ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பை இணைக்க முயல்வதாக பாஜக அறிவிப்பு

கே.அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பையும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பையும் ஒருங்கிணைந்து செயல்படும்படி வலியுறுத்தியதாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அ.தி.மு.கவில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு தனியாகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தனியாகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இந்த இரு தரப்பில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சி அறிவிக்காமல் இருந்து வந்தது. இது தொடர்பான கேள்விகள் எழும்போது, விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்று மட்டும் அக்கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, துணைத் தலைவர் கரு. நாகராஜன், பா.ஜ.கவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி ஆகியோர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். இதனால், பா.ஜ.கவின் ஆதரவு எடப்பாடி தரப்புக்குத்தான் எனப் பேச்சுகள் எழுந்தன.

ஆனால், இந்தச் சந்திப்பு முடிந்து அங்கிருந்து புறப்பட்ட பா.ஜ.க. தரப்பினர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சென்று சந்தித்தனர். இதையடுத்து, பா.ஜ.கவின் நிலைப்பாடு குறித்து குழப்பம் ஏற்பட்டது. இரு தரப்பையும் சமாதானம் செய்ய பா.ஜ.க. முயல்வதாக பேச்சுகள் அடிபட்டன.

இந்த நிலையில், இந்தச் சந்திப்புகள் முடிந்த பிறகு சென்னையில் உள்ள பா.ஜ.கவின் தலைமையகத்தில் பா.ஜ.கவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியும் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பையும் ஒன்றாக இணைந்து செயல்படவைக்க முயற்சித்ததாக அப்போது அவர்கள் கூறினர்.

செய்தியாளர்களிடம் பேசிய சி.டி. ரவி, "1972இல் அதிமுக உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். தி.மு.கவை தீய சக்தி என்று அழைத்தார். ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என அழைத்தார்.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மீதான அதிருப்தி தினமும் அதிகரித்து வருகிறது. அரசுக்கு எதிரான மனநிலை மிகப் பெரிதாக உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக வேலை பார்க்கிறது. தமிழர்களுக்கு எதிராக வேலை பார்க்கிறது.

மின் கட்டணம், சொத்து வரி, பால் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. தமிழ் கலாச்சாரத்தைத் தாக்கி வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

சி.டி.ரவி

பட மூலாதாரம், CT Ravi facebook

இடைத்தேர்தலில் திமுக பணத்தையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தும் என்பது தெரிந்ததுதான். ஈரோட்டில் ஏற்கெனவே அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்களை எதிர்க்க, ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதிமுகவும் தேவை. இன்று காலை எடப்பாடி கே. பழனிச்சாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து இடைத்தேர்தல் குறித்துப் பேசினோம்.

ஜே.பி. நட்டா சார்பாக சில விஷயங்களை அவர்களிடம் தெரிவித்தோம். அது என்ன என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பணியாற்றி, திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் எனக் கூறினோம்.

இருவரையும் ஒன்றிணைக்க ஒப்புக்கொள்ள வைக்க முயன்றோம். அப்போதுதான் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க முடியும்," என்று கூறினார்.

அப்போது, பாஜகவின் ஆதரவு யாருக்கு, பாஜக போட்டியிடுமா என்ற கேள்விகளைச் செய்தியாளர்கள் எழுப்பியபோது, "இரு தரப்பும் ஒன்றாகப் பணியாற்ற வேண்டுமெனக் கூறினோம். வேட்புமனு தாக்கல் செய்ய ஏழாம் தேதி வரை காலம் உள்ளது," என்பதையே கே. அண்ணாமலையும் சி.டி. ரவியும் பதிலாக அளித்தனர்.

சி.பொன்னையன்

"பா.ஜ.கவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்"

இதற்கு சற்று முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான சி. பொன்னையன், பா.ஜ.கவிடம் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறியிருந்தார்.

"பா.ஜ.க. வடநாட்டிலே எப்படிப்பட்ட செயல்பாடுகளையெல்லாம் செய்தது, பா.ஜ.கவின் நட்பு ஆட்சிகள் எப்படியெல்லாம் கவிழ்ந்தன, அந்த ஆட்சிகளை எப்படி பா.ஜ.க. பிடித்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்," என்று பொன்னையன் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: