You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை போராட்டம்: அரசுக்கு எதிராக ஆடிப்பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொதுமக்கள்
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், போராட்டங்களில் தொடர்ந்தும் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
போராட்டம் என்றால், ஆவேசமாக கோஷங்களை எழுப்புதல், தாக்குதல் நடத்துதல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வழக்கமானது.
எனினும், கொழும்பு - காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் முழுமையாகவே மாறுப்பட்ட போராட்டமாக காணப்படுகின்றது.
மகிழ்ச்சி கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், வீதிகளில் வேடிக்கை நிகழ்ச்சிகள், சித்திர போட்டிகள், நூலகம், இலவச உணவு, இலவச குடிநீர் போத்தல்கள், மருத்துவ வசதி, அலைபேசி சார்ஜர்கள் என போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியாகவே இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் ஏன் மகிழ்ச்சியாக நடத்தப்படுகின்றது என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுந்தாலும், அதற்கான விடை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடமே காணப்படுகின்றது.
இதன்படி, மகிழ்ச்சியாக போராட்டங்களை நடத்தும் போராட்டக்காரர்களிடமே பிபிசி தமிழ், இது குறித்து வினவியது.
இந்த போராட்டம் நீண்ட காலம் நீடிக்கின்றமையினால், நின்று நிதானமாக டெஸ்ட் போட்டியை போன்று போராட வேண்டும் என பிரபல வானொலி அறிவிப்பாளர் ஏ.ஆர்.வீ.லோசன் தெரிவிக்கின்றார்.
''வடக்கு, கிழக்கு, மலையகத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள் இழப்போடு சம்பந்தப்பட்டது. ஒன்று யுத்தம், பொருளாதார இழப்பு, ஆயிரம் ரூபா போராட்டம் கூட கிடைக்காதமையினால் தான் இன்னும் போராட்டம். வடக்கு கிழக்கில் சுயாட்சி, தனியுரிமை, தங்களுக்கான சமவுரிமை கிடைக்கவில்லை என்ற போராட்டம். அது இழப்போடு சம்பந்தப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தை பொறுத்த வரையில் மக்கள் தங்களது அரசியல் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதியை அகற்ற முடியாது என்று தெரியும். அதுபோல அவர்களுக்கான சரியான பிரதிகள் எதிர்கட்சி பக்கம் இருக்கின்றார்களா என்பது தெரியாது.
ஆனால் அவர்களுக்கு தேவையானது தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட வளங்கள், சொத்துக்கள், தங்களுக்கான பொருளாதாரம் தங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்தின் மூலமாக தான் அது நடக்குமாக இருந்தால், தங்களுடைய அழுத்தம் மூலமாக ஜனாதிபதியை அகற்றுவதன் மூலமாக இந்த ஆட்சியை, அமைச்சரவையை மாற்றுவதன் மூலமாக ஏதாவது ஒன்றை செய்யலாம். பொதுவாக இளைஞர்களின் கையில் ஒரு போராட்டம் வரும் போது, இந்த கால ட்ரென்ட் போல தான். இதை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும். ஜனரஞ்சகப்படுத்த வேண்டும்.
- இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் தமிழில் குரல் எழுப்பிப் போராடும் ஒற்றைப் பெண்
- இலங்கை நெருக்கடி: ராஜபக்ஷ குடும்பம் இல்லாத புதிய அமைச்சரவை பிரச்னையை தீர்க்குமா?
- ஒரு கலர் புள்ளான போராட்டமாக இதனை கொண்டு வருவதன் ஊடாக மாறாத தடம் ஒன்றை பதிக்கலாம் என்று அவர்கள் முனைந்திருக்கின்றார்கள். உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் இரண்டு மூன்று நாட்களில் அடங்கி விடும். பொங்கி அடங்கி விடும். இந்த போராட்டம் நீடித்த தன்மை உடையது. இதுவொரு டெஸ்ட் மேச் போல தான். நீண்டகாலமாக நின்று ஆட வேண்டியிருக்கும்" என ஏ.ஆர்.வீ.லோசன் தெரிவிக்கின்றார்.
ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கும் ஒரு நடைமுறையே இந்த போராட்டம் மகிழ்ச்சியாக நடத்தப்படுவதற்கான காரணம் என போராட்டத்தில் கலந்துக்கொண்ட ரூபன் பிலிப் தெரிவிக்கின்றார்.
''நம்ம மக்கள் ரொம்ப வித்தியாசமானவங்க. எதுவா இருந்தாலுமே உலகத்துல இருக்க மத்த மக்களோட ஒப்பிடும் போது ஸ்ரீலங்கன்ஸ்க்குனு ஒரு தனித்துவம் இருக்கு. இங்க எல்லாமே ரொம்ப பன்னா. எப்பனிங்க, சந்தோஷமா, மியூசிக் எல்லாம் செய்றாங்க. இது பன் இல்ல. இது அவங்களுக்கு உள்ள இருக்குற கவலை, அவங்களுக்குள்ள இருக்குற எதிர்ப்ப, இலங்கை மாதிரியான ஒரு நாடு. இலங்கையில இருக்கிற ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்குறதுக்கான ஒரு நடைமுறைனு தான் நான் சொல்லுவேன்" என ரூபன் பிலிப் குறிப்பிடுகின்றார்.
நாடு மீட்கப்பட போகின்றது என்ற மகிழ்ச்சியில், இளைஞர் யுவதிகள் மகிழ்ச்சியாக போராடுகின்றார்கள் என நிரோஜினி ரொபட் தெரிவிக்கின்றார்.
''எல்லாருமே நல்லா இருக்கதுக்கு தான் இந்த போராட்டம். ஒரு ஊழலுக்கு எதிராக மொத்த நாடும் எதிர்த்து போராடும் போது, எல்லாருமே ஒத்துழைப்பா தானே இருக்காங்க. யாரும் எதிர்க்க இல்ல. அந்த குடும்பத்தை தவிர, அந்த ஊழலான குடும்பத்தை தவிர மாத்தவங்க எல்லாருமே சேர்ந்து போராடுறாங்க. இதுல முடிவுல வந்து எங்க நாடு மீட்கப்பட போகுது. அது நால இப்படி சந்தோஷமாக போராடுறாங்க" என நிரோஜினி ரொபட் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்