லெப்பர்ட்-2, எம்1 ஏப்ரம்ஸ்: புதினுக்கு 'ஆத்திரமூட்டும்' டாங்கிகள் யுக்ரேனுக்குள் நுழைவது ஏன்?

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், லாரா கோஸி
    • பதவி, பிபிசி நியூஸ்

ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் யுக்ரேனுக்கு ஏப்ரம்ஸ் மற்றும் லெப்பர்ட் டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன.

31 எம்1 ஏப்ரம்ஸ் போர் டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்புவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை (ஜன. 25) அறிவித்தார். 

14 லெப்பர்ட் 2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்புவதாக, ஜெர்மனி அறிவித்த சில மணிநேரங்களில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

தங்களிடம் உள்ள ஜெர்மனி தயாரிப்பு டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெர்மனி அனுமதி அளித்துள்ளது. 

இந்த டாங்கிகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு மேற்கு நாடுகளிடம் யுக்ரேன் பல மாதங்களாக கேட்டுவந்தது. 

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி யுக்ரேனுக்கு அனுப்ப உள்ள எம்1 ஏப்ரம்ஸ் மற்றும் லெப்பர்ட் 2 டாங்கிகளில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? அவை தங்களுக்கு வேண்டும் என யுக்ரேன் ஏன் ஆர்வம் காட்டுகிறது? 

எம்1 ஏப்ரம்ஸ்

யுக்ரேன்

அமெரிக்க தயாரிப்பான எம்1 ஏப்ரம்ஸ் டாங்கிகள், உலகில் உள்ள மிகவும் நவீனமான போர் பீரங்கிகளுள் ஒன்றாகும். மேலும், இதனை இயக்குவதற்கு மிக அதிக பயிற்சி தேவை. 

அமெரிக்காவின் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்தொகுப்பில், டாங்கி நின்றுவிட்டால் அதனை இழுத்துச் செல்வதற்கான எட்டு மீட்பு வாகனங்கள், வெடி மருந்துகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் பராமரிப்புக்கான செலவு ஆகியவை அடங்கியுள்ளன. 

ஆனால், போர்க்களத்திற்கு இந்த டாங்கிகள் கொண்டு செல்லப்படுவதற்கு பல மாதங்களாகலாம் எனத் தெரிகிறது. 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், தங்களுடைய இருப்பில் ஏப்ரம்ஸ் டாங்கிகள் மீதம் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே, இந்த டாங்கிகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் அல்லது வேறு நாட்டிடமிருந்து அமெரிக்கா வாங்கி அனுப்ப வேண்டும். 

எனினும், ஜெர்மன் தயாரிப்பான லெப்பர்ட் 2 டாங்கிகள் ஏற்கெனவே இருப்பில் உள்ள நிலையில், இரண்டு முதல் மூன்று மாதங்களில் யுக்ரேனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாங்கிகள் மிகவும் திறன்வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இத்தகைய போர் டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்பும் முடிவு ராஜரீதியிலான தொடர் இழுபறிக்குப் பின்னரே எடுக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மனி டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டது. மேலும் அவ்வாறு செய்வதற்கான இறுதி முடிவு அமெரிக்காவும் அதைச் செய்வதற்கான நிபந்தனைக்குட்பட்டது என்ற தகவல்களும் வெளியாகின.

இதுதொடர்பாக கூறிய ஜான் கிர்பி, “நாம் நம் நட்பு நாடுகளுடன் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்த முடிவு காட்டுகிறது” என தெரிவித்தார்.

கள நிலவரம் மற்றும் ரஷ்யாவின் தந்திரோபாயங்களே அமெரிக்காவின் நிலைப்பாட்டு மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலதிக தகவல்களை தரவில்லை.

லெப்பர்ட் 2 டாங்கிகள்

யுக்ரேன்

பல்லடுக்கு கூட்டுக் கவசத்தைக் கொண்டவை இந்த டாங்கிகள். 67 டன் எடை கொண்ட இந்த டாங்கிகள், ரஷ்யாவிடம் உள்ள டாங்கிகளை விட கணமானவை. 120 எம்.எம். வெடிமருந்துகள் இதற்கு தேவை.

லெப்பர்ட் 2 டாங்கிகளை இயக்குவது குறித்த பயிற்சி யுக்ரேன் படையினருக்கு ஜெர்மனியில் வழங்கப்படும் என, பெர்லின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெப்பர்ட் 2 டாங்கிகளை மற்ற சில ஐரோப்பிய நாடுகளும் இருப்பில் வைத்துள்ள நிலையில், ஜெர்மனியின் முடிவைத் தொடர்ந்து அந்நாடுகளும் யுக்ரேனுக்கு இவ்வகை பீரங்கிகளை அனுப்பலாம். யுக்ரேனுக்கு சுமார் 90 பீரங்கிகள் அனுப்பப்படலாம் என ஜெர்மனி நம்புகிறது. 

போலந்து 14 லெப்பர்ட் 2 டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், நார்வேயும் சில டாங்கிகளை அனுப்பும் என புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், எத்தனை டாங்கிகள் அனுப்பப்படும் என்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. 

யுக்ரேனுக்கு நவீன டாங்கிகளை அனுப்பும் முதல் நேட்டோ நாடு பிரிட்டனாகும். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கம், 14 சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார். இந்த பீரங்கி பிரிட்டன் ராணுவத்தின் முதன்மையான போர் பீரங்கியாகும். 

இதனிடையே, தங்கள் நாட்டுக்கு டாங்கிகளை அனுப்பும் மேற்கு நாடுகளுக்கு யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ள நிலையில், அவற்றை விரைந்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், நீண்ட தொலைவு சென்று தாக்கவல்ல ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை அனுப்ப வேண்டும் என்று மேற்கு நாடுகளிடம் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவை தோற்கடிக்க தங்களுக்கு 300 டாங்கிகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

யுக்ரேன் ராணுவம் மீண்டும் வேகம் பெறவும் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் பகுதிகளை திரும்பப் பெறவும் அனுமதிக்கும் ஒரு திருப்புமுனையாக டாங்கிகளை அனுப்பும் முடிவு குறித்து ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

வசந்த காலத்தில் சாத்தியமான ரஷ்ய தாக்குதலைத் தடுக்க டாங்கிகள் உதவக்கூடும் என்றும் யுக்ரேன் கூறியுள்ளது.

ரஷ்யா இந்த அறிவிப்பை "வெளிப்படையான ஆத்திரமூட்டும்" நடவடிக்கை என்று கண்டித்ததோடு, யுக்ரேனுக்கு வழங்கப்படும் அனைத்து டாங்கிகளும் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது. 

அந்த டாங்கிகள் "மற்றவற்றைப் போலவே எரிக்கப்படும்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். "அந்த டாங்கிகள் மிகவும் விலை உயர்ந்தவை, அவ்வளவுதான்" என அவர் தெரிவித்துள்ளார்.

"இது யுக்ரேனிய நிலத்தை பாதுகாக்கவும் அந்நாட்டுக்கு உதவும் நடவடிக்கையாகும். இது ரஷ்யாவுக்கான அச்சுறுத்தல் அல்ல." என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: