இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: “மூன்று ஆண்டுகளாக கண்ணீர் வடிக்காத நாளே இல்லை” – ஒரு தாயின் வேதனை

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து

உலகம் முழுவதும் ஈஸ்டர் தினம் இன்று கொண்டாடப்பட்டாலும், இலங்கைக்கு இன்றைய நாள் ஒரு கறுப்பு நாளாகவே இருந்து வருகின்றது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

அத்துடன், 40 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 45 சிறார்களும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடக்கவுள்ள நிலையில், இன்று வரை தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்களிலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியை பெற்றுத் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே இன்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகின்றது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் தமது குடும்பத்தையே பலிகொடுத்த ஒரு குடும்பத்தை பிபிசி தமிழ் சந்தித்து கலந்துரையாடியது.

கொழும்பு - ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான கனகசபை பிரதாப், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.

புதிய வாகனமொன்றை வாங்கிய பிரதாப், அந்த வாகனத்தை முதலில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு எடுத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சரியான காலை 8.45க்கு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொச்சிக்கடை தாக்குதலை தொடர்ந்தே, ஏனைய இடங்களுக்கும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் 38 வயதான கனகசபை பிரதாப் அவரின் மனைவி எனஷ்டி, ஏழு வயதான மகள் அன்ரினா, ஒரு வயதும், 10 மாதங்களேயான மகள் அப்ரியானோ ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தனது மகனின் குடும்பத்தாரின் உயிரிழப்புக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என பிரதாப்பின் தாய் மேரி வனஜா கோரிக்கை விடுக்கின்றார்.

''அன்றைக்கு தான் கடைசியா என் மகனை பார்த்தேன். இன்னைக்கு நினைச்சாலும் வயிறு பத்தி எரியுது. நாலு பேரும் உடுத்திட்டு இருந்தாங்க. சின்னவல தூக்கி கையில வச்சி இருந்தேன். பெரியவளையும் உடுப்பாட்டி வெளியில வச்சி இருந்தேன். மகன் உடுத்திட்டு இங்கன வந்தாரு. என்கிட்ட சல்லி கேட்டாரு. ஈஸ்டர் அன்றைக்கு, காசு தாங்க அம்மா, வரும் போது கரி எல்லாம் வாங்கிட்டு வாறேனு. அது தான் என் மகன கடைசியா நான் பார்த்தது. அப்படியே போனவரு தான். அதுக்கு பிறகு எனது மகனை காணவே இல்ல."

"மூன்று வருஷமா நான் கண்ணீர் வடிக்காத நாளே இல்ல. எந்த நேரமும் அவர நினைச்சிட்டே இருப்பேன். நியாயம் கிடைக்கனுனு தான் நான் கேட்கின்றேன். செய்ய வேண்டியது எல்லாம் செய்து கொடுத்திருக்கோம். எப்ப எல்லாம் கூப்பிடுறாங்களே அப்ப எல்லாம் போவோம். இதுக்கு சரியான ஒரு நீதி எங்களுக்கு கிடைக்கனும். எத்தனையோ பேர் கண்ணீர் வடிக்கிறாங்க. அவங்க எல்லாருக்கும் நியாயம் கிடைக்கனும். இந்த மூன்று வருஷத்துல நாடே நிம்மதி இல்லாம தான் இருக்கு. இதுக்கு நீதி கிடைக்கனும். இதை செய்தவங்கள கடவுள் காட்டி கொடுக்கனும்" என பிரதாப்பின் தாய் மேரி வனஜா தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :