கூட்டணிக்கு புதிய பெயர், மோதி படம் இல்லாத பேனர் - புதிய முன்னணியை அமைக்கிறதா அ.தி.மு.க?

ஈரோடு கிழக்கு
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த ஜனவரி 4ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில், காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அந்தத் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ஆனால், அ.தி.மு.க. இரு பிரிவுகளாக இருப்பதால், வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் அணியைப் பொறுத்தவரை, பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரவு தருவோம் அல்லது நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என அறிவித்திருந்தது.

எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பைப் பொறுத்தவரை, தங்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், இன்று தமது தரப்பு வேட்பாளரை எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ். தென்னரசு. 1972ஆம் ஆண்டில் அ.தி.மு.கவில் இணைந்து, கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

கே.எஸ். தென்னரசு
படக்குறிப்பு, அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது ஜெயலலிதாவின் அணியில் ஈரோடு நகர செயலாளராக பதவி வகித்தார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தென்னரசு, அதில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2009ஆம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளராக பணியாற்றிவந்த தென்னரசு, 2016ஆம் ஆண்டு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

எடப்பாடி தரப்பு தற்போது வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

பா.ஜ.கவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பின் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதற்கு முன்பாக, முக்கியத் தலைவர்களை உள்ளடக்கிய பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்ததாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "ஈரோடு கிழக்குத் தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை பா.ஜ.க. ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் எடப்பாடி தரப்பு தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. இது தவிர வேறொரு முன்னெடுப்பையும் எடப்பாடி தரப்பு மேற்கொண்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு எனத் திறக்கப்பட்டிருக்கும் தலைமை தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகையில், அந்தக் கூட்டணியின் பெயர் "தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி எனக் குறிப்பிடப்பட்டுவந்த நிலையில், தற்போது தமது கூட்டணிக்கு புதிய பெயரை எடப்பாடி அணி சூட்டியுள்ளது. மேலும், அந்தப் பதாகையில் பா.ஜ.க. தலைவர்கள் படங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவின் ஆதரவு யாருக்கு என அறிவிப்பதில் தொடர்ந்து அந்தக் கட்சி மௌனமாக இருந்த நிலையில், எடப்பாடி தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

"எடப்பாடி கே. பழனிச்சாமியைப் பொறுத்தவரை, தனது செல்வாக்கை காண்பிக்க முடிவுசெய்து களத்தில் குதித்திருக்கிறார். இந்தத் தேர்தலில் இரட்டை இலை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி போட்டியிட்டு தனது பலத்தைக் காண்பிக்க நினைக்கிறார் கே. பழனிச்சாமி. பா.ஜ.கவின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதைச் செய்ய முடிவுசெய்துவிட்டார். இது பா.ஜ.கவுக்கும் தெரியும். பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆகிய இருவரையுமே பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால், தொடர்ந்து மௌனம் சாதித்துவருகிறது. அவர்களுக்கு 2024 தேர்தல்தான் முக்கியம். அந்த சமயத்தில் கூட்டணி குறித்து பார்த்துக்கொள்ளலாம் என முடிவுசெய்திருக்கக்கூடும். எடப்பாடியுமே அதே மனநிலையில்தான் இருக்கிறார். வேட்பாளரை அறிவிக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டே செல்வது, தனது தரப்பை பலவீனமாகக் காட்டும் என கருதியே இப்போது அறிவித்துவிட்டார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

இந்தத் தருணத்தில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது, எடப்பாடி தரப்பு புதிதாக பெயர் சூட்டி உருவாக்கியிருக்கும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டணிதான். தங்களுடன் பா.ஜ.க. இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி என்ற முடிவுக்கு எடப்பாடி தரப்பு வந்துவிட்டதை இந்த பெயர் சூட்டல் காண்பிக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணி தேவையா, அப்படி அமைந்தால், எந்தத் தரப்புடன் அமைக்க வேண்டும் என்பதை இனி பா.ஜ.க. விரைவாக முடிவுசெய்ய வேண்டியிருக்கும்.

இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை. பா.ஜ.க. இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் எடப்பாடி தரப்புக்கு ஆதரவளிக்க முடிவுசெய்தால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தனியாக வேட்பாளரை நிறுத்த வேண்டியிருக்கும்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக கே.எஸ். தென்னரசுவை அதிமுக அறிவித்திருப்பது குறித்து கேள்வியெழுப்பிய போது, கே.எஸ். தென்னரசு மக்களிடம் நல்ல பரிட்சயமான வேட்பாளர் என்றார். அதே நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்போம் என்றும் அண்ணாமலை கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: