You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இலங்கை நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆக தேர்வு
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவின் பெயர் பிரதி சபாநாயகராக முன்மொழியப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வாவினால், ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டது. சுசில் பிரேமஜயந்த அதனை வழி மொழிந்தார்.
இதையடுத்து, ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவை பிரதி சபாநாயகரான தேர்வு செய்வதற்கு தமது முழு ஆதரவு வழங்கப்படும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் அறிவித்தார்.
இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமது சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கரின் பெயரை முன்மொழிந்தது. அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார முன்மொழிய, லக்ஸ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு
ரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பெயர்களை குறிப்பிட்டு, தமது கையொப்பத்தை இட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருந்தார்.
இதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்ப்பை வெளியிட்டது. 'அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலரும் தமக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் கையொப்பத்தை இட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றமை ரகசிய தன்மையை பேணாது' என எதிர்கட்சி தெரிவித்தது.
எனினும், தான் நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரமே இந்த வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, அமளி துமளிக்கு மத்தியில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
இறுதில், ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவாக 148 வாக்குகளும் இம்தியாஸ் பாகீர் மார்க்கரிற்கு ஆதரவாக 65 வாக்குகளும் கிடைத்தன.
நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருந்த பின்னணியில், அந்த கட்சியின் அங்கத்துவரான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தனது பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
எனினும், புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதி சபாநாயகர் விசேட உரை
இதையடுத்து, பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, இந்த முன்னர் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாம் வகித்த அனைத்து பதவிகளிலும் இருந்து விலகியதுடன், அவர்கள் சுயாதீன குழுவாகவும், எதிர் தரப்பாகவும் செயற்பட்டனர்.
இந்த நிலையில், தான் வகித்த சுயாதீன பதவியிலிருந்து விலக கூடாது என பலரும் கூறிய போதிலும், தமது கட்சி நாட்டின் தற்போது நிலைமையையும், சமூக பிரச்சினைகளையும், மக்களின் பிரச்சினைகளையும் வெளிக்கொணர முயற்சித்த நிலையில், அந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையிலேயே தான் பதவி விலகியதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் ஸ்திரப்படுத்தப்பட்ட தனது சுயாதீன பதவியிலிருந்து விலகுவதற்கு தான் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.
எனினும், தனது பெயர் மீண்டும் பரிந்துரை செய்ய பேச்சுவார்த்தை நடந்த போது, எதிர்கட்சியும் தனக்கு ஆதரவு வழங்க இன்று காலை வரை இணங்கிய நிலையிலேயே தான் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாகவும் அவர் கூறினார்.
எதிர்கட்சி தனக்கு வாக்களிக்காமையானது, வீதிகளில் போராடும் மக்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாகவே தான் கருதுவதாகவும் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
எதிர்கட்சியின் பதில்
இந்த வாக்களிப்பின் ஊடாக, பலரது நாடகங்கள் நாட்டு மக்களுக்கு வெளிகொணரப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவிற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை அடுத்தே, தாம் எதிராக வாக்களித்ததாகவும் அவர் கூறுகின்றார்.
நாடாளுமன்றத்திற்கு அரசியல் நாடகம் அரங்கேறுகின்றமை, இன்று நாட்டு மக்களுக்கு வெளிகொணரப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். இந்த அரசாங்கத்திற்கு தாம் எதிர்ப்பு என்பது இந்த வாக்கெடுப்பின் ஊடாக வெளிவந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை
பிரதி சபாநாயகர் தெரிவின் ஊடாக, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தக்க வைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இன்றைய நிலைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளமை உறுதியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்