'டெங்கு தொற்று அதிகரிக்க அரசு தான் காரணம்'

பட மூலாதாரம், Science photo library
இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் 75 பேர்வரையில் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுத் துறை கூறுகிறது.
சுமார் 12,500 பேர் அளவில் நாடு முழுவதும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இந்த டெங்கு நோயாளிகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய மேல் மாகாணத்தில் தான் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கொழும்பில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் முறையான திட்டம் இல்லாமை தான் நாடுமுழுவதும் நோய் பரவ காரணம் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி. உபுல் ரோஹண பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நவீனமுறை ஆய்வுகள் மூலம் டெங்கு நோய்க்கு தீர்வு காணும் முயற்சி அரசிடம் இல்லை என்றும் ரீதியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் அணுகுமுறை அரசிடம் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் குப்பைகள் மற்றும் தினசரி கழிவுகளை சுத்திகரித்து அகற்றும் நவீன கழிவகற்றல் திட்டங்கள் இல்லை என்றும் வெறுமனே கழிவுகளை ஓரிடத்திலிருந்து வேறிடத்தில் கொண்டுசென்று கொட்டும் நடைமுறைதான் அரசிடம் இருக்கிறது என்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கூறுகின்றனர்.
இதுவும் டெங்கு நோய் பரவ முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
2010 இல் தொடங்கப்பட்ட டெங்கு ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் இன்று செயலிழந்திருப்பதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அமைச்சு பதில்
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சின் டெங்கு நோய்க் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர். பட்டுவந்துடாவவிடம் கேட்டபோது, கடந்த 4 ஆண்டுகளில் டெங்கு நோயால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக தமிழோசையிடம் கூறினார்.
2011இல் 24 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர், அவர்களில் 186 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் இப்போது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 15 ஆயிரம் பேர்வரையில் தான் இருக்கிறது, அவர்களில் 75 பேர்தான் உயிரிழந்திருக்கிறார்கள் என்று டாக்டர் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.
டெங்கு நோயை ஒழிப்பதற்கு அரச நிறுவனங்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைக்கும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்றும் சுகாதார அமைச்சின் டெங்கு நோய்க் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் தமிழோசையிடம் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நகர அபிவிருத்தி துறையின் கீழ் கொழும்பு உள்ளிட்ட பெரு நகரப் பிரதேசங்களில் பெரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












