You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'20 லட்சம் பீப்பாய்கள்' - இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவில் என்ன நடக்கும்?
- எழுதியவர், பிரேர்ணா
- பதவி, பிபிசி செய்தியாளர்
"இரானின் எண்ணெய் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டால், ஒரு சொட்டு எண்ணெய் கூட ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முடியாது" என, 2011-ஆம் ஆண்டில் இரானின் அப்போதைய துணை அதிபர் ஜெனரல் முகமது ரெஜா ரஹீமி அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதே ஆண்டு (2011) டிசம்பர் மாதத்தில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரானின் அணுசக்தித் திட்டத்தால் அந்நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. அவற்றில் மிக முக்கியமானது இரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்தது ஆகும்.
இந்தத் தடைகளுக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்த இரான் நாட்டு தலைவர்கள், ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அச்சுறுத்தினர். ஆனால் பதற்றமான சூழ்நிலை படிப்படியாக அமைதியடைந்தது, ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படவில்லை.
இந்த ஜலசந்தியை மூடுவதாக இரான் அப்போது மட்டும் மிரட்டவில்லை. அவ்வப்போது பல சமயங்களில் இந்த எச்சரிக்கை பலமுறை இரானால் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலைமை ஒருபோதும் ஜலசந்தி மூடப்படும் அளவிற்குச் செல்லவில்லை.
உலகின் முக்கிய கடல் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும் என இரான் தற்போது மீண்டும் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் திட்டத்திற்கு இரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இதனையடுத்து சீனாவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஹோர்முஸ் ஜலசந்தியை இரான் மூடுவதைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது தொடர்பாக இரான் நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்திருந்தாலும், நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏற்படும் தாக்கம் என்ன என்ற கேள்விகள் மீண்டும் எழத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு ஹோர்முஸ் ஜலசந்தி எவ்வளவு முக்கியமானது என்றும், இந்த வழித்தடத்தை இந்தியா எவ்வளவு சார்ந்துள்ளது என்றும் தெரிந்து கொள்வோம்.
ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் என்ன?
உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்கப் பயன்படுத்தப்படும் கடல் பாதைகளில் முக்கியமான ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தி.
மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கும், ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளுக்குமான முக்கிய இணைப்புப் பாலமாக, ஹோர்முஸ் ஜலசந்தி இருக்கிறது.
பாரசீக வளைகுடாவிற்கும், ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள ஹோர்முஸ் ஜலசந்தி, இரான் மற்றும் ஓமன் கடல் எல்லைக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. குறுகிய நீர்வழிப்பாதையான இதன் அகலம் ஓரிடத்தில் 33 கிலோமீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் இரான் போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், இந்த ஜலசந்தி வழியாக பிற நாடுகளைச் சென்றடைகிறது.
இதைத் தவிர, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியில் உலகின் மிகப்பெரிய பங்கு வகிக்கும் கத்தார் நாடு, தனது ஏற்றுமதிகளுக்கு இந்த ஜலசந்தியே சார்ந்துள்ளது.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிறுவனத்தின் (EIA) மதிப்பீட்டின்படி, 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில், நாள்தோறும் சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றது. அதாவது, இந்த ஒரு பாதை வழியாக ஆண்டுதோறும் சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் செய்யப்படுகிறது.
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே செல்கிறது என்பது இந்த ஜலசந்தியின் புவியியல் முக்கியத்துவத்தை புரிய வைக்கப் போதுமானது.
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள்
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படலாம் என்ற எச்சரிக்கைகளே, சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதற்கு காரணமாக இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்த பாதை உண்மையிலேயே மூடப்பட்டால், சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் பாதிக்கப்படலாம். இதன் நேரடி அர்த்தம், உலகளவில் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் பணவீக்கத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும் என்பதாகும்.
சீனா, இந்தியா, ஜப்பான் என உலகின் சில முக்கிய பொருளாதாரங்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம், ஏனெனில் இந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் செல்வதற்கான முக்கிய வழியாக ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியை இந்தியா எந்த அளவு சார்ந்துள்ளது?
இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தையும், எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் பூர்த்தி செய்ய பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதம் செளதி அரேபியா, இராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் Nelson Mandela Centre for Peace and Conflict Resolution மையத்தின் பேராசிரியர் ரேஷ்மி காஜி கூறுகையில், 'இந்தியா, நாள்தோறும் 50 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருகின்றன'.
"செளதி அரேபியா, இராக் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவை வந்தடைகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எண்ணெய் மிகவும் முக்கியமானது, எனவே ஹோர்முஸ் ஜலசந்தி செயல்பாட்டில் இருப்பது முக்கியம்" என்று என்றார்.
இருப்பினும், இரானிய நாடாளுமன்றம் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட முடிவு செய்துள்ளதாக செய்தி வந்தபோது, இந்தியாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதனால் இந்தியாவிற்கு அதிக பாதிப்பு ஏற்படாது என்று எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டார்.
"கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், கடந்த சில ஆண்டுகளில் நமது எண்ணெய் விநியோகத்தை நாம் பன்முகப்படுத்தியுள்ளோம், இப்போது நமது எண்ணெய் விநியோகங்களில் பெரும்பகுதி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வருவதில்லை" என்று அவர் கூறினார்.
