You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் சினிமாவை ஆட்டுவிக்கும் போதைப் பொருள் சர்ச்சை - திரையுலகில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
'திரைப்பட நட்சத்திரம் அல்லது பிரபலம் ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்தியதால் கைது' என்ற செய்தி புதிதல்ல. கடந்த ஏப்ரல் மாதம் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சிலர் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கொச்சியில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமையன்று, பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் கைது செய்யப்பட்டது, திரைப்படத்துறையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படத் துறைகளின் வரலாற்றுப் பக்கங்களிலும் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
திரைப்படத்துறையும் போதைப் பொருள் சர்ச்சையும்
பேசாத் திரைப்படங்களின் (மௌனப் படங்களின்) காலத்திலிருந்தே ஹாலிவுட்டில் பிரபலங்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவது என்பது வழக்கமான நிகழ்வாகவே இருந்துள்ளது.
ஹாலிவுட்டில், 1920களின் முற்பகுதியில் பேசாத் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வாலஸ் ரீட். ஜனவரி 1923-இல், தனது 31வது வயதில் மார்ஃபின் (Morphine) போதைப் பொருள் பயன்பாட்டின் காரணமாக உயிரிழந்தார். ஒரு விபத்தில் காயமடைந்த போது, வலி நிவாரணியாகவே மார்ஃபின் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில், அதுவே அவரது உயிரைப் பறிக்குமளவுக்கு சென்றுவிட்டது.
ஆஸ்கர் விருது வென்ற (மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது) பிரபல ஹாலிவுட் நடிகரும், இன்றுவரை 'ஜோக்கர்' கதாபாத்திரத்திற்காக ரசிகர்களின் நினைவில் இருப்பவருமான ஹீத் லெட்ஜர், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2008ஆம் ஆண்டு, 28வது வயதிலேயே உயிரிழந்தார்.
கோடீன், டெமாசெபம், டயசெபம் மற்றும் அல்பிரஸோலம் உள்ளிட்ட பல மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்டதால் அவர் இறந்தார் என பின்னர் தெரியவந்தது. இதில் கோடீன் என்பது ஒரு வலி நிவாரணி மருந்தாகும் மற்றும் டெமாசெபம், தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
மார்வெல் காமிக்ஸின் 'அயன் மேன்' (Iron man) கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த, அமெரிக்க நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், போதைப் பொருள் பயன்பாட்டிலிருந்து மீண்டு வந்தவரே.
1996-ஆம் ஆண்டு, வேகமாக கார் ஓட்டியதற்காக போலீசார் ராபர்ட்டை தடுத்து நிறுத்தியபோது, அவரது காரில் கொக்கெய்ன், ஹெராயின் ஆகிய போதைப் பொருள்களும், ஒரு கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
அதன் பிறகு போதைப்பொருள் பழக்கத்திற்காக தண்டனை பெற்று பல மாதங்களை சிறையில் கழித்த ராபர்ட், அதிலிருந்து மீண்டு வந்து இன்று முன்னணி ஹாலிவுட் நடிகராக மாறியது குறித்து பலமுறை வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதேபோல, பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத்தும் தனக்கிருந்த போதைப் பொருள் பழக்கம் குறித்தும், அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார்.
2021-ஆம் ஆண்டில், மும்பை கடற்பகுதியில் ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருளை சிலர் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போதைப்பொருள் தடுப்புப் படையினர் (என்சிபி) அங்கு சென்று போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வைத்திருந்ததாகவும் பயன்படுத்தியதாகவும் 20 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அவர் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து என்சிபி அவரை விடுவித்தது.போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதாக என்சிபி கூறியது.
கடந்த ஏப்ரல் மாதம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 'ஹைபிரிட்' கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், மலையாள திரைப்பட இயக்குநர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்சா உள்ளிட்ட மூவரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
காலித் ரஹ்மான், ஆலப்புழா ஜிம்கானா, தல்லுமாலா மற்றும் உண்டா போன்ற படங்களை இயக்கியவர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
'கிசுகிசு செய்திகளாக கடந்துச் செல்வது ஆபத்து'
"போதைப் பொருள் பயன்படுத்துவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் அதில் சிக்கும்போது, போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வாக அதை எடுத்துக்கொள்ளாமல் ஒரு பரபரப்பு செய்தியாக மட்டுமே கடந்து செல்வதுதான் ஆபத்து," என்கிறார் எழுத்தாளர் ஜா. தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
சினிமாக்காரர்கள் என்றாலே இப்படித்தான் என்ற கண்ணோட்டத்தில் இருந்து விலகி, போதைப் பொருள் பயன்பாட்டின் பரவல் குறித்த உண்மையான அக்கறையுடன் அணுகுவதே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
"சமூகத்தில் உண்மையில் எத்தனை பேர் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என நமக்கு தெரியாது. ஆனால் திரைப் பிரபலங்கள் என்றாலே அவர்கள் செய்யும் சிறு விஷயம் கூட பெரிதாகிவிடும். அப்படியிருக்க இந்த போதைப் பொருள் பயன்பாடு தவறு அல்லது ஆபத்து என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விட, 'மூன்று எழுத்து நடிகர்/நடிகைக்கு தொடர்பு' போன்ற செய்தியை பரப்புவதிலேயே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்" என விமர்சிக்கிறார் ஜா. தீபா.
இதனால், போதைப் பொருள் பயன்பாட்டின் விளைவுகளை புறக்கணித்துவிட்டு, எந்தெந்த பிரபலங்கள் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என்ற கிசுகிசு செய்தி 'ஆர்வத்திலேயே' இந்த விஷயத்தை பொது மக்களும் அணுகுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
இதனால் ஏற்படும் மற்றொரு பிரச்னை, திரைத்துறைக்கு வரும் அல்லது பணிபுரியும் இளைஞர்கள்/இளைஞிகள் குறித்த தவறான பிம்பங்கள் வலுபெறும் என்கிறார் ஜா.தீபா.
திரையுலகம் குறித்த பிம்பம்
இதே கருத்தை வலியுறுத்தும் எழுத்தாளர் ராஜசங்கீதன், "திரையுலகில் இருப்பதால் மட்டுமே ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவார் என்றோ அவர்கள் மட்டுமே இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. இத்தகைய நபர்களின் வசதி வாய்ப்புகள் பெருகும் போது, தவறுகளுக்கான அளவுகோல்களும் உயர்கின்றன" என்கிறார்.
ராஜசங்கீதன் இறுதி நாயகர்கள், காதலும் சில கேள்விகளும், சொக்கட்டான் தேசம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
"திரைத்துறை என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. ஒரு சாமானியனுக்கு, தான் ரசிக்கும் திரைப்பிரபலமும் தானும் உளவியல் ரீதியாக சமம் தான் என்ற உணர்வை இத்தகைய செய்திகள் கொடுக்கும்.
அதாவது தனக்கு இருக்கும் பலவீனம், ஒரு பிரபலத்துக்கும் உண்டு என்பதை அறிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வமே இந்த செய்திகள் கவனம் பெற காரணம். போதைப் பொருள் பயன்பாடு எனும் சமூகப் பிரச்னையின் ஒரு அங்கமாகவே இதைப் பார்க்க வேண்டுமே தவிர, திரைத்துறை என்றாலே இப்படிதான், அதை சுத்தப்படுத்த வேண்டும் என்று கிளம்புவது சரியான தீர்வாக இருக்காது" என்கிறார் ராஜசங்கீதன்.
'சமீபத்திய கலாசாரம்'
கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் நுங்கம்பாக்கம் காவல்துறையினர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார் திரைப்பட பத்திரிகையாளரும், நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த 'கிழக்கு கடற்கரைச் சாலை' படத்தின் தயாரிப்பாளருமான ஆர்.எஸ். அந்தணன்.
"தமிழ் திரையுலகில் கொக்கெய்ன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களின் பயன்பாடு என்பது சமீபத்தில் வந்த ஒரு கலாசாரமாகதான் இருக்க வேண்டும். நான் பார்த்தவரை, மதுபான விருந்துகள் மட்டுமே 'கோலிவுட் பார்ட்டிகளில்' பொதுவான ஒன்றாக இருந்தது. ஆனால், இந்த கொக்கெய்ன் போன்ற போதைப் பொருள் பயன்பாட்டில் தனிநபர்கள் சிலருக்கு வேண்டுமானால் பங்கு இருக்கலாம். ஒட்டுமொத்தமாக திரையுலகம் என்றாலே இப்படித்தான் என சொல்லிவிட முடியாது." என்கிறார் அவர்.
படைப்புத் திறனுக்கும் போதைப் பொருள்களுக்கும் தொடர்பு உள்ளதா?
கடந்த 2017ஆம் ஆண்டில் 72 கலைஞர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் அடிப்படையிலான ஒரு ஆய்வில், சிலர் தங்களது படைப்பாற்றலை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், படைப்பாற்றல் தேவைப்படும் பணியின்போது ஆசுவாசமாக உணரவும் மது மற்றும் கஞ்சா உதவியதாகத் தெரிவித்தனர். ஆனால், அதை மறுத்த கலைஞர்கள் சிலர், போதைக்கு மாற்றாக இசை உதவுவதாகத் தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட சில கலைஞர்களுக்கு, போதைப்பொருள் பயன்பாடு என்பது படைப்பாற்றலுக்காக மட்டுமல்லாது, அது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதும் கண்டறியப்பட்டது.
"மது, கஞ்சா அல்லது ஹெராயின் எதுவாக இருந்தாலும் போதைப் பொருள் பயன்பாடு என்பதற்கு பாதுகாப்பான அளவு என்பதே கிடையாது. அது உடலுக்கும் சமூகத்திற்கும் மிகவும் ஆபத்தான ஒரு பழக்கம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை" என்கிறார் கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
மேலும், "மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பது வேறு. ஆனால், படைப்பாற்றலுக்காக அதை குறைவாக எடுத்துக்கொள்கிறேன் எனக் கூறுபவர்கள் தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், அதில் நன்மையை விட தீமைகளே அதிகம். 'அளவாக' அல்லது புதிதாக முயற்சி செய்து பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் ஆரம்பிக்கும் பழக்கம் நாளடைவில் ஒருவரை போதைக்கு அடிமையாக மாற்றக்கூடும் எனும்போது, அதை நெருங்காமல் இருப்பதே நலம்" என்கிறார் அவர்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால் சில பிரபலங்கள் உயிரிழந்தது குறித்து பேசிய மருத்துவர் பூர்ண சந்திரிகா, "பொதுவாக மருத்துவர்கள் நீண்ட காலத்திற்கு என அத்தகைய மருந்துகளை பரிந்துரைப்பதில்லை. மருத்துவர் அறிவுறுத்திய காலம் கடந்த பிறகு, நிச்சயமாக ஆலோசனை பெற வேண்டும். தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சாமானியர்களுக்கு முடிந்தவரை அத்தகைய மருந்துகள் எளிதாக கிடைப்பதில்லை. பிரபலங்களால் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி பெற முடிகிறது." என்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு