மத்திய அரசு நிதி விடுவிப்பு: தமிழ்நாடு அரசின் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க, தமிழ்நாட்டிற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்ட பயனாளிகளாக அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து கட்டணம் செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுநலமனு தாக்கல் செய்த மனுதாரர் ஈஸ்வரன் இதை கடுமையாக எதிர்த்துள்ளார். தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்திச் சேர முடியாத நிலையிலிருக்கும் ஏழை மாணவர்களைச் சேர்க்கும் வகையில், அறிவிப்பை மாற்ற வேண்டுமென்று அவர் கோரியுள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கமும், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தடையுத்தரவு பெற முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
இந்தியாவில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் இடமளிக்கும் வகையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) கொண்டு வரப்பட்டு 2010 ஏப்ரலிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பாலர் வகுப்பிலிருந்து (LKG) எட்டாம் வகுப்பு வரை, மொத்தமுள்ள மாணவர்களில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்கும். எவ்வளவு தொகையை வழங்கலாம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாரியம் தான் (PAB-Project Approval Board) ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் தொகையில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும்.
'மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ.773 கோடி'

பட மூலாதாரம், Getty Images
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 25% இட ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு ஆண்டிலும் மாணவர் சேர்க்கை அறிவிக்கையும் விண்ணப்பமும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் (rte.tnschools.gov.in) வெளியிடப்படும். அதில் பெற்றோர் விண்ணப்பித்த பின்பு, அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். ஒரு பள்ளியில் 25 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடக்கும். ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரலில் துவங்கி மே மாதத்தில் இது முடிவடையும்.
ஆனால் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய பின்னும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிடாததை எதிர்த்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு அரசுகளிடமும் விளக்கம் கேட்டது. அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதன்படி, "தமிழகத்தில் பாலர் வகுப்புகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.80 கோடியை தமிழக அரசே செலுத்தி வந்துள்ளது. முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தில் மட்டுமே 60 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கிவந்தது."

பட மூலாதாரம், Getty Images
"2021-ஆம் ஆண்டுக்குப் பின்பு, இச்சட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவேயில்லை. அதனால் 2020–2021 மற்றும் 2021–2022 ஆகிய 2 கல்வியாண்டுகளுக்குமான மத்திய அரசின் பங்குத்தொகையான ரூ.153.70 கோடி மற்றும் ரூ.188.90 கோடி ஆகிய தொகையையும் சேர்த்து தமிழக அரசே தனியார் பள்ளிகளுக்கு 748.02 கோடியை வழங்கிவிட்டது.
அதற்குப் பின்பும், கடந்த 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பங்குத்தொகை ரூ.208.2 கோடி. 2024-25 ஆண்டுக்கான பங்கு ரூ.222.60 கோடியையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை. ஆக மொத்தம் தமிழக அரசுக்கு கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் விடுவிக்க வேண்டிய ரூ.773.49 கோடியை விடுவிக்காத காரணத்தால்தான் மாணவர் சேர்க்கையைத் துவக்கவில்லை" என்று தமிழக அரசு தெரிவித்தது.
புதிய கல்விக்கொள்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட மறுத்துவிட்டதால்தான் இந்த தொகையை விடுவிக்கவில்லை என்று மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் சுந்தரேசன் மற்றும் ஜி.பாபு ஆகியோர் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''கட்டாய கல்வி உரிமை சட்டம் தனித்துவமானது. இச்சட்டத்தின் பிரிவு 7ன் படி, இதை நிறைவேற்றும் பொறுப்பு, இரு அரசுகளுக்கும் உண்டு.'' என்று தெரிவித்தனர். அத்துடன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தையும் புதிய கல்விக் கொள்கையையும் இணைத்துப் பார்க்கத் தேவையில்லை என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாட்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கினர்.
காலாண்டு விடுமுறையில் வந்துள்ள மாணவர் சேர்க்கை அறிவிப்பு

பட மூலாதாரம், Anbilmahesh/X
இந்நிலையில் தமிழக அரசுக்கு கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் விடுவிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவித்திருப்பதால் இந்த கல்வியாண்டுக்கான (2025-2026) கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட (RTE) மாணவர் சேர்க்கை துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
''அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG/ முதல் வகுப்பு) கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25 சதவீத சேர்க்கை நடைபெறும். அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை துவங்கும். தற்போது நுழைவுநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு இந்த கல்வியாண்டிற்கான ஆர்டிஇ(RTE) மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ள அந்த அறிவிக்கை, ஒதுக்கீட்டில் வரும் இடங்களை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் முறை (Random Selection) பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
பள்ளிகள் துவங்கி காலாண்டு விடுமுறை நடந்து வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் படி மாணவர் சேர்க்கையை துவங்கக் கோரி பொதுநலமனு தாக்கல் செய்த மனுதாரர் ஈஸ்வரன், இந்த அறிவிக்கை சட்டத்திற்கு புறம்பானது என்பதுடன் ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஈஸ்வரன், ''கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் உரிய காலத்தில் நடக்காததால் ஏழை மாணவ, மாணவிகள் யாரும் தனியார் பள்ளிகளில் சேரவில்லை. அவர்களில் பலர் பள்ளிகளுக்குச் செல்லவில்லை அல்லது அங்கன்வாடி மையங்களில் பயில்கின்றனர். ஆனால் ஏற்கெனவே பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்குதான், அதே பள்ளியில் சேர்க்கை நடத்துவதாக தமிழக அரசு அறிவிக்கிறது என்றால், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுகிறது.'' என்றார்.
''கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஒரு பள்ளியில் 25 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் அந்த இடங்களைக் காலியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கு மாணவர்களை முழுமையாகச் சேர்த்தபின்பு, அவர்களில் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வது என்பது இந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கை.'' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனால் இதுவரை பள்ளிகளில் சேராத மாணவர்களுக்கே இதில் வாய்ப்பு வழங்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். இதே கருத்தை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கமும் வேறு விதமாக வலியுறுத்துகிறது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்த சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார், ''எல்லாப் பள்ளிகளிலும் முழுமையாக மாணவர் சேர்க்கை நடந்துவிட்டது. இந்நிலையில் ஏற்கெனவே படிக்கும் மாணவர்களில் இச்சட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான மாணவர்களை தேர்வு செய்வது தேவையற்ற நடைமுறை. அதனால் புதிய அறிவிப்பை வெளியிட்டு, 25 சதவீதம் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்து, அவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும். அரசு இதை மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் இதற்கு எதிராக தடையுத்தரவு பெற முயற்சி செய்யப்படும்.'' என்றார் நந்தகுமார்.
இந்த கல்வியாண்டில் பணம் கட்டக்கூடிய வசதியான மாணவர்கள், ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் சேர்ந்து விட்ட நிலையில், பணம் கட்ட இயலாமல் தனியார் பள்ளிகளில் சேர இயலாத மாணவர்களுக்கான வாய்ப்பு தற்போது பறிபோய் உள்ளதாகக் கூறும் மனுதாரர் ஈஸ்வரன், கட்டாய கல்வி உரிமை சட்ட சேர்க்கை என்பது பள்ளிகளில் சேர்க்கப்படாத மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டுமென்கிறார்.
''மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு இந்த சேர்க்கையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கும் போது இந்த குழந்தைகளின் வாய்ப்புகள் பறிபோய்விடும். அதனால் ஒவ்வொரு வருடத்திலும் நடத்தப்படுவதைப் போல பொதுவான இணையதள சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.'' என்கிறார் ஈஸ்வரன்.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் விளக்கத்தை பெற முயன்று வருகிறோம். பதில் கிடைத்ததும் இந்த கட்டுரையில் உடனே சேர்க்கப்படும்.

2025-26 கல்வியாண்டிற்கான ஆர்டிஇ (RTE) மாணவர் சேர்க்கை அட்டவணை
- அக்டோபர் 6 : மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
- அக்டோபர் 7: நுழைவு வகுப்புகளில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை பதிவேற்றம்
- அக்டோபர் 8: மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீத ஒதுக்கீடு, பள்ளி உள்நுழைவில் காட்டப்பட வேண்டும்.
- அக்டோபர் 9: தகுதியுடைய மாணவர்களின் விவரம் (ஆதார் பிறப்பு/இருப்பிடம்/வருமானம் மற்றும் சாதிச்சான்றிதழ்) பதிவேற்றம்.
- அக்டோபர் 10 முதல் அக்டோபர் 13 வரை தகுதியான, தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு – விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு.
- அக்டோபர் 14: தகுதி பெற்ற மாணவர் இறுதிப்பட்டியல் வெளியீடு
- அக்டோபர் 15: தகுதியுடைய மாணவர்களை EMIS PORTAL ல் உள்ளீடு செய்தல்.
- அக்டோபர் 16: விண்ணப்பங்கள் 25 சதவீதத்துக்கு அதிகமானால், சிறப்பு முன்னுரிமை பிரிவுகளுக்கு பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவித்தல்.
- அக்டோபர் 17: தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை EMIS PORTAL ல் உள்ளீடு செய்தல்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












