யாழ் மருத்துவமனை : 'உடனடி நடவடிக்கை தேவை'

யாழ் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம் தொடர்பிலும், அங்கு ஒரு மருத்துவரின் இல்லம் தாக்கப்பட்டமை தொடர்பிலும் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து இரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமது அமைப்பு இலங்கை ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான டாக்டர் பாலகிருஷ்ணன் சாய்நிரஞ்சன் எச்சரித்துள்ளார்.
முறைகேடுகள் குறித்த விசாரணைகள் நடக்கும் போது அதில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவப் பணிப்பாளர் அங்கு பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதால் அவரை இடமாற்றம் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவரின் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தாக்குதல் சம்பவங்கள் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாவிட்டாலும், பொலிஸார் மும்முரமாக விசாரணையில் ஈடுபடுவதாகவும், விரைவில் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அதேவேளை, முறைகேடுகள் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது நடப்பதாகக் கூறிய அமைச்சர், முதற்கட்ட விசாரணைகளில் அங்கு ஏதாவது முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரியவந்தால், அதன் பின்னர் உரியவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் நடக்கும் என்றும் உறுதி கூறினார்.
அதுவரை மருத்துவர்கள் பொறுமை காக்கவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.








