிவெடுக்கும்,” என்றார்.
தெலங்கானா மாநில பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் என்.வி.சுபாஷ், இது காங்கிரஸ் கட்சிக்குத் தனது வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