"நமது எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு இந்த வாரத் தேவைக்கான எண்ணெய் உள்ளது, அத்துடன் அவை வேறு வழிகள் மூலமாகவும் கொண்டு வரப்படுகின்றன." என்றும் தெரிவித்தார்.
தாக்கம் என்னவாக இருக்கும்?
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று ரேஷ்மி காஜி கூறுகிறார்.
"ஹோர்முஸ் ஜலசந்தி இந்தியாவிற்கு மிகவும் குறைந்த செலவு பிடிக்கும் பாதையாகும். இத்தகைய சூழ்நிலையில், அந்த வழி மூடப்பட்டால், இந்தியாவின் இறக்குமதியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். ஏனெனில் வேறு ஏதேனும் வழியைப் பயன்படுத்தும்போது கப்பல்களுக்கான செலவு அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.
"இவை அனைத்தும் உள்நாட்டு கச்சா எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை உயரும். பொருளாதாரத்தின் பெரும்பகுதி எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்துள்ள வளைகுடா நாடுகளின் வணிகத்திலும் சிக்கல்கள் ஏற்படும்."
இருப்பினும், செளதி அரேபியா செங்கடல் வழியாகவும், ஐக்கிய அரபு அமீரகம் புஜைரா மூலமாகவும், இந்தியப் பெருங்கடல் வழியாக ஓமனும் கடற்கரையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன, எனவே இந்த நாடுகள் தங்களின் ஏற்றுமதிக்கு இந்த மாற்றுவழிகளைத் தேர்வு செய்யலாம்.
ஆனால் குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர ஏற்றுமதிக்கு வேறு வழி இல்லை. அதேபோல இரான் மற்றும் இராக் நாடுகளின் ஏற்றுமதிக்கு நேரடியான, சுலபமான பாதை வேறெதுவும் இல்லை.
செளதி அரேபியாவிற்கான இந்திய தூதராக பணியாற்றியவர் தல்மீஸ் அகமது. 2004-06 க்கு இடையில் இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கான கூடுதல் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அது இந்தியா மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் போதுமான பன்முகத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் பிபிசி கேட்டது.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த தல்மிஸ் அகமது, "இந்தியா எண்ணெய்க்காக தற்போதும் வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது, எதிர்காலத்திலும் தொடர்ந்து அவற்றையே சார்ந்திருக்கும். வளைகுடா நாடுகள் நமக்கு நெருக்கமானவை என்பதால், போக்குவரத்துச் செலவு குறைவாக இருக்கிறது. அத்துடன், இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை சுத்திகரிப்பு செய்வதற்குப் பழகிவிட்டன. மேலும் இந்த நாடுகளுடன் நமக்கு நீண்டகால விநியோக ஒப்பந்தங்கள் உள்ளன" என்று கூறுகிறார்.
"பல்வகைப்படுத்தலைப் பொறுத்தவரை, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நைஜீரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து நாம் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளோம். ஆனால் பெரும்பாலான இறக்குமதிகள் நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் உள்ளது."
இருப்பினும், கடந்த ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுடனான நீண்டகால ஒப்பந்தங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
"முன்பு, இந்தியா நீண்டகால ஒப்பந்தங்களை 80 முதல் 90 சதவீதம் பயன்படுத்தியது போல அல்லாமல், தற்போது அதனை 60-70 சதவீதமாக குறைத்துவிட்டோம். ஆனால் வேறுபிற நாடுகளிலிருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவது 30 சதவீதம் மட்டுமே" என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் முன் இருக்கும் வாய்ப்புகள் யாவை?
இந்திய அரசாங்கம் தனது எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் வளைகுடாவைத் தவிர ரஷ்யா, நைஜீரியா, குயானா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இப்படி பல நாடுகளில் இருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்தாலும், தொலைவு காரணமாக போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர, இந்தியா அதிகமாகப் பயன்படுத்தும் கடல் வழித்தடங்களில் செங்கடல், சூயஸ் கால்வாய் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை அடங்கும்.
இரான் உண்மையிலேயே ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுமா?
நாம் ஆரம்பத்தில் கூறியது போல, இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகப் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியும் எச்சரித்தும் வந்துள்ளது. ஆனால் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை.
தற்போது, ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்த இரானின் எச்சரிக்கை குறித்து தல்மிஸ் அகமதிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தல்மிஸ் அகமது கருதுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் சக்திவாய்ந்த கடற்படை மற்றும் அமெரிக்க விமானப்படை குறிப்பிடத்தக்க அளவில் தங்கள் இருப்பை தக்கவைத்துள்ளது. ஹோர்முஸை மூட அமெரிக்கா அனுமதிக்காது.
"இரண்டாவதாக, ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதால் இரானுக்கு எந்தவித பலனும் கிடைக்காது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளிடமிருந்து இரான் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கிறது."
"எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஹோர்முஸ் ஜலசந்தியை இரான் பயன்படுத்துகிறது. இரானுடன் நல்ல உறவுகளைக் கொண்ட பல வளைகுடா நாடுகளும் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சூழ்நிலையில், தனது நட்பு நாடுகளை கோபப்படுத்தும் பேராபத்தை இரானால் முன்னெடுக்க முடியாது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு