அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பெரும் பாறை

பட மூலாதாரம், AFP
இலங்கை அரசாங்கம் தனது சாதனைத்திட்டமாகப் பறைசாற்றிய அம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம், அங்கு கடற்படுகையில் பெரும் பாறை ஒன்று இருப்பதால், தாமதமாகிறது என்பதை அரசாங்க அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்தத்திட்டம் சீனாவின் பெரும் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தப் பாறை வெற்றிகரமாக உடைத்து அகற்றப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாறை அந்தத்திட்டத்துக்கு பெரும் இடையூறாக உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
சீனாவின் கடனுதவி மற்றும் நிர்மாணப் பணியாளர்களின் உதவியுடன் தென்னிலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டமாக இந்த அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் திகழ்கிறது.
இலங்கை ஜனாதிபதியின் சொந்த இடம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த இடமான இந்த அம்பாந்தோட்டையில்தான், ஒரு புதிய கிரிக்கட் அரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு விமான நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றது.
அது மாத்திரமல்லாமல் 2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான நகரைத் தேந்தெடுப்பதற்கான போட்டியிலும் அம்பாந்தோட்டை நகர் கலந்துகொண்டிருக்கிறது.
விவசாய நிலங்களில் தோண்டி உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகம், கடந்த வருடம் இலங்கை ஜனாதிபதியால் பெரும் விமர்சையாக அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
ஆனால், அந்தக் கடற்படுகையில் உள்ள பெரும் பாறை ஒன்றின் காரணமாக அந்த துறைமுகப் பணிகள் தாமதமடைவதாக தற்போது அரசாங்க அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த இடத்தில் துறைமுகத்தை அமைப்பதற்கான திட்டத்தின் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள், ''இங்கு பாறை இருப்பதால், அது துறைமுகத்துக்கு உகந்த பகுதி அல்ல என்று கூறியதை'' அரசாங்கம் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ஆழமற்ற பகுதிகளில் செல்லக்கூடிய சிறிய கப்பல்கள் மாத்திரமே இந்த துறைமுகத்துக்குள் நுழைய முடியும் என்றும், இந்தத்திட்டத்துக்கு நிதி வழங்குகின்ற சீன ஸ்டேட் வங்கி இந்தப் பாறையை உடைத்து அகற்றுவதற்கு திடீரென பெரும் பணத்தைக் கோருவதாகவும் அவர் கூறுகிறார்.
துறைமுக அதிகாரியின் கருத்து
ஆனால், அந்தப் பாறையை தகர்க்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், ஒப்பீட்டளவில் அதற்கு குறைந்த பணமே செலவாவதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவரான பிரியத் விக்கிரம கூறுகிறார்.
எந்தப் பெரிய கப்பலும் உள்ளே வந்து பொருட்களை இறக்கி, எரிபொருள் நிரப்பிச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தத் துறைமுக நிர்மாணக் கடனுக்காக, சீன வங்கிக்கு இலங்கை அரசாங்கம் அளவுக்கு அதிகமான நிரந்தர வீதத்தில் வட்டி செலுத்துவதாக பொருளாதார நிபுணரான மற்றுமொரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்.
சீன உதவியுடன் உட்கட்டமைப்பை தொடருகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஆர்வத்தை இதெல்லாம் குறைத்துவிட்டது என்று கூறமுடியாது.
பாதி உரிமை சீனாவின் வசம் இருக்கும் ஒரு நிறுவனம், கடந்த ஆண்டு கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கான திட்டத்தின் கேள்விக்கோரிக்கையை வென்றிருந்தது.
தலைநகருக்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையை அமைக்கும் பணியையும் அரசாங்கம் தற்போது சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது.












