இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் தமிழில் குரல் எழுப்பிப் போராடும் ஒற்றைப் பெண்

ரஷிகா அருள்செல்வம்
படக்குறிப்பு, ரஷிகா அருள்செல்வம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்து வரும் இனம், மொழி கடந்த போராட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் மட்டும் முழக்கங்களை தமிழில் எழுப்புகிறார். பதாகைகளை தமிழில் ஏந்துகிறார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வை கோரியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் கடந்த 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை கடந்த 9 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்த போராட்டத்தில் கடந்த 9 நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து போராட்டங்களை நடத்திய போதிலும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நொடி முதல் ஒரு தமிழ் யுவதி, அனைரவது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

ரஷிகா அருள்செல்வம் என்பது அவரது பெயர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள், காலி முகத்திடலில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் கைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலேயே பதாகைகள் காணப்பட்டன.

ராஜபக்ஷ கேலிச்சித்திரம்.
படக்குறிப்பு, போராட்டத்தில்....

எனினும், ஆயிரக்கணக்காக மக்கள் மத்தியில் தமிழ் மொழியில் பதாகையை ஏந்தியவாறு, முதல் நாளே தனது போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

கவனம் கவர்ந்த தமிழ் முழக்கம்

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழ் மொழியில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஏனையோருக்கும் தமிழ் மொழியில் பதாகைகளை எழுதி கொடுக்கின்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது தமிழ் மொழியில் பதாகைகளை ஏந்திய போராட்டங்களை நடத்தினாலும், முதல் நாளில் இருந்தே இவர் தமிழில் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.

இவ்வாறு தமிழ் மொழியில் மாத்திரம் போராட்டத்தை நடத்தி வரும் ரஷிகா அருள்செல்வம், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''நான் ஏன் இங்க வந்து போராடுறேன் என்றால், நிறைய பேர் நிறைய விசியங்கள சொல்லுவாங்க. விலை ஏறிச்சு. கேஸ் இல்ல. மா இல்ல. என்னை பொறுத்த வரைக்கும்

2009ல இருந்து சில சில விசியங்கள் நடந்துட்டு இருந்துச்சு. தமிழ் ஆட்களுக்காக இருக்கட்டும். கிறிஸ்தவர்களுக்காக இருக்கட்டும். இஸ்லாமியர்களுக்காக இருக்கட்டும். எல்லாருக்கும் இவங்க வந்து நிறைய பிரச்சினைகள உண்டு பண்ணி இருக்காங்க. அதற்கான தீர்வு எனக்கு கட்டாயம் கிடைக்கனும். அப்படின்ற ஒரு நோக்கத்தோட தான் நான் இங்க வந்திருக்கேன். அது மட்டும் இல்லாம சில காலமா கேஸ் தட்டுப்பாடா இருந்துச்சு. சில சில வீடுகள்ல கேஸ் வெடிச்சது. இது எல்லாம் யாருக்கும் ஞாபகம் இருக்குமானு தெரியல. பட் எனக்கு அதுக்கும் ஒரு தீர்வு கட்டாயம் வேண்டும். அதை நினைச்சு தான் நான் இங்க வந்திருக்கேன்" என அவர் கூறுகின்றார்.

தமிழ் மொழியில் ஏன் போராடும் எண்ணம் வந்தது என பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

ரஷிகா அருள்செல்வம்

''என்ட தாய் மொழி தமிழ். என்ட தாய் மொழிய விடக்கூடாது. எல்லாருமே ஒன்னா இருக்கோம். எல்லாரும் ஒன்னுனு தான் நான் நினைக்கிறேன். இருந்தாலுமே... என்ட தாய் மொழி தமிழ். நான் முதல்ல வரும் போது, யாருமே தமிழ் போர்ட் பிடிச்சுட்டு நிக்க இல்ல. சோ எனக்கும், என்ட தோழிக்கும் தோனுச்சு நாங்க தமிழில் ஏதாவது எழுதிட்டு வருவோம்னு. ஏனா எங்கட தாய்மொழி தமிழ். அன்னையில இருந்து, இன்றைக்கு வரையும் தமிழ்ழயே எல்லாத்தையும் எழுதிட்டு வந்து, தமிழில் போராடுறேன்" என பதிலளித்தார்.

அச்சமில்லையா?

தமிழ் மொழியில் எழுதுவது ஒரு காலத்தில் பயமாக இருந்தது. அதையும் மீறி எப்படி தமிழில் எழுதி போராடுறீங்க?

"தமிழ் எப்பயோ இருந்து வந்த மொழி. என்ட தாய் மொழிய மறந்துட்;டு, மத்த ஆட்களுக்காக வாழ்ந்தா அது ஒரு கூனி குறுகி இருக்க மாதிரி. அது எல்லாம் இருக்கக்கூடாது. தமிழன் என்றால், தலை உயர்ந்து நிற்கனும். அது தான் தமிழன். சோ தமிழிலேயே எழுதிட்டு வந்தேன்"

வீட்டில் இருக்கும் பெரியவர்கள், நீங்கள் போராடும் போது என்ன சொல்லுவாங்க?

''ரொம்ப கவனமா இருக்கனும். முன்னுக்கு போக கூடாது. அப்படி ஒரு பயத்த உண்டாக்குனாங்க. ஆனாலும் நான் சொன்னேன், என்னத்தான் இருந்தாலும் நம்ம நாட்டுக்காக கட்டாயம் போராடனும். இப்ப இருக்குற நிலைமை வந்து, எனக்கு பெரிய பாதிப்பை கொடுக்கல. இனிவரும் காலத்துல என்னை அது கட்டாயம் தாக்கும். அது எனக்கு நல்லாவே தெரியும். சில வீடியோ பார்த்தேன். அதுல ஆட்கள் அழுகுறத பார்த்து, என்னோட மனசு உடைஞ்சுட்டு. அடுத்த சந்ததிக்கு நல்ல நாட்டை நாங்க ஒப்படைக்கனும். அது பெரியவர்களாகி எங்கட கடமைன்னு நான் நினைக்கின்றேன்" என பதில் வழங்கினார்.

இனிவரும் காலங்களிலும் தமிழ் மொழியில் போராட்டம் நடந்துவீர்களா?

கட்டாயம். எங்க போனாலும், நான் தமிழை விடமாட்டேன். ஏன்னா அது என்ட தாய்மொழி. நான் அதை அழிய விடமாட்டேன் என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :