இலங்கைத் தமிழர் திருச்சி சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் வளர்த்து விநியோகம். எப்படி செய்கிறார் ?

பட மூலாதாரம், Mahendran
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் மரக்கன்றுகள் வளர்த்தும் விதைகளை சேகரித்தும் அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கைத் தமிழர்கள் 108 பேர் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனேசியா உட்பட வெளி நாட்டினர் என மொத்தம் 148 பேர் தற்போது உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, செல்போன் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் மகேந்திரன் என்பவரும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளார். சுமார் 8 ஆண்டுகளாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மகேந்திரன், மரக் கன்றுகளை வளர்த்தும், மர விதைகளை சேகரித்தும் தன்னார்வ அமைப்புகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடம் வழங்கி வருகிறார்.
தன்னார்வ அமைப்புகளிடம் ஒப்படைப்பு

பட மூலாதாரம், Getty Images
இதன்படி கடந்த 2019ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்பிடம் 6 ஆயிரம் மரக் கன்றுகள், 5 ஆயிரம் விதைகளை வழங்கினார். தொடர்ந்து விதைகளை சேகரித்தும் மரக்கன்றுகளை வளர்த்தும் வரும் அவர், அண்மையில், புங்கன், அத்தி, மா, புளியமரம், கொய்யா, வேம்பு, பாதாம் உள்ளிட்ட 1,500 மரக்கன்றுகளை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள புங்கன் மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளையும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் ஜமுனாராணி, காவல் உதவி ஆணையர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் திருச்சி தண்ணீர் சுற்றுச்சூழல் அமைப்பினரிடம் வழங்கினார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விநியோகம்
மரக்கன்றுகளையும் விதைகளையும் பெற்றுக் கொண்ட பின்னர், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''சிறப்பு முகாமில் உள்ள மகேந்திரன் இரண்டாவது முறையாக மரக் கன்றுகளை எங்களிடம் வழங்கியுள்ளார். இதில், பெருமளவு குளிர்ச்சி தரும் புங்கன் மரக்கன்றுகளாக உள்ளன. இயற்கை மற்றும் சூழல் மீதான அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும், வகையில், கடந்த முறை மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், மரக் கன்றுகளை வளர்க்கும் பைகளை வழங்கினோம். அவற்றிலும் பொருட்கள் வாங்கி வரும் பிளாஸ்டிக் பைகளில் செடிகளை வளர்த்துள்ளார்.
மரக் கன்றுகளை முடிந்த வரை வளர்க்கும் அவர், விதைகளையும் சேகரித்து வழங்கியுள்ளார். இந்த விதைகளைக் கொண்டு விதைப் பந்துகளை உருவாக்க உள்ளோம். தற்போது வழங்கியுள்ள மரக்கன்றுகளை கல்லூரி, பள்ளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக கொடுக்க உள்ளோம்.'' என்று நீலமேகம் தெரிவித்தார்.
கஜா புயல் சேதத்தை ஈடுகட்டும் முயற்சியாக

பட மூலாதாரம், Mahendran
சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் தான் உருவாக்கிய மரக்கன்றுகள் பல்வேறு இடங்களில் நடப்படுகின்றன. குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழும் தனக்கு இது மட்டுமே ஆறுதலாக இருக்கிறது என்கிறார் மகேந்திரன்.
அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், 'கஜா புயலினால் பெருமளவு மரங்கள் விழுந்தன. இதை ஈடு செய்ய என்னால் இயன்ற பணிகளை செய்யலாம் என்று முயற்சிக்கிறேன். சிறப்பு முகாமில் இருக்கும் எனது நேரத்தை மரக் கன்றுகள் வளர்க்கும் பணியில் செலவிடுகிறேன்.
என்னை சந்திக்க வருவோர் அளிக்கக்கூடிய பழங்களிலுள்ள விதைகள், முகாம் வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழும் விதைகளை சேகரித்து மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறேன். இதை அதிகாரிகள் வழியாக பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறேன்.
தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக் கன்றுகளும் சுமார் 5 லட்சம் விதைகளையும் கொடுத்துள்ளேன். சிறப்பு முகாமில் இருந்து விடுதலை ஆகிய பிறகும் இந்த பணிகளைத் தொடர்வேன்,'' என்கிறார்.
வழக்கு முடிந்தும் விடுதலை இல்லை
அதேநேரத்தில் ''என் மீதான வழக்கு முடிந்தும் தன்னை விடுதலை செய்யவில்லை. இதனால் 8 ஆண்டுகளாக சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறப்பு முகாமிலேயே அடைத்து வைத்துள்ளனர். உறவினர், குடும்பத்தினரை காண முடியாமல் தவித்து வருகிறேன்.
பல முறை அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை. ஆகையால், என்னுடைய மரக்கன்றுகளாவது வெளியில் வளர்ந்து சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்.'' என்கிறார் மகேந்திரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













