இலங்கை தேர்தல் வன்முறை: பாதுகாப்புப் பணியில் ராணுவம்

பட மூலாதாரம், Maithripala Sirisena
இலங்கையின் பொலநறுவை மாவட்ட அரலகன்வில நகரில் ஏற்பட்டுள்ள தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தினர் மற்றும் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை இரவு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டமொன்று அரலகன்வில நகரில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக புகார் கிடைத்துள்ளதாக தெரிவித்த காவல்துறையின் ஊடக பேச்சாளர், அதன் பின்பு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றி முடிந்த பின்பே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனக சமரசிங்க உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதே போன்று ஆளும் கட்சியின் கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையொன்று தீக்கிரையாக்கப் பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு அரலகன்வில பகுதியிலிருந்து ஐந்து தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையின் ஊடக பேச்சாளர் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பினர் இது சம்பந்தாக தனித்தனி முறைப்பாடுகள் செய்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்பபுடைய பல சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அஜித் ரோகன தெரிவித்தார்.
இதேவேளை சட்ட விரோதமான முறையில் அச்சிடப்பட்ட வாக்குப் பதிவு பத்திரங்களை வைத்திருந்ததாக புத்தளம் மாவட்ட நவகத்தேகம பகுதியில் நான்கு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனமடுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இந்த சந்தேக நபர்களை நாளை திங்கட்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








