You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமணமான ஒரே மாதத்தில் மணமகன் மரணம் - மேகாலயா பாணி கொலை என போலீசார் சந்தேகிப்பது ஏன்?
- எழுதியவர், அமரேந்திர யார்லகடா
- பதவி, பிபிசி செய்தியாளர்
தெலங்கானாவில் திருமணத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண், மீண்டும் மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், ஒரே மாதத்தில் மணமகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மனைவியே கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்வாலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணமான ஒரு மாதத்திலேயே கொலை செய்யப்பட்டார். தெலங்கானாவைச் சேர்ந்த அந்த புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கர்னூல் மாவட்டத்தில் உள்ள கலேரு-நகரி கால்வாயில் வீசப்பட்டார், அவரது சடலத்தை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் காந்தா தேஜேஷ்வர்.
மேகாலயாவில் நடந்த 'தேனிலவு கொலை'யைப் போலவே, காந்தா தேஜேஷ்வரின் கொலைக்குப் பின்னணியில் தேஜேஷ்வரின் மனைவி ஐஸ்வர்யா இருப்பதை கண்டறிந்துள்ளதாக கட்வால் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
"இந்த வழக்கில் காந்தா தேஜேஷ்வரின் மனைவி ஐஸ்வர்யா உள்பட சந்தேகத்திற்குரிய நான்கு நபர்களை கைது செய்துள்ளோம்," என்று கட்வால் மாவட்ட எஸ்பி டி. ஸ்ரீனிவாச ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, கட்வாலின் ராஜவீதி நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர் காந்தா ஜெயராம் – சகுந்தலா தம்பதிகளின் இளைய மகன் காந்தா தேஜேஷ்வர் தனியார் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார்.
ஜூன் 17ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற தேஜேஷ்வர் வீடு திரும்பவில்லை என்று ஜூன் 18ஆம் தேதி கட்வால் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
"ஜூன் 17ஆம் தேதி நில அளவை செய்யச் சொல்லி அணுகினார்கள். அவர்கள், தேஜேஷ்வரை காரில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவரைக் காணவில்லை" என்று தேஜேஷ்வரின் அண்ணன், ஜூன் 18ஆம் தேதியன்று கட்வால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
முதலில், காணாமல் போனவர் என்று (134/2025 வழக்கு எண்) வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். குடும்ப உறுப்பினர்கள் அளித்த விவரங்கள் மற்றும் அவர் அழைத்துச் செல்லப்பட்ட கார் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணைத் தொடங்கப்பட்டது.
தேஜேஷ்வரை ஏற்றிச் சென்ற கார், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் ஓர்வக்கல்லு மண்டலத்தில் உள்ள நன்னூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற பிறகு, மீண்டும் கர்னூல் நோக்கித் திரும்பிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில், கட்வால் போலீசார் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து, தேஜேஸ்வரைத் தேடினர். இறுதியாக, ஜூன் 21ஆம் நாளன்று பன்யம் மண்டலத்தில் உள்ள கலேரு-நகரி கால்வாயில் தேஜேஸ்வரின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
தேஜேஷ்வர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டதாக எஸ்பி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார்.
"தேஜேஷ்வர் காணாமல் போன வழக்கில் நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். இந்த வழக்கு விசாரணையில், கர்னூல் மாவட்ட காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைக் கண்டுபிடித்தனர்," என்று எஸ்பி கூறினார்.
போலீஸ் காவலில் தேஜேஷ்வரின் மனைவி ஐஸ்வர்யா
மே 18ஆம் நாளன்று கட்வால் மாவட்டம் பீச்சுப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயசுவாமி கோவிலில், தேஜேஷ்வர் கர்னூல் மாவட்டம் கல்லூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா எனும் சஹஸ்ராவை மணந்தார்.
"தேஜேஷ்வருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிப்ரவரி 13ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முன்பே ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதனால்தான் அந்த நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் சில நாட்களில் ஐஸ்வர்யா வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டார்" என்று கட்வால் நகர போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையின் போது, தேஜேஷ்வரின் குடும்ப உறுப்பினர்கள், ஐஸ்வர்யாவின் வார்த்தைகளை தேஜேஷ்வர் நம்பியதாக தெரிவித்தனர். வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா, தேஜேஸ்வருக்கு போன் செய்து அவரை தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னார். திருமண செலவுகளுக்காக தன் அம்மா சிரமப்படுவதைப் பார்த்து தான் வீட்டில் இருந்து வெளியேறியதாக ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார்.
திருமணம் செய்துக் கொள்ள ஐஸ்வர்யா தயாராக இருந்தார் என்றும், அவர் சொன்ன சமாதனத்தை ஏற்றுக் கொண்ட தேஜேஷ்வர் குடும்பத்தினருக்கு திருமணம் தொடர்பாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். எனவே தேஜேஷ்வரின் விருப்பத்திற்காக, மே 18ஆம் நாளன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
"விசாரணையில் ஐஸ்வர்யாவுக்கு வேறொருவருடன் உறவு இருந்ததாகவும், அந்த நபருடன் இணைந்து தனது கணவரைக் கொலை செய்ததாகவும் தெரியவந்தது" என்று எஸ்பி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார்.
ஐஸ்வர்யாவும், தனது ஆண் நண்பருடன் நூற்றுக்கணக்கான முறை தொலைபேசியில் பேசியிருப்பதைக் போலீசார் கண்டறிந்துள்ளனர். எனவே ஐஸ்வர்யாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஐஸ்வர்யா, அவரது தாயார் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
"கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வேறு சிலருக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணை முழுமையடைந்ததும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்வோம்" என்று எஸ்பி ஸ்ரீனிவாச ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு