இலங்கை பொருளாதார நெருக்கடி: "வீட்டில் சீனி கூட இல்லை, புதுவருடம் கொண்டாடுவது எப்படி?"

இந்துராணி
படக்குறிப்பு, இந்துராணி
    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் - சிங்கள சித்திரைப் புது வருடம் இன்று பிறந்திருக்கிறது. நாளாந்த அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளையே ஒப்பேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களில் கணிசமானோருக்கு புது வருடத்தைக் கொண்டாடும் வசதியும், மனநிலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக வருமானம் குறைந்த ஏழைகளின் வீடுகளில் புதுவருடத்தை எதிர்கொள்வதற்கான எந்தவித ஆயத்தங்களையும் அநேகமாகக் காண முடியவில்லை. "வீட்டில் தேநீர் தயாரிப்பதற்குக் கூட இன்றைய தினம் சீனி இல்லை" என்று நேற்றைய தினம் புதன்கிழமை திராய்க்கேணி கிராமத்தில் நம்மிடம் கூறிய இந்துராணி; "இந்த நிலையில் புதுவருடத்தை எப்படிக் கொண்டாடுவது" என்று கேட்கிறார்.

இலங்கையின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தைச் சேர்ந்த இந்துராணிக்கு 52 வயதாகிறது. இவரின் கணவர் கடந்த வருடம் யானையொன்று தாக்கியதில் மரணமடைந்தார். இவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அவர்களில் இருவர் திருமணமாகிச் சென்று விட்டனர். ஏனைய மூன்று பிள்ளைகளுடனும், பல வருடங்களுக்கு முன்னர் மரணித்த தனது அக்காவின் இரண்டு பிள்ளைகளுடனும் ஓலைக் குடிசையொன்றில் இந்துராணி வாழ்கிறார்.

பகல் சோற்றுக்கு வழியில்லாத நிலை

தனது கணவர் பல்கலைக்கழகமொன்றில் சிற்றூழியராகக் கடமையாற்றியதாகக் கூறும் இந்துராணி, அவரின் மரணத்தின் பின்னர் குடும்பத்துக்கான வருமானம் இல்லாமல் போய்விட்டது என்கிறார். "கடந்த நான்கு மாதங்களாக, கடைசி மகள் தற்காலிகமாக வங்கியொன்றில் சிற்றூழியராக வேலை செய்து வருகின்றார். அதில் கிடைக்கும் குறைந்தளவு வருமானத்தை வைத்தே எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம்" எனவும் தெரிவித்தார்.

சாதாரண காலத்திலேயே குடும்பத்தின் நாளாந்த தேவைகளை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படும் தங்களுக்கு, நாட்டில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புகளும் பொருட்களுக்கான தட்டுப்பாடும் தாங்க முடியாத கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

"நாங்கள் பால்தேநீர் குடித்து பல மாதங்களாகின்றன. பால்மாவுக்கான விலை அதிகரித்த பின்னர் - நாங்கள் அதை வாங்குவதில்லை" என்கிறார் அவர். கடந்த வருடம் 950 ரூபாவுக்கு கிடைத்த ஒரு கிலோகிராம் பால்மா, தற்போது 1950 ரூபாவுக்கு விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்துராணி

குடும்பத்தின் வருமானத்துக்காக இந்துராணி நெல்வயல்களில் களை பிடுங்கும் கூலி வேலையிலும் ஈடுபடுவதாகக் கூறுகின்றார். நாளொன்றுக்கு தமது குடும்பத்துக்குத் தேவையான சாப்பாடு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு 2 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாகக் கூறும் அவர்; அந்தளவு வருமானம் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறார்.

"தற்போதைய கஷ்டமான சூழ்நிலையில் பகல் சோறு இல்லாததால், பண் சாப்பிட்டு வயிற்றை நிறைத்துமுள்ளோம். இறைச்சி சாப்பிட்டு மூன்று, நான்கு மாதங்களாகின்றன. இறைச்சி விற்கும் விலைக்கு எப்படி வாங்குவது" என்று கூறும் இந்துராணி; "இதற்குள் புதுவருடத்துக்கு புத்தாடை எடுப்பது எப்படி" என்கிறார்.

இந்துராணியின் குடும்பத்தில் இன்றைய புதுவருடத்தை கொண்டாடும் நிலை இல்லை. அவர்களின் குடும்பத்தில் யாருக்கும் புத்தாடை எடுக்கவில்லை.

திராய்க்கேணி கிராமத்திலுள்ள 126 குடும்பங்களில், தமிழர் குடும்பங்கள் 102. இவற்றில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட தமிழர் குடும்பங்கள் 26 உள்ளதாக, கிராமசேவை உத்தியோகத்தர் எம்.எப். நதீர் தெரிவிக்கின்றார்.

வாழ்வாதாரத்துக்கான வருமானங்களைப் பெற்றுக் கொள்வதிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியையை எதிர்கொள்வதிலும் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்குகின்றன.

எட்டாத விலையில் புத்தாடை

அடுத்த வேளை உணவைப் பெற்றுக் கொள்வதே, இன்றைய காலகட்டத்தில் இந்துராணி போன்றோரின் குடும்பங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளபோது, புதுவருடத்தினைக் கொண்டாடுவதும், புத்தாடைகளை வாங்குவதும் முடியாத காரியமாகவே உள்ளது.

எட்டாத விலையில் புத்தாடை

இன்னொருபுறம் ஆடைகளுக்கான விலைகளும் தற்போது இலங்கையில் பல மடங்கு அதிகரித்துள்ளன.

அண்மையில் 367 பொருட்களுக்கான இறுக்குமதிக் கட்டுப்பாடுகளை அரசு விதித்தமை காரணமாகவும், டாலர் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையினாலும் உள்ளுர் மற்றும் இறக்குமதி ஆடைகளுக்கான விலைகள் 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, அக்கரைப்பற்றிலுள்ள றஸ்பாஸ் ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஏ.கே. றிஜாஸ் அஹமட் கூறுகின்றார்.

ஏ.கே. றிஜாஸ் அஹமட்
படக்குறிப்பு, ஏ.கே. றிஜாஸ் அஹமட்

"கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான ஆடை விற்பனையாளர்கள் இந்தியாவிலிருந்தும் அதற்கு அடுத்ததாக சீனாவிலிருந்துமே ஆடைகளை இறக்குமதி செய்கின்றனர். முன்னர் இந்திய ரூபாய் ஒன்றின் இலங்கை பெறுமதி 2 ரூபா 60 சதமாக இருந்தது. இப்போது 5 ரூபாவை தாண்டி விட்டது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியும் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதால், ஆடைகளுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன" என்கிறார் அவர்.

இதனால் ஆண்கள், பெண்களுக்கான அனைத்து வகையான ஆடைகளுக்கும் விலைகள் அதிகரித்துள்ளனன எனக் குறிப்பிட்ட றிஜாஸ் அஹமட்; 450 ரூபாவுக்கு விற்கப்பட்ட உள்ளாடையொன்றின் விலை தற்போது 750 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், 2000 ரூபாவுக்கு தாங்கள் விற்பனை செய்த, இந்திய கைத்தறி சாரன் ஒன்றினை தற்போது 5 ஆயிரம் ரூபாவுக்கு விற்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்று 2000 ரூபாவுக்கு விற்கப்பட்ட டெனிம் நீளக்காற்சட்டை ஒன்றினை தற்போது 3500 ரூபாவுக்கு விற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலவரம் காரணமாக தற்போது இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடை வகைகளை - மக்கள் அதிகளவில் தேர்வு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ஆடைகளைக் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் றிஜாஸ் அஹமட் கூறினார்.

நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களில் ஒரு தொகையானோர், சித்திரைப் புதுவருடத்தைக் கொண்டாடுவதில்லை எனக் கூறிக் கொண்டு, தொடர்ந்தும் தமது போராட்டங்களை முன்னெடுத்து வரும் அதேவேளை, மற்றொரு புறமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியால் புதுவருடத்தைக் கொண்டாட முடியாமல் இந்துராணி போன்றோரின் குடும்பங்கள் திண்டாடுவதையும் காண முடிகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, தீவிரமான அரசியல் பிரச்சினையாகவும் கிளை விட்டுள்ள இன்றைய கால கட்டத்தில், ஒரு கோப்பைத் தேநீரைக் கூட, இனிப்பாக அருந்த முடியாத நாளாகவே, இந்துராணி குடும்பத்துக்கு இன்றைய புது வருடம் பிறந்திருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :