இலங்கை திவாலாகிறதா?: கடன் பிரச்னைக்கு தீர்வு என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் கட்ட முடியாது என்று அறிவித்திருக்கிறது இலங்கை. இப்படிக் கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது?
பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது.
சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன்களைப் பெறுவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.
மறுபுறம் அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் கடனைக் கட்ட இயலாது என அரசு அறிவித்திருப்பதால் சிக்கல் உருவாகியிருக்கிறது.
கடன் தவணை தவறுவது என்பது என்ன?
சர்வதேச செலாவணி நிதியத்தின் விளக்கப்படி, ஒரு கடனின் தவணை அல்லது வட்டியை உறுதியளித்தபடி குறிப்பிட்ட கெடுவுக்குள் செலுத்தத் தவறுவதே கடன் தவணை தவறுவதாகும்.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அல்லது கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பாத நிலையில் இது நடக்கும். 1960களுக்குப் பிறகு 140-க்கும் மேற்பட்ட நாடுகள் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறியிருக்கின்றன.
அர்ஜென்டீனா, லெபனான், எக்வடோர், ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்தன.
இலங்கை எவ்வளவு கடனைச் செலுத்த வேண்டும்?
இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இருக்கிறது. இதில் சுமார் 35 பில்லியன் டாலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது இலங்கை.
இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கையிடம் இப்போது 1.93 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
அடுத்த வாரமே 78 மில்லியன் டாலர் கடன் தவணையைச் செலுத்துவதற்கான 'கெடு' இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தாமாக கடன்களுக்கான கெடு காலாவதியாவதைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பை இலங்கையின் மத்திய வங்கித் தலைவர் வெளியிட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
விலைவாசி இன்னும் உயருமா?
இலங்கையில் பொருள்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது. தற்போதைய சூழலில் ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320-க்கும் அதிகம். அதாவது ஒரு டாலரை வாங்க வேண்டுமெனில் 320 இலங்கை ரூபாய் கொடுத்தாக வேண்டும்.
இந்த மதிப்பு இன்னும் சரிவடைவதற்கான வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். அதாவது ஒரு டாலருக்கு 400 ரூபாய் வரை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
அதனால் பொருள்களின் விலை இன்னும் உயரக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்னவாகும்?
கடன்களைத் திருப்பிச் செலுத்தாதபோது 'கடன் தர மதிப்பீடு' வழங்கும் அமைப்புகள் இலங்கையின் தரமதிப்பைக் குறைக்கும். இதனால் புதிய கடன்கள் வாங்குவது பாதிக்கப்படும் அல்லது கூடுதல் வட்டி செலுத்த நேரிடலாம். நாட்டுக்குள் முதலீடு வருவது பாதிக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு.
"கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, இலங்கைக்குள் உதவிகள் வராது. வங்கித் துறை திவால் அடையலாம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக ஸ்தம்பித்து, நாடு பொருளாதார மந்த நிலைக்குச் செல்லலாம்." என்கிறார் விஜேசந்திரன்.
இலங்கை ரூபாய் செல்லாததாகி விடுமா?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதனால் முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.
ஆனால் மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்கிறார் பொருளாதாரப் பேராசிரியர் விஜேசந்திரன்.
இலங்கை கடன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தைத்தான் இப்போது முழுமையாக நம்பியிருக்கிறது இலங்கை. ஏற்கெனவே அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அந்த அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடக்க இருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன்களை வழங்கிவிடாது. 2019-ஆம் ஆண்டில் கோட்டாபய ஆட்சிக்கு வந்தவுடன் வரிகள் குறைக்கப்பட்டன. ஐஎம்எஃப்-இன் முதல் நிபந்தனையே இந்த வரிகளை உயர்த்துவதாகத்தான் இருக்கும்.
இது தவிர பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தப்படும்.
இத்தனைக்குப் பிறகும்கூட "இலங்கை ஓரளவுதான் மீள முடியும்." என்கிறார் விஜேசந்திரன்.
இந்தியாவும் சீனாவும் இலங்கையை மீட்குமா?
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் கடன்களை வழங்குகின்றன.
ஜப்பான் கணிசமான கடன்களை வழங்கியிருக்கிறது. வங்கதேசத்திடம் இருந்தும் இலங்கை கடன் பெற்றிருக்கிறது.
இந்தியாவும் சீனாவும் மேலும் கடன் உதவிகளை வழங்கினாலும் பொருளாதாரத்தை பழைய நிலைமைக்கு மீட்பதில் ஓரளவே பயனளிக்கும் என்று விஜேசந்திரன் கூறுகிறார்.
"இந்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனை வழங்கும் போது, அது பல்வேறு நிபந்தனைகளை விடுத்தே கடனை வழங்கும். சீனாவும் இந்தியாவும் கடன் வழங்கும் போது, இலங்கை மேலும் இக்கட்டான நிலைக்குத்தான் போகும். சீனாவும் இந்தியாவும் முரண்பட்ட துருவங்கள். முரண்பட்ட துருவங்களிடமிருந்து கடனை வாங்கும் போது இந்தியா விதிக்கின்ற நிபந்தனைகளையும் சீனா விதிக்கின்ற நிபந்தனைகளையும் நிறைவேற்றும் போது இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார குழிக்குத் தள்ளப்படும். மீளவே முடியாத நிலைமை ஏற்படும்."
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












