இலங்கை ராணுவம்: 'யுத்த நாயகன் மஹிந்த' - ராஜபக்ஷேக்கள் வளர்ந்த வரலாறு

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்து வருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே இருப்பார் என 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்சி அறிவித்தது. மிக வேகமாக தனது தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார் மஹிந்த.

இந்தத் தருணத்தில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், மஹிந்த தனது 'ஹெல்ப்பிங் ஹம்பந்தோட்டா' திட்டத்தின் மூலம் சுனாமி நிதியில் முறைகேடு செய்தார் எனவும் அதனை விசாரிக்க வேண்டுமெனவும் கோரினர். ஆனால் இந்த விசாரணைக்கு உச்ச நீதின்றம் தடை விதித்தது.

இதற்குப் பிறகு, மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார் மஹிந்த.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். போர் நிறுத்தத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவரும் ஜனாதிபதியாக தன்னை ரணில் முன்னிறுத்திவந்த நேரம், 'ஒரே இலங்கை' என்ற கோஷத்தை முன்வைத்து சிங்கள மக்களை ஒன்று திரட்டினார் மஹிந்த.

இந்த நிலையில்தான், தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தது புலிகள் இயக்கம். ஆனால், புலிகளின் இந்த அழைப்பு தனக்கு பாதகமாக முடியுமென ஐக்கிய தேசியக் கட்சி கருதவில்லை.

முந்தைய பாகங்கள்:

வாக்குப்பதிவு நடந்தபோது, வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ் பேசுவோர் பங்கேற்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாயின. மஹிந்த 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ரணிலைவிட சுமார் ஒரு லட்சத்து என்பதாயிரம் வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மஹிந்த, தான் எல்லா மக்களுக்குமாகச் சேர்த்து பாடுபடப்போவதாகவும், புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மேலும் உகந்த சூழலை உருவாக்க வேண்டுமானால், போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட திருத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் மஹிந்த.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, உடனடியாக இருவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டது. அதில் ஒருவர் அவருடைய சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ.

கோட்டாபய ராஜபக்ஷ

ராஜபக்ஷ சகோதரர்களில் ஐந்தாவதாகப் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆனந்தா கல்லூரியில் தனது படிப்பை முடித்த பிறகு, 1972 மே மாதத்தில் இலங்கை ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாகச் சேர்ந்தார்.

முதலில் சிக்னல் கார்ப்ஸ் பிரிவிலும் பிறகு, சின்ஹ ரெஜிமென்டிலும் பணியாற்றிய கோட்டாபய, அதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்தார். இந்த காலகட்டத்திலேயே ஜனதா விமுக்தி பெரமுனவின் கலகம் துவங்கியிருந்தது.

1977ல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் ராஜரத ரைஃபிள்ஸ், விஜயபாஹு இன்ஃபான்ட்ரி என இரண்டு படைப்பிரிவுகள் துவங்கப்பட்டன. அப்போதிருந்த லெப்டினென்ட் கர்னல் நாணயக்கரவின் வேண்டுகோளின் பேரில், சின்ஹ ரெஜிமென்டை விட்டுவிட்டு, ராஜரத ரைஃபிள்சில் இணைந்தார் கோட்டாபய. 1983வாக்கில் இந்த ராஜரத ரைஃபிள்ஸ், விஜயபாஹு இன்ஃபான்ட்ரியுடன் இணைக்கப்பட்டு கஜப ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டது. அதன் இரண்டாம் நிலை தளபதியாக உயர்த்தப்பட்டார் கோட்டாபய ராஜபக்ஷ.

1980களின் இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியின் குடும்பத்தினர் பலர் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்ட நிலையில், இவரையும் அங்கு அழைத்தனர். ராணுவப் பணியிலேயே தொடர விரும்பினார் கோட்டாபய. இந்த நிலையில், கோட்டாபய மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த அப்போதைய ராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, 1991 நவம்பரில் ராணுத்தைவிட்டு வெளியேறினார் கோட்டாபய.

முந்தைய பாகங்கள்:

வெகுகாலம் அமெரிக்காவில் கழித்த பிறகு, மஹிந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட முடிவுசெய்தவுடன், அவருடைய தேர்தல் பிரசாரத்தைப் பார்த்துக்கொள்வதற்காக இலங்கைக்குத் திரும்பினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்ஷ, தன் சகோதரரை பாதுகாப்புத் துறைச் செயலராக நியமித்தார். மஹிந்த ஜனாதிபதியான பிறகு, சில மாதங்களில் புலிகள் தரப்போடு பேச்சு வார்த்தை முயற்சிகள் நடந்தாலும் அதில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருகோணமலையில் உள்ள மாவிலாறு அணை மூடப்பட்ட விவகாரம், இரு தரப்புக்கும் இடையில் புதிய மோதல் துவங்குவதற்கான புள்ளியாக அமைந்தது. இதற்குப் பிறகு 2007ல் கிழக்குப் பகுதி முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வர, 2008ஆம் ஆண்டின் துவக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியே வந்தார் மஹிந்த.

இந்த காலகட்டத்தில் பாதுகாப்பத் துறை செயலர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவின் இமேஜ் தொடர்ந்தது அதிகரித்தது. ஆட்கடத்தல், சட்டவிரோதமாக பிடித்துவைத்தல், காணாமலாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டன. முடிவாக, 2009 மே 17ஆம் தேதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டத்தில் மஹந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி என்ற நிலையிலிருந்து கேள்வியே கேட்க முடியாத அரசன் என்ற நிலைக்கு உயர்ந்தார் மஹிந்த.

2010ல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, மீண்டும் போட்டியிட்டார் மஹிந்த. அவரை எதிர்த்து, பொது வேட்பாளராக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்செக நிறுத்தப்பட்டார். ஆனால், சரத் பொன்செகவைவிட 17 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ஷ.

இந்த இரண்டாம் முறை தேர்வுசெய்யப்பட்டபோது, வீரகெட்டிய கிராமத்தில் தனது அரசியல் வாழ்வைத் துவங்கிய மஹிந்த, அங்கிருந்து வெகு தூரம் சென்றிருந்தார்.

"காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதத்தை வைத்து அவரை நாங்கள் மிகவும் நம்பினோம். ஆனால், அதிகாரம் வந்த பிறகு அவர் மாறிவிட்டார். சந்தர்ப்பவாதியாகிவிட்டார். மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்டதெல்லாம், ஒரு விளம்பரத்திற்காத்தான் என்பது புரிகிறது" என்கிறார் ஒரு காலகட்டத்தில் மஹிந்தவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வலராகச் செயல்பட்ட பிரிட்டோ.

பஷில் ராஜபக்ஷ, கோட்டாபய போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்காலேயே தங்கள் இடங்களைப் பெற்றார்கள் எனக் கருதுகிறார் குஷால் பெரேரா.

தற்போதைய பொருளாதார நெருக்கடி முற்றியபோது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, பிரதமரின் அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம் அரசைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க மஹிந்த முயன்றதாகவும் இலங்கை அரசியல்வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால், இப்போது பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை நீக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. அப்படி நடந்தால், மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்த தீர்மானமான சித்திரங்களை பார்க்க முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :