இலங்கையில் மருத்துவ அவசர நிலை? அரசு மருத்துவர்கள் சங்கம் கூறுவது என்ன?

இலங்கை மக்கள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் சுகாதாரத்துறையினரின் போராட்டம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், மக்களின் வாழ்க்கை அபாயத்தை நோக்கி நாளாந்தம் நகர்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதுடன், தமது வாழ்வாதாரத்தையும் உரிய வகையில் முன்னோக்கி கொண்ட செல்ல முடியாத ஒரு துர்பாக்கி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கையிருப்பிலுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலைமை தற்போது பாரதூரத்தை எட்டியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

டாக்டர் வாசன் ரத்னசிங்கம்

பட மூலாதாரம், Dr.Vasan Rathnasingam

படக்குறிப்பு, டாக்டர் வாசன் ரத்னசிங்கம்

இந்த பின்னணியில், நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்து வகைகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் சுகாதார அவசர நிலைமை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

சுகாதார அவசர நிலை ஏன் ?

இது குறித்து, பிபிசி தமிழ், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான டாக்டர் வாசன் ரத்னசிங்கத்திடம் வினவியது.

Presentational grey line
Presentational grey line

கேள்வி :- இலங்கையில் சுகாதார அவசர நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறதே. என்ன நிலைமை தற்போது?

பதில் :- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில், நாங்கள் நாட்டிலே பொதுமக்களுடைய சுகாதாரம் சம்பந்தமான கடந்த காலங்களிலே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கின்றோம். இந்த விதத்திலே தற்போது நாட்டிலே பல அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. அண்மையில் மருந்துகள் உற்பத்தி, விநியோகங்கள் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்னவின் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட விடயம் என்னவெனில், ''அதாவது மருத்துவ விநியோக பகுதியிலே கிட்டத்தட்ட ஐந்து உயிர்பான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.''

அதேபோன்று, 180திற்கும் அதிகமான அத்தியாவசிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது. இந்த நிலையிலே நாங்கள் எங்களுடைய கிளை சங்கங்களின் ஊடாக இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளிலே மருந்துகளின் தட்டுப்பாடுகள் குறித்து நாங்கள் அறிந்திருந்தோம். இதன்மூலம் எங்களுக்கு கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் நாங்கள் தற்போது பல அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற வகையிலே, அத்தோடு இருக்கின்ற மருந்துகளும் ஓரிரு வாரங்களில் தீர்ந்து போகக்கூடிய நிலைமை காணப்படுகின்றமையினால், இந்த நிலையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில், சுகாதார துறையில் ஏற்பட்ட அவசர நிலையாக பார்க்கிறோம்.

இலங்கை மக்கள் போராட்டம்

பட மூலாதாரம், EPA

அத்தோடு, சுகாதார செயலாளருக்கு இந்த நிலையை உத்தியோகப்பூர்வமாக இது சுகாதார துறையில் ஏற்பட்டிருக்கின்ற அவசர நிலையாக அறிவிக்கும் படி நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். ஆகவே, இந்த நிலை தொடருமானால், இன்னும் வைத்தியசாலைகளிலே மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, அதேபோன்று, சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மற்றைய மூலப் பொருட்களுடைய பற்றாக்குறை இல்லாமல் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் சுகாதார கட்டமைப்பு யாவும் செயலிழக்கக்கூடிய சாத்தியகூறுகள் அதிகமாக இருக்கின்றது. ஆகவே இந்த நிலையிலே இதை தவிர்க்கும் பொருட்டும், இதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டும் இதை ஒரு அவசர நிலையாக பிரகடனப்படுத்தியிருக்கின்றோம்.

சுகாதார அமைச்சகத்தின் பதில் என்ன ?

கேள்வி :- சுகாதார செயலாளருக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக கூறியிருந்தீர்கள். அவரது பதில் என்ன?

பதில் :- சுகாதார அமைச்சிலிருந்து இதுவரை எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால் மருந்துகள் உற்பத்தி, மருந்து விநியோக இராஜாங்க அமைச்சினுடைய செயலாளர், தங்களுக்கு பல்வேறுப்பட்ட மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அதாவது முற்று முழுதாக இல்லை என்ற அறிவிப்பையும் விடுத்திருக்கின்றார். ஆகவே இந்த நிலையை பார்க்கும் போது பல்வேறுப்பட்ட வைத்தியசாலைகளில் இந்த மருந்து பற்றாக்குறை இருக்குமாக இருந்தால், சில வைத்தியசாலைகளில் இந்த மருந்துகள் வேறு அலகுகளில் அதிகமாக இருக்கும் போது எவ்வாறு மீள ஒழுங்குப்படுத்தி அந்த மருந்துகளை தங்கள் மிகவும் வினைத்திறனாக நோயாளிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக நாங்கள் ஒரு செயற்பாட்டு குழுவொன்றை அமைத்திருக்கின்றோம்.

ஆகவே அந்த குழுவின் ஊடாக தற்போதுள்ள நிலைமையை நாங்கள் ஓரளவுக்கு சமாளிக்கும் பொருட்டு செயற்பட்டு இருக்கின்றோம். ஆனால், தற்போது பல்வேறு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நாங்கள் சமாளிக்க முடியாது. அத்தோடு இருக்கின்ற மருந்துகளும் ஓரிரு வாரங்களுக்கே போதுமானதாக இருக்கின்றது. வைத்தியசாலைகளில் எரிபொருள் பிரச்சினை காரணமாக நோயாளர்களை காவிச் செல்வது பற்றிய பிரச்சினைகள் காணப்படுகின்றது.

அதேபோன்று, மின் தடை காரணமாக சத்திர சிகிச்சை கூடங்கள் செயற்பட முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று, மருத்துவ உபகரணங்களை செயற்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. பல்வேறுப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளில் செயற்கையான மின்குமிழ்களில், அதேபோன்று டோச் லையிட்களில் நாங்கள் இந்த சத்திர சிகிச்சைகளையோ சிறு சிறு சிகிச்சைகளையோ செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது

இலங்கை மக்கள் போராட்டம்

ஆகவே இவ்வாறான நிலையிலே நாங்கள் இதனை சுகாதார துறையில் ஏற்பட்டிருக்கின்ற அவசர நிலையாகவே பார்க்கிறோம். நாட்டிலே தற்போது பொதுமக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. சுகாதாரம் என்பது இலங்கையிலே இலவசமாக கிடைக்கும் ஒன்று. கிடைக்க வேண்டியது ஒன்று. ஆனால், தற்போது அத்தியாவசிய மருந்து பொருட்களின் பற்றாக்குறையினால், மக்கள் உயிர் வாழும், மக்களுக்கான சுகாதாரம் கிடைக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.

உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலையை உணர்ந்து அரசாங்கம் சரியான விதத்தில் செயற்படுத்த வேண்டும். குறிப்பாக மற்றைய துறைக்கு ஒதுக்குகின்ற நிதியை குறைத்து, சுகாதார துறைக்கு உரிய விதத்தில் இந்த நிதி ஒதுக்கீடுகளை செய்து, மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வைத்தியர்கள் என்ற வகையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் கோரிக்கை விடுக்கிறோம்.

அன்னிய செலாவணி பற்றாக்குறை

இலங்கை மக்கள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி :- மருந்து பொருட்கள் தொடர்பில் கதைத்திருந்தோம். மருந்து பொருட்களுக்கும் அப்பாற் சென்று கருவிகள், ஏனைய உபகரணங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதன் நிலைமை தற்போது எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் :- அதாவது தற்போது இருக்கின்ற உபகரணங்கள், அதிலே இருக்கின்ற பகுதிகள் பழுதடையும் போது அவற்றை மாற்றுவது, அதே போன்று அதை மீள சேவைக்கு எவ்வாறு மீள புதுப்பிப்பது போன்ற விடயங்கள் சம்பந்தமாக பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே நாட்டிலே மத்திய வங்கியிலே இருக்கின்ற டாலர் பற்றாக்குறையினால், அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் இவ்வாறான சகல செயற்பாடுகளும் ஸ்தம்பித்துள்ளன.

குறிப்பாக வரவழைக்கப்பட்ட பல ஆர்டர்கள் தடைப்பட்டிருக்கின்றன. ஆகவே இனிவரும் காலங்களில் இந்த உபகரணங்கள் சரியான விதத்தில் செயற்படாவிட்டால், அதேபோன்று புதிய உபகரணங்களை நாங்கள் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால், அதிலே பாரிய தடைகள் ஏற்படும்.

ஆகவே இந்த பொருளாதார பிரச்சினையானது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். நாட்டிலே இருக்கக்கூடிய நிதியை சரியாக முகாமைத்துவம் செய்யாத படியால்தான் நாங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆகவே தற்போது கூட சுகாதார துறைக்கு சரியாக முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது.

தனியார் மருத்தகங்களிலும் பிரச்னை

மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி :- அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கையில் இலவசமாக பெரும்பாலும் கிடைக்கும். அதேபோன்று, அதை தனியார் துறையில் இறக்குமதி செய்து, மருந்தகங்களில் விற்பனை செய்யக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. தற்போது அரச வைத்தியசாலைகளில் அவ்வாறான மருந்துகள் கிடைக்காதபட்சத்தில், வெளியில் தனியார் துறையிடம் அந்த மருந்துகள் காணப்படுகின்றனவா?

பதில் :- தனியார் துறையில் சில சில மருந்துகள் காணப்படுகின்றன. அவற்றை நாங்கள் உள்ளூர் கொள்முதல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இருந்த பொழுதிலும், இந்த அந்நிய செலாவணி பிரச்சினையானது, ஒட்டு மொத்த நாட்டிற்கே பிரச்சினையாக இருக்கின்றது. ஆகவே தனியார் துறையிலும் இந்த மருந்துகளை வரவழைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. ஏனென்று சொன்னால், ஒரு நாட்டிலே எந்தவொரு கொள்வனவையும் அதேபோன்று எந்தளவு செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது அரச துறைக்கு தான் முதலாவதாக இருக்கும். அரச துறைக்கு பிற்பாடு, தனியார் துறைக்கு அது செல்லும்.

ஆகவே இந்த நிலையிலே இலங்கையில் கூட அரச துறையில் இவ்வாறு தட்டுப்பாடு இருக்கும் போது, தனியார் துறையிலும் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும். ஆகவே அங்கேயும் இறக்குமதி செய்யப்பட்ட பல மருந்துகள் இன்னும் வரவழைக்கப்படவில்லை. குறிப்பாக இந்தியாவில் இருந்து கடனுதவி மூலம் இந்த மருந்து பொருட்கள் வரவிருப்பதாகவும் கூறுகிறார்.

ஆனால், இவை எந்த அளவில் விரைவில் இந்த மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது கேள்விக்குரியாகதான் இருக்கின்றது. ஆகவே தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களுக்கே இந்த மருந்து பொருட்களுக்கான இருப்பு காணப்படுகின்றது. இதனால், இந்த மருந்து பொருட்களின் பற்றாக்குறையினால், முழு சுகாதார துறையும் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.

மருந்துகள் விலை அதிகரிப்பு

கேள்வி :- தனியார் துறையிடம் காணப்படுகின்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை தற்போது எவ்வாறு அதிகரித்திருக்கிறது?

பதில் :- அதாவது அண்மையில் இந்த அரசாங்கமானது, நாட்டிலே இருக்கின்ற பணவீக்கம் காரணமாக பல்வேறுப்பட்ட பொருட்களுக்கான விலைகளை அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று பல்வேறுப்பட்ட சேவைகளுக்கான விலையையும் அதிகரித்திருக்கின்றது. இந்த நிலையிலே இந்த மருந்து பொருட்களுக்கான விலையை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

ஆகவே இந்த 30 சதவீத அதிகரிப்பானது ஒரு பாரிய அதிகரிப்பு. ஏனென்று சொன்னால், மக்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையிலே மருந்து பொருட்களுக்கும் இந்த விலைவாசி அதிகரிக்கும் போது அவர்களுக்கு அடிமேல் அடியாகதான் இருக்கின்றது. ஆகவே இந்த நிலையை பொதுமக்கள் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் மரணிக்கும் நிலை

மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி :- டாக்டர், நோயாளர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :- அதாவது இலங்கையிலே சுகாதார துறையானது இலவச சுகாதார சேவையாக இருக்கிறது. இலங்கையிலே இது வரை ஒரு குறைந்த செலவிலே நாங்கள் அதி உச்ச சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். குறிப்பாக தெற்காசிய வலயத்திலே இருக்கின்ற நாடுகளை ஒப்பிடும் போது, எங்களுடைய சுகாதார சேவை மேம்பட்டது. அமெரிக்காவிலே ஒரு நபருக்கு கிட்டத்தட்ட 5000 டாலர் அளவு சுகாதார துறையில் செலவிடும் போது, இலங்கையிலே 200 டாலருக்கும் குறைந்த அளவிலேயே ஒரு நபர் செலவிடும் நிலை இருக்கிறது.

அத்தோடு, சுகாதார துறையினுடைய வினைத்திறனானது, அதாவது மரண வீதம், சிசு மரண வீதம், அதேபோன்று கர்ப்பணிகளின் மரண வீதம் எல்லாமே நாங்கள் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக எங்களுடைய சுகாதாரத்தை நாங்கள் முன்னோக்க வைத்திருக்கக்கூடிய நிலைக்கு காணப்பட்டது. இந்த நிலையானது அதிகமாக பாதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது.

ஏனென்று சொன்னால், இவ்வாறு மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் போது வைத்தியர்கள், அதேபோன்று மற்றைய சுகாதார ஊழியர்கள், மிகவும் வினைத்திறனாக செயற்படும் போதும், நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்க முடிகின்றது. சில மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகளாகவே காணப்படுகின்றன. இந்த மருந்தை கொடுத்தால் தான் அந்த நோயாளி தப்பி பிழைப்பார். இவ்வாறு இருக்கின்ற போது, அந்த மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

சில மருந்துகள் அவர்களுக்கு தொடர்ச்சியாக நீண்ட காலமாக பாவிக்கப்படுகின்ற மருந்துகளாக காணப்படுகின்றது. இவ்வாறு நீண்ட காலமாக பாவிக்கப்படும் போது அந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது அந்த நோயினுடைய நலம் பாதிக்கப்படுகிறது. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திலே அந்த நோயினால், அவர்கள் மரணிக்கக்கூடிய சாத்தியகூறுகள் இருக்கின்றது. ஆகவே இந்த நோய் ஏற்படும் போது உடனடியாக பொதுமக்கள் மரணிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் மரணிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த நிலையை தவிர்க்க வேண்டும். சுகாதார துறையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக பலர் மரணிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

நிலைமை கையை மீறி போகலாம்

கேள்வி :- இதுவரை பதிவான தகவல்களின் பிரகாரம், மின்சார தடை காரணமாக, உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமை காரணமாக ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டதா?

பதில் :- தற்போதுள்ள சூழ்நிலையில், வைத்தியசாலைகளிலே சில உயிர்பான மருந்துகள் காணப்படாத விட்டாலும், அண்மையில் இருக்கின்ற பெரிய வைத்திசாலைகளில் இந்த மருந்துகள் காணப்படுகின்றன. ஆகவே நோயாளிகளை அங்கு அழைத்து செல்லும் போது அதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. அதற்காகதான் நான் கூறியிருந்தேன்.

நாங்கள் மருத்துவர்கள் என்ற ரீதியிலே முன்னுரிமை பட்டியலின் அடிப்படையிலே, இந்த மருந்துகளுடைய மீள் பரம்பலை செய்து, நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த சூழ்நிலையை சமாளித்து வருகின்றோம். ஆனால், இந்த மருந்து பொருட்கள் இல்லாமல் செல்லும் போது, இந்த சூழல் எங்களுடைய கைகளை மீறி போய் விடும். ஆகவே தற்போது இவற்றை நாங்கள் சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், சுகாதார துறையில் அவசர நிலை நிலவுவதாக கூறியுள்ளோம். எனினும், இனிவரும் காலங்களில் இந்த நிலை ஏற்படலாம்.

சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை வேண்டும்

மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கம்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி :- இந்த அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் நோயாளர்களும், வைத்தியர்களுமாகிய நீங்களும் எவ்வாறான சவால்களை எதிர்நோக்குகிறீர்கள். இதை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்கிறீர்கள்.?

பதில் :- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும், எங்களுடைய கிளை சங்கங்கள் இருக்கின்றன. ஒரு செயற்குழுவை அமைத்திருக்கிறோம். குறிப்பாக மற்றைய சுகாதார ஊழியர்களுடன் இணைந்து அதேபோன்று வைத்தியசாலை அபிவிருத்தி சங்கங்கள், பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களுடன் சேர்ந்து நாங்கள் ஒரு குழுவை அமைத்திருக்கிறோம்.

அந்த குழுவின் மூலம் தற்போதுள்ள மருந்து தட்டுப்பாட்டை எவ்வாறு தீர்க்கப்பட முடியும். குறிப்பாக இருக்கின்ற மருந்துகளை எவ்வாறு வினைத்திறனாக நோயாளிகளை முன்னுரிமைப்படுத்தி எவ்வாறு செயற்படுத்த முடியும். அதேபோன்று, நாங்கள் எவ்வாறு மருந்துகளை வரவழைத்துக்கொள்ள முடியும். இது சம்பந்தமாக நாங்கள் எவ்வாறு வெளிநாடுகளில் இருந்தோ அல்லது மற்றைய சுகாதார அமைப்புக்களிடமிருந்தோ எவ்வாறு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க காத்திருக்கின்றோம்.

இந்த திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். எனினும், அந்நிய செலாவணி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இது தற்காலிக பிரச்சினை இல்லாமல், நீண்டகால பிரச்சினையாக மாறிவிடும். இது உடனடி பிரச்சினை இல்லாமல், தொடர் பிரச்சினையாக தொடர வேண்டி வரும். நாட்டிலே இருக்கின்ற பொருளாதார நெருக்கடி சமாளிக்கப்பட வேண்டும். சுகாதார துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.

மாற்று திட்டங்கள் உள்ளனவா?

மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி : பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்து வருகின்றன. அப்படியான ஒரு சூழ்நிலையில், நீங்கள் திட்டத்தை வகுக்கிறீர்கள். இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் தோல்வி அடைந்தால், அதற்கான மாற்று திட்டங்கள் ஏதாவது இருக்கின்றதா?

பதில் :- அதாவது இதற்கான மாற்று திட்டங்களாக நாங்கள் நேரடியாக உலக சுகாதார அமைப்பிடமோ, அதேபோன்று யுனிசெப் போன்ற உலக சுகாதார அமைப்புக்களுடன் நாங்கள் கை நீட்ட வேண்டிய தேவைதான் வரும். அவர்களின் ஊடாக உதவிகளை பெற்று, இந்த அத்தியாவசிய மருந்து பொருட்களை பெற்று, சுகாதாரத் துறைக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ச்சி அடைந்த நாடுகள் குறைந்த அளவு இந்த சுகாதார தேவையை வினைத்திறனாக கொண்டு செல்வதற்கும், மக்;களின் உயிர்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் மற்றைய நாடுகள் முன்வர வேண்டும்.

கேள்வி :- இந்த நிலைமை தொடர்ந்தால், இலங்கையில் இலவச மருந்துவம் என்பது கேள்விக்குறியாகுமா?

பதில் :- நிச்சயமாக... அதாவது பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் போது, எந்தவொரு இலவச சேவையையும் மிகவும் வினைத்திறனாக நடத்தி செல்ல முடியாத நிலை தான் ஏற்படும். இந்த நிலையில், இலவச சுகாதார சேவையும் இல்லாது செய்யக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. இந்த நிலையை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.

கேள்வி :- சுகாதார துறையில் இறுதியில் இலங்கைக்கு என்ன நடக்கும்?

பதில் :- அதை நாங்கள் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதாவது இது எவ்வாறு செல்லப் போகின்றது என்பதை நாங்கள் எதிர்வு கூற முடியாத நிலையில் தான் தத்தளித்துக்கொண்டிருக்கின்றோம்.

காணொளிக் குறிப்பு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ராமநாதபுரம் மீனவப் பெண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: