யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு

இலங்கையின் வடக்கே இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று திறக்கப்பட்டபோது, குறிப்பிட்ட அஞ்சலி நிகழ்வு அங்கு நடத்தப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, செவ்வாயன்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் இராசகுமாரன் பலாலி இராணுவ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகின்றது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதென்பது பயங்கரவாதிகளை நினைகூவர்வதே ஆகும் என்று அவருக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும், அதற்கு அங்கு கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்வதற்கு தங்களுக்கு உரிமையிருப்பதாக அவர் பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில் செவ்வாய்க்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளின் செய்தியாளர்கள் உட்பட சில செய்தியாளர்களின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரனை கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவுக்கு புதனன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுதிரி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதேநேரம் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்து, வியாழன் முதல் இரண்டு தினங்கள் அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக மாணவர்கள் அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.








